India

Uganda

United Kingdom

Malaysia

13. போடா...போடா...

செவ்வாய், ஜனவரி 31, 2006


உகாண்டவைப் பற்றிச் சொல்லும் போது, அவர்களின் தனித்துவமான போக்குவரத்து சாதனத்தைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. நம்மூரில் ஆட்டோக்கள் மாதிரி இவை இங்கே பயன்படுத்தப்படுகின்றன. பெயர்: போடா போடா, பெயரைக் கேட்டால் திட்டுகிறானே என்று பார்க்காதீர்கள். பெயரே அதுதான். Boda..Boda...

உகாண்டாவில், அரசுக்கென்று சொந்தமாக பேரூந்துக் கழகமோ, விமானக் கம்பெனியோ கிடையாது...முன்னாடி இருந்ததாமாம். யார் கண் பட்டதோ தெரியவில்லை இப்போது இரயில் கூட மக்கள் போக்குவரத்துக்கு இல்லை.. பின்னே இவர்கள் எப்படித்தான் பயணிக்கிறார்கள் என்கிறீர்களா..? சில தனியார் பஸ்கள் ஓடுகின்றன.மற்றபடிக்கு நம்மூர் மினி வேன் சர்வீஸ்தான். கஷ்டம் என்னவென்றால், நேரத்திற்கு எடுக்க மாட்டார்கள்..வேன் எப்போது நிரம்புகிறதோ அப்போதுதான்.. உங்களுக்கு அன்றைய தினம் உட்டாலக்கடி சாமியாரின் அருளாசி இருந்தால் அரை மணி நேரத்திலோ, முக்கால் மணி நேரத்திலோ வேன் நிரம்பிவிடும்..அதுவும் 16 லிருந்து 20 பேர் வரை ஏற்றாமல் விட மாட்டார்கள். இல்லையென்றால் 2 மணி நேரம் ஆனாலும், வேன் அந்த ஊரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும். என் ரெக்கார்டு 12 முறை.. அதாகப் பட்டது, போவது போல் கிளம்பி ஊர் எல்லை வரை சென்று, திரும்பி வந்து விடுவார்கள். கற்பனை செய்து பாருங்கள், 12 முறை...

ஆக 100 கி.மீ தூரம் செல்ல நான்கு மணி நேரம். மற்ற படிக்கு, வேன்கள் எல்லாமே ஏதோ ஒரு மத்திய கிழக்கு அல்லது தூரகிழக்கு நாட்டில், நன்றாக அடி பட்டு, வாழ்க்கையின் கடைசிக் காலத்தை உகாண்டாவில் கழித்துக் கொண்டிருக்கும்.. அந்த வேனில் மணிக்கு 130 கி.மீ வேகம் வரை செல்லும் இவர்களின் கடமையுணர்ச்சி சில சமயம் புல்லரிக்கச் செய்யும்.. சில இடங்களில் கார்கள் பயன்படுத்தப் படுகின்றன..டிரைவரையும் சேர்த்து 7 பேர்..

இவையெல்லாம் வெளியூர் பிரயாணத்திற்கு..உள்ளூரில்..?? அதற்குத்தான் போடா போடா.. நம்மூர் ஆட்டோவை விட சீப்..ஆனால் ஒரு நேரத்தில் ஒருத்தர்தான் பயணிக்க முடியும். மழை, வெயில் எல்லாம் பார்க்கக்கூடாது. குஷன் சீட்டெல்லாம் உண்டு..இவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அனேகமாக மொத்த உகாண்டாவுமே ஸ்தம்பித்துவிடும்.. இத்தகைய பெருமை கொண்ட போடா போடா விற்கு, நம்மூரில் நாம் வைத்திருக்கும் பெயர்...

மிதி வண்டி...அதாவது தூய தமிழில், சைக்கிள்...

12. காவிரி, பூமத்தியரேகை மற்றும் நான்...

ஞாயிறு, ஜனவரி 29, 2006

உகாண்டாவில் வேலை என்றவுடனேயே, ஏகப்பட்ட எதிர்மறையான விமரிசனங்கள். வேற நாடே கிடைக்கலையாக்கும்...போயும் போயும் உகாண்டாதான் கிடைச்சதாக்கும்...இதுக்குப் பேசாமா, பாத்துக்கிட்டு இருக்குற ரெப் வேலையவே பாக்கலாமுல்ல...இப்படி இலவச அறிவுரைகள் கொடுப்பதில், நம்மவர்களை அடித்துக் கொள்ள வேறு யாராலும் முடியாது. இது போதாதென்று, இடி அமீன் (இடி அமீன் நாடு கடத்தப்பட்ட விசயமே தெரியாதவர்கள்..), ஆப்பிரிக்கா முழுக்க பாலைவனம்தான், வெயில் தாங்க முடியாது(கனவிலாவது ஆப்பிரிக்காவை பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்) போன்ற சந்தேக பயமுறுத்தல்கள்..பத்தாக்குறைக்கு மாமா, பூமத்திய ரேகை உகாண்டா வழியாத்தான் போகுது..அதனால வெயில் அதிகமாத்தான் இருக்கும்..இப்படி விஞ்ஞான ரீதியாக பயமுறுத்திய என் அக்கா பையன்...இதற்கிடையில் நண்பன் ஒருவன் ஃபோன் போட்டு, உகாண்டால ஃபிரீ செக்ஸாம்டா..பார்த்து அடக்க ஒடுக்கமா இருந்துக்கோ..எயிட்ஸ்,கியிட்ஸ் வந்திடப் போகுது என்று பீதியைக் கிளப்பினான்

எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளித்து, மும்பை விமான நிலையம் வந்து, ஒரு மாதிரியான வித்தியாசமான தலையலங்காரமும், வினேதமான உடையலங்காரமுமாக இருந்த கறுப்பின மக்களைப் பார்த்த போதுதான், இனி இரண்டு வருடங்களுக்கு, இவர்களோடுதான் மாரடிக்க வேண்டும் என்ற உண்மை உரைத்தது.

இதில்,கம்பெனி ஏற்பாடு செய்திருந்த விமானம் அனேகமாக விமான கம்பெனிகள் வரிசையில், டவுன்பஸ் ரேஞ்சுக்கு இருக்கும் போலிருக்கிறது..கம்பெனியைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் முதலில் கொடுத்த டிக்கெட்டை, இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டுமென்று, மாற்றச் சொன்னதில், விமானக் கம்பெனியையும் மாற்றி விட்டார்கள்.விதி...இடம் ஒதுக்கிக் கொடுப்பதிலிருந்து, (இரவு பண்ணிரண்டு மணிக்கு ஜன்னலோர இருக்கைக்காக சண்டை போட்ட குஜராத்தி தம்பதியினர், காலை விடிவதற்கு முன்பே முடிந்துவிட்ட பயணத்தில், ஜன்னல் வழியாக எதைப் பார்த்தார்கள் என்பது, இன்று வரை விளங்கவில்லை எனக்கு), போர்த்திக் கொள்ள கம்பளி கேட்டத்ற்கு, தீர்ந்து போய் விட்டது எனச் சொன்ன விமானப் பணிப்பெண் வரை ஏகப்பட்ட சொத்ப்பல்கள்.. இரவிலேயே ஆடிஸ் அபாபா, நைரோபி எல்லாம் நின்று காலை 6 மணிக்கு என்டபி வந்து சேர்ந்தாயிற்று..

பூமத்திய ரேகை இந்த வழியாகத்தான் போகிறது என்று ஓரிடத்தில் சொன்னார் நண்பர். ஏதாவது சிலீர்ப்பு ஏற்படுகிறதா எனப் பார்த்தேன்.(காவிரியை முதன்முதலில் பார்த்தபோது, நிஜமாகவே சிலீர்த்தது..) ஒரு புடலங்காயும் ஏற்படவில்லை...காவிரி நிஜம்..பூமத்திய ரேகை கற்பனை என்பதனால் இருக்குமென நினைத்துக் கொண்டேன்.

திடீரென நண்பன் சொன்னது, நினைவுக்கு வர, கார் ஓட்டிக் கொண்டிருந்த நண்பரிடம், உகாண்டால ஃபிரீ செக்ஸ்ஸுன்றாங்களே உண்மையா என்றேன். நண்பர் அவசரமாக, இல்லை, இல்லை.. இங்கேயும் காசு கொடுக்கனும் என்றார்.

நாளை பார்ப்போமா...

அன்புடன்,
இராம்

11. ஒரு பியர் பாட்டிலும் இரண்டு நண்பர்களும்...

வியாழன், ஜனவரி 19, 2006

அலுவல் நிமித்தமாக கம்பாலா சென்று விட்டதால், சில நாட்களாக, உங்களைக் கொடுமைப் படுத்த முடியவில்லை. மக்கள் மிகுந்த சந்தோசத்திலிருப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத விசயமென்பதால்,விரைவாக வந்து விட்டேன். இதற்கிடையில் கல்லூரி நினைவுகள் பாகம் இரண்டு என்று சொத்தை தலைப்பைப் போட்டு எங்கள் கதையை யாரும் படிக்காத மாதிரி செய்து விட்டாயே, என சம்பந்தப் பட்ட இரண்டு நண்பர்களும் ஃபோனில் திட்டியதால், தலைப்பை, பரபரப்பாக மாற்றி விட்டேன். இதற்கு மேலும் இதை யாரும் படிக்காமல் போனாலோ, அல்லது படித்து விட்டு படிக்காத மாதிரி பாவ்லா காட்டி விட்டுப் போனாலோ, அவர்கள் கனவில் போய் கண்ணைக் குத்துமாறு கழுகு மலை உட்டாலக்கடி சாமியாரிடம் வேண்டுகோள் வைப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு..


இந்தியாவின் ஐம்பதாவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது எடுத்தது..இந்தப் படத்திற்கும், இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும், இதில் வரும் இருவர் இந்தப் படத்தில் உள்ளனர். எந்த இருவர் என கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு..

கல்லூரியில் சேர்ந்தாயிற்று...அதுவரையில் விடுதியில் தங்கிப் படித்த பழக்கம் இல்லாத நண்பர்கள் சிலர் வெளியில் அறை எடுத்து தங்கினார். அதில் இரு நண்பர்கள் ஊருக்குள் அறை கிடைக்காமல், ஊருக்குப் புற நகரில் இருந்த சிறு கிராமத்தில் தங்கியிருந்தனர். நண்பர்கள் இருவருக்குமே (கலக்கல் காம்பினேசன் அது..!)புதிய விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அறைக்கு வந்த ஒரு வாரத்திலேயே, பியர் அடித்தால் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஆனால் கொடுமைக்கென்று, அந்த கிராமத்தில் ஒரு ஒயின் ஷாப் கூட கிடையாது..ஊருக்குள் சென்று வாங்க பயம். எல்லா வாத்தியார்களும் அங்கேதான் குடியிருக்கிறார்கள்..வாத்தியார்கள் பரவாயில்லை, நிறைய சீனியர்கள் வேறு இருக்கிறார்கள்..ராகிங் போர்வையில் காசையெல்லாம் தின்றே அழித்து விடுவார்கள்.

அதனால், பக்கத்திலிருக்கும் மற்றொரு சிற்றூரில் போய் வாங்குவது என்று முடிவு செய்தார்கள். அங்கே இரு பிரச்சினைகள்..ஒன்று, இருவருக்குமே அந்த ஊருக்குச் செல்வது அதுதான் முதல் முறை...இரண்டாவது, அந்த ஊரில் இன்னொரு நண்பன் இருந்தான். அவன் அப்பாவிற்கு, நண்பர்கள் இருவரையுமே தெரியும், அதைவிட முக்கியமாக, அவர்களின் அப்பாக்களையும் தெரியும்.. இருந்தலும் பியர் ஆசை பயத்தை வென்று விட்டது. பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுத்தாகி விட்டது. பஸ் போனது..போனது..அரைமணி நேரம் கழித்து, அந்த ஊரும் வந்து விட்டது..ஆனால் பேரூந்து நிறுத்தத்தில் நிறைய கூட்டம் இருந்தது. அதில் நண்பனுடைய அப்பாவும் இருக்கலாம் என்ற பயத்தில் அடுத்த நிறுத்தத்தில் இறங்கலாம் என முடிவு செய்தனர்.

மீண்டும் பஸ் கிளம்பி, ஐந்து நிமிடங்கள் நிற்காமல் சென்ற போதுதான் தெரிந்தது, அந்த உலக மகா பட்டினத்திற்கு ஒரே ஒரு நிறுத்தம்தான்..வேறு வழியில்லை..பஸ் எது வரை போகிறதோ அங்கே போய் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். ஊர் உலகமெல்லாம் சுற்றி அடுத்த அரை மணியில் பஸ் போய் சேர்ந்த ஊரில், சொல்லி வைத்தாற்போல மூன்றே மூன்று வீடுகள் மட்டுமே.. பெட்டிக் கடையே இல்லாத ஊரில் ஒயின் ஷாப்பிற்கு வழி கேட்டால், கட்டி வைத்து அடிக்கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய இருந்ததால், பஸ்ஸை விட்டே வெளியே வர வில்லை இருவரும்.

ஒருவழியாக அதே பஸ்ஸிலேயே திரும்பவும் ஏறி, நண்பனின் ஊரில் பியரை (ஒண்ணே ஒண்ணு..கண்ணே கண்ணு..) வாங்கி அறைக்கு வந்து விட்டார்கள். பியர் வாங்கியதை விடப் பெரிய கூத்து, அதை ஒரே ஒரு மூடி குடித்து விட்டு, நண்பர்களிலொருவன் ஆடிய ஆட்டம்தான். அவனை அன்று அடக்குவதற்குள் மற்றவனுக்குத் தாவு தீர்ந்து விட்டது. அந்த நண்பன் இன்று வரை, இரண்டே காரணங்களுக்காகத்தான் வாந்தி எடுப்பான். வெறும் வயிற்றில் சரக்கடித்தால், அல்லது சாப்பிட்டு விட்டு சரக்கடித்தால்.மொத்தத்தில் சரக்கடித்தாலே...

இந்த அனுபவமும் என்னுடையதுதான் என்று பின்னூட்டம் போட்டு, வீட்டில் டின் கட்ட வைத்து விடாதீர்கள் :=))

அன்புடன்,
இராம்

10. கல்லூரி நினைவுகள்..

புதன், ஜனவரி 18, 2006

ஒரு தமிழ் பிளாக் ஆரம்பித்துவிட்டு, கல்லூரி நினைவுகளைப் பற்றி ஆட்டோகிராப் டைப்பில் ஒரு பதிவு போடவில்லையென்றால், கழுகுமலை உட்டாலக்கடி சாமியார் கனவில் வந்து கண்ணைக் குத்தி விடுவார் என நண்பன் ஒருவன் மிரட்டியதால் இந்தப் பதிவைப் போடவில்லை. கல்லூரியில் பழைய மாணவர்களெல்லாம் ஒன்றுகூடப் போகிறோம் என நண்பன் போட்ட கடிதம் பழைய நினைவுகளையெல்லாம் கிளறிவிட்டதாலேயே இந்தப் பதிவு. திட்ட வேண்டுமென்றால், காசியில் பனாரஸ் இந்து யுனிவர்சிடியில் லெக்சரராக இருக்கும் அவனைத் திட்டுங்கள்..

கல்லூரிகளில் கலாட்டாக்களும், காதல்களுமே நடக்கின்றன என தமிழ் சினிமாக்கள், தமிழர்களின் தலையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்தாலும், என் கல்லூரி வாழ்க்கையில் அந்த அளவுக்கு கலாட்டாக்கள் நடந்ததாக நினைவில்லை..ஒரு சிலவற்றைத் தவிர..

முதல் வருடம் ஆண்டு இறுதித் தேர்வு என்று நினைவு..கெமிஸ்ட்ரி லேப்..தேர்வு கண்காணிப்பாளர் பக்கத்து ஊரிலிருக்கும் கல்லூரியிலிருந்து வந்திருந்தார்.. நண்பன் ஒருவன் படிப்பில் கொஞ்சம் சுமார்..(என்னைப் போலவே). அமைதியாக டைட்ரேசன் பண்ணிக் கொண்டிருந்தான். அதில் உபயோகிக்கப் படும் டைல் கொஞ்சம் தூசியாக இருந்திருக்கும் போல..(நிறமாற்றத்தை தெளிவாக காண வெள்ளை நிற டைல் உபயோகப் படுத்துவார்கள்). கண்காணிப்பாளர் தூசியை கவனித்திருப்பார் போல... நண்பனின் அருகில் வந்தார். என்ன இது என்றார். பொட்டாசியம் பெர் மாங்கனேட் என்றான் நண்பன் சின்சியராக. அதக் கேக்கல..கீழ இருக்கே அது என்னது என்றார். டைல் என்கிற வார்த்தை மறந்து போயிருந்தபடியால் மார்பிள் என்றான் நண்பன். அதிலேயே அவருக்குக் கொஞ்சம் மண்டை காய்ந்து போய் விட்டது. அதோடு விட்டிருக்கலாம்..ஆனால் அவர், இருக்கட்டும்.. அத எதுக்கு உபயோகப் படுத்துறாங்க தெரியுமா என்றார். அதற்கு நண்பன் சொன்ன பதிலில் ஆடிப் போன அவர், கொஞ்ச நாட்களுக்கு, சேது விக்ரம் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தார் எனக் கேள்விப் பட்டேன். நிறமாற்றத்தை அறியப் பயன்படும் டைலுக்கு, நண்பனின் விளக்கம்....ஹைட்டு பத்தல சார், அதான் வச்சிருக்கேன்.

9. கடவுள்

செவ்வாய், ஜனவரி 17, 2006

எனக்கு நிறைய நாட்களாகவே ஒரு விசயம் புரியவில்லை. ஏன் எல்லா கடவுள்களுமே, அல்லது இறை தூதர்களுமே ஒரே ஒரு கண்டத்திலேயே (ஆசியா)அவதரித்துள்ளனர்?? யேசு, முகமது நபிகள், புத்தர், மகாவீரர் மற்றும் நமது மக்கள்தொகைக்கு இணையான எண்ணிக்கையிலிருக்கும் இந்து கடவுள்கள் எல்லோருமே ஆசியாவிலேயே அவதரிக்க என்ன காரணம் இருந்திருக்கக் கூடும்?? ஒருவேளை கடவுள்கள் எல்லோருமே ஆசியர்களின் கற்பனைத் திறனுக்கும், மார்க்கெட்டிங் திறமைக்குமான எடுத்துக் காட்டுகளா?? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

அன்புடன்,
இராம்

8. எது ஏழை நாடு..?

திங்கள், ஜனவரி 16, 2006

ஏழை நாடு என்பதற்கான உண்மையான அளவுகோல் எது? நம் ஊரில் ஏழைகள் எங்கே குடியிருப்பார்கள்? பணக்காரர்களை விட, வசதி பட்டுமல்ல, வாடகையும் குறைவாக இருக்கும் இடத்தில் இருப்பார்கள். விலை குறைவாக இருக்கும் பொருட்களை வாங்குவார்கள். ஆடம்பரப் பொருட்களை அவ்வளவாக உபயோகிக்க மாட்டார்கள்.ஏழைகள் அதிகம் இருக்கும் நாட்டைத்தானே ஏழை நாடு என்று அழைக்க வேண்டும்?? ஏன் உகண்டாவை ஏழை நாடு என்று அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. காரணம், விலைவாசி நம் நாட்டை விட அதிகமாகவே இருக்கிறது. நம் நாட்டில் 1500 ரூபாய் கொடுத்தோமென்றால், இங்கே அதே வேலைக்கு 3500லிருந்து 4000 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கிறது. சாதாரண வேலையிலிருப்பவர்கள் கூட மொபைல் வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் ஒரு லோக்கல் காலிற்கு 7.50 ரூபாய் வரை ஆகிறது. இருந்தாலும் வைத்திருக்கிறார்கள். நிறைய மனைவிகளும், நிறைய குழந்தைகளும் வைத்துப் பராமரிக்கிறார்கள்.ஆனாலும் நம்மை விட ஏழை நாடாகவே குறிப்பிடப் படுகிறார்கள். ஏன்???

அன்புடன்,
இராம்

7. தேர்தல் கூத்துகள்...

தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே, ஒரு விதமான இறுக்கமான சூழ்நிலையை உணர முடிகிறது. இருபது வருடங்களாக ஆட்சியிலிருக்கிறார் தற்போதய ஜனாதிபதி. அதிருப்தி, எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். இங்கே மருத்துவராக இருக்கும், ஆப்பிரிக்க நண்பர் ஒருவர், ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் என்பது உங்கள் நாட்டைப் போல் அவ்வளவு எளிதான காரியமல்ல என்றார். இம்முறை எதிர்க்கட்சியை சேர்ந்தவருக்குக்கும் நிறைய கூட்டம் சேர்கிறதே என்றேன். ஒவ்வொரு முறையும் அப்படித்தான் என்கிறார். நிறைய தேர்தல்களைப் பார்த்தவர் என்பதால் நம்பத்தான் வேண்டியிருக்கிறது.

தேர்தல் கூத்துகளை இந்தியாவிலும் பார்த்திருக்கிறேன். ஆனாலும் இவர்கள் அடிக்கிறது, கொஞ்சம் ஓவர் போல்தான் தெரிகிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் போதே, இவர்களின் பிரச்சார வேகம், நம் நாட்டின் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் நடக்கும் பிரச்சாரத்துடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கிறது. ஆறு வருடங்களுக்கு ஒருமுறை என்பதால் ஆச்சரியப்படத் தேவையில்லை என்கிறார் நண்பர்.

தேர்தல் நேர வன்முறைகளைப் பற்றி, புதிதாக வந்தவர்கள் கவலைப் பட்டாலும், நிறைய வருடங்களாக இங்கேயே இருப்பவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். யார் வந்தாலும் எதுவும் மாறப் போவதில்லை என்கிறார்கள் சிலர். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்கிறேன் நான்.

அன்புடன்,
இராம்.

6. ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறோ..?

சனி, ஜனவரி 14, 2006

அய்யா, நம்ம நியோ கவுண்ட்டர் யார் யாரோ அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலிலேருந்தெல்லாம் படிக்கிறாங்கன்னு காட்டுதய்யா..நிஜமாகவே யாரும் பார்க்குறீங்களா, இல்ல ஏதாவது பிரம்மையா..இல்ல ஏதாவது தொழில்நுட்பக் கோளாறா..? அய்யா, யாராவது பின்னூடத்துல போடுங்கையா..தனியா இருக்க பயமா இருக்குய்யா..

ஏன்னே தெரியல..நம்மள எந்த திரட்டியும் ஏத்துக்க மாட்டேங்குறாங்கைய்யா. ..டெக்னிக்கலா ஏதோ கேக்குறாங்கன்னு தெரியுது, ஆனா என்ன கேக்குறாங்கன்னுதான் தெரியல..சரி விடுங்க..என் கொடுமைலேருந்து நிறைய பேரை காப்பத்தலாம்னு முடிவு பண்ணியிருப்பாங்க போலிருக்கு..

5. ட்ராய்...

வெள்ளி, ஜனவரி 13, 2006


கேபிள் டிவியில் லகான் படம் போட்டார்கள். பார்த்து நிறைய நாட்கள் ஆகியிருந்தாலும் படம் நன்றாகவே இருந்தது.(இங்கிலீஸ் சப் டைட்டில் உபயம்). நேற்று ட்ராய் ஆங்கிலத்தில் (ஆங்கிலப் படத்தை வேறு எதில் போடுவார்கள்!!) போட்டார்கள். ஏற்கெனவே பார்த்த படம்தான். நான் பார்த்த படங்களிலேயே மிகச் சிறந்த படமாக இதனைக் குறிப்பிடலாம். போரைத் தவிர்க்க நடக்கும், ஒண்டிக்கு ஒண்டி சண்டையில் ஓடி வந்து, எதிரியின் தோள் பட்டையில் , வாளை செருகும் அக்கிலீஸ் (பிராட் பிட், கன கச்சிதமான தேர்வு) ஏற்படுத்தும் அந்த பிரமாண்டம், படத்தின் இறுதிக் காட்சி வரை ச்ற்றும் குறையாது படமாக்கியிருக்கிறார்கள். இறந்த மகனின் சடலத்திற்காக, அக்கிலீஸிடம் கையேந்தும் டிராய் மன்னன், திரும்பி வர மாட்டான் எனத் தெரிந்தே மகனை போருக்கு அனுப்பும் அக்கிலீஸின் தாய், விதி மீறல் என்று தெரிந்தே, தம்பியை காப்பாற்றத் துணியும் இளவரசன் (எரிக் பானா, பிராட் பிட்டிற்கு சரியான சவால்) என ஒவ்வொரு படைப்புமே அற்புதம். கவிதை போன்ற வசனங்கள், கண்ணை உறுத்தாத ஒளிப் பதிவு, காதை உறுத்தாத இசை, தேர்ந்த நடிக, நடிகையர் என எல்லா விதத்திலும் கலக்கியிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்.

அன்புடன்,
இராம்.

4. ஒரு ஜோக்..

செவ்வாய், ஜனவரி 10, 2006

அது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிங்க. காலங்காத்தால லேபுக்கு முன்னாடி நீளமான கியூங்க..வழக்கம் போல நம்ம லேப் அட்டண்டர் லேட்டா வந்தாருங்க. மொத ஆள கூப்பிட்டாரு, பேப்பர வாங்கிப் படிச்சாரு..பிளட் டெஸ்ட்..கைய நீட்ட சொன்னாரு, ஒரு பட்டைய கட்டினாரு..பளார், பளார்னு ரெண்டு அடி அடிச்சாரு..(நரம்ப கண்டு பிடிக்கிறாராமாம்..) ஊசியக் குத்தி இரத்தத்தை எடுத்தாரு..இதப் பார்த்துக்கிட்டு இருந்த நம்ம ரெண்டாவது ஆளு, ஒரு நிமிசம் யோசிச்சான், அப்புறமா அங்கேருந்து தல தெறிக்க ஓடிட்டான்..ஏன் தெரியுமா..?

நம்மாளு வந்தது யூரின் டெஸ்ட்டுக்குங்க..

3. பொழுது எப்படி போகுதுன்னா...

திங்கள், ஜனவரி 09, 2006

நான் ஒரு சினிமா பைத்தியங்க..(முழுசாவே பைத்தியந்தானே அப்படீங்றீங்களா??) வாரத்துக்கு நாலு படம் பாக்கலேன்னா எனக்கு தூக்கமே வராதுங்க. சேலத்தில வேல பாத்தப்பவுஞ் சரி, கோயமுத்தூர்ல வேல பாத்தப்பவுஞ் சரிங்க இதுதான் நமக்கு முக்கியமான வேலங்க.. என்னடா இவன் பாட்டுக்கு என்னமோ பேசிக்கிட்டு இருக்கனேன்னு பார்க்குறீங்களா? அதுக்குதான் வாரேன். அப்படி சினிமா, சினிமான்னு இருந்தவனை கொண்டு வந்து, நாடு முழுக்கவே ரெண்டே ரெண்டு தியேட்டர் இருக்கற ஊர்ல விட்டா என்ன ஆகும்? உண்மைதாங்க.. கிட்டத் தட்ட தமிழநாடு சைஸ் இருக்கிற இந்த நாட்டுல மொத்தமே ரெண்டு தியேட்டர்தான். அதுவும் நாட்டோட தலைநகர் கம்பாலாலதாங்க இருக்கு. கம்பாலா இருக்கிறது 265 கி.மீ தள்ளிங்க. நம்ம ஊர் மாதிரி நேரத்துக்கு பஸ்லாம் கிடையாதுங்க.. உண்மைய சொன்னா ரோடே முழு நீளத்துக்கும் கிடையாதுங்க.. இந்த லட்சணத்துல அங்க எங்க போய் படம் பாக்குறது? சரி நமக்கு வாய்ச்சது டி.வி தான்னு,அத பாக்கலமுன்னா அங்க வருதுங்க நமக்கு இந்தி பிரச்சினை. கருமம் பிடிச்ச எல்லா இந்தி சேனலும் வருது ஆனா நம்ம தூர்தர்சன் கூட தமிழ்ல வர மாட்டேங்குதுங்க..அட பொழுதன்னைக்கும் பஜனைய காட்டிக்கிட்டு ஒரு குஜராத்தி சேனல் கூட இருக்குங்க..ஆனா உருப்படியா செய்தி பாக்க கூட ஒரு தமிழ் சேனல் இல்லீங்க.. கடைய விட்டா வீடு, வீட்ட விட்டா கடைனு பொழுது போகுதுங்க..அட இத விட்டா, டிஸ்கொதெக்குதான் போகனும்.. என்னடா தியேட்டரே இல்லேன்னு சொன்னானேன்னு பாக்குறீங்களா? தியேட்டர்தான் கிடையாது.. ஆனா பார்,டிஸ்கோ எல்லாம் உண்டு.இந்த ஊர் மிஞ்சி போனா நம்ம திருசெங்கோடு அளவு கூட வராதுங்க.(இந்த லட்சனத்துல இதுதான் மூணாவது பெரிய ஊர்னு இந்த ஊர்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் பெருமை) ஆனா ஏகப்பட்ட பார் இருக்குதுங்க. ஒரு டிஸ்கோ கூட இருக்குங்க..இங்க எல்லா ஊர்லேயும் மனுசங்க இருக்காங்களோ இல்லையோ, பாரும் டிஸ்கோவும் இருக்குங்க..பாருக்குள்ளெ நல்ல நாடுங்க இது..அட எல்லா பார்லயும் பொண்ணுங்கதான் வேல பாக்குறாங்க...அது எப்படி உனக்கு தெரியுங்கிறீகளா.. ஒரு ஜெனரல் நாலெஜுக்காக போய் தெரிஞ்சுகிட்டதுதாங்க

சரிங்க.. நாளைக்கு பேசலாம்

வர்ட்டா
இராம்

2. தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாராட்டு

ஞாயிறு, ஜனவரி 08, 2006

அன்புள்ள தமிழ் கூறும் நல்லுலகமே,

எனது பெயர் ராம்குமார். நான் கிழக்கு ஆப்பிரிக்காவில், உகாண்டாவில் வாழ்ந்து வருகிறேன். கண்டிப்பாக ஆப்பிரிக்கா நிறைய புது அனுபவங்களை தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைதளம். இது தவிர, ஆங்கிலமும், தமிழும் மட்டுமே தெரிந்த, முக்கியமாக இந்தி தெரியாத ஒரு தமிழனாக நான் அனுபவித்த, அனுபவித்து கொண்டிருக்கும் சில பல இன்னல்கலையும் புலம்பி தீர்ப்பதாக உத்தேசம்.

குஜராத்திளும், மளையாளிகளும், சுந்தர தெலுங்கர்களும் கோலேச்சிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இவற்றில் எந்த மொழியுமே தெரியாத, மணமாகாத (அட..தனியா இருக்கேன்னு சொல்ல வர்ரேங்க!) ஒரு இளைஞனாக கஷ்டப் பட்டலும், பக்கத்திலிருக்கும் ருவான்டா போன்ற நாடுகளிலிருக்கும் நண்பர்களை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வேன். காரணம் ஆங்கிலம். உகாண்டாவும் நம் நாட்டை போலவே காலனி நாடுதான். ஆச்சரியமான விஷயம், அவர்களது ஆங்கிலம். உச்சரிப்பில் வித்தியசங்கள் நிறைய இருந்தாலும், தெளிவாக, பிழையில்லாது பேசுகிறார்கள் (பெரும்பான்மை மக்கள்). ஆங்கிலமே பிரதான மொழி. ருவான்டாவில் பிரஞ்சு.

பல நேரங்களில், நமது அரசியல்வாதிகளை நினைத்து வருத்தப் பட்டாலும், இது போன்ற சில சமையங்களில், நல்லதோ கெட்டதோ, நமக்கே நமக்கென்று, சில அடையாளங்களை (மதராசிக்கு இந்தி வராது...) கொடுத்தமைக்காக பாராட்டலாம், பல நேரங்களில் இன்னல் பட்டலும்...

கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்.

அன்புடன்,
இராம்

1. வந்துட்டான்யா...வந்துட்டான்யா...

அன்புள்ள தமிழ் பெருங்குடி மக்களே...

வந்து விட்டான் உங்கள் நண்பன் இராம்,

எப்படியோ கஷ்டப்பட்டு தமிழ்-ல டைப் செஞ்சாலும், உங்கள கொடுமை படுத்துறதுன்னு முடிவு பண்ணிட்டேன். டைப் பண்ணுறதுக்கு கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவயில்லைனு தமிழ் தொண்டு புரிய வந்திருக்கிற என்ன நீங்க வரவேற்று வாழ்த்துவீங்கன்னு தெரியும்.

வாழ்க வளமுடன்,
இராம்