இந்தியாவில் ஏகப்பட்ட முறையும், ஆப்பிரிக்க நாடுகளில் சில முறையும் கிருஸ்த்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. இம்முறை இங்கிலாந்தில்... இருந்தாலும் வெள்ளைக்காரங்க கொஞ்சம் ஓவராத்தான் கொண்டாடுறாய்ங்க...
கிருஸ்துமஸுக்கான தொடக்கநிலை முன்னேற்பாடுகள் செப்டம்பர்/அக்டோபர் மாதத்திலேயே தொடங்கி விட்டன. இதில் முதலிடம் வகிப்பது கிருஸ்துமஸ் டின்னருக்கான உணவகத்தைத் தேர்ந்தெடுப்பது. ஒரு நான்கைந்து உணவகங்களிலிருந்து மெனு வாங்கி இரண்டு வாரங்களாக ஓட்டெடுப்பு நடத்தி ஒன்றைத் தேர்ந்தெடுத்தாகி விட்டது. பின் அதற்கு முன்பணம் வசூலிப்பதில் இரண்டு வாரங்களை செலவிட்டனர். பணம் கொடுக்காமல் டிமிக்கி அடித்து இழுத்தடித்த இரண்டு பேர் ஓட்டெடுப்பில் எல்லோருக்கும் முன்பாக ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியவர்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் இரண்டு ஆய்வகங்களில் ஆய்வு செய்வதால் (அப்படித்தான் நம்பவைச்சிருக்கேன்) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓட்டெடுப்பில் இரண்டு முறை கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி ஆயிற்று. இரண்டு முறையும் நான் தேர்தெடுத்த உணவகங்கள் டெப்பாஸிட் இழந்து தோற்றுப் போனது அவர்கள் உணவில் எனக்கிருக்கும் புலமையை உலகிற்கு உணர்த்தியது.
ஒரு வழியா டிசம்பர் மாசம் முதல் வாரத்தில் மிச்சக் காசையும் வசூல் செய்துவிட்டு, அடுத்த நாள் ஒரு உணவகத்திற்கு கூட்டிச் சென்றனர். நானும் ஸ்டைலாக ஒரு ஜீன்ஸும் டி சர்ட்டையும் மாட்டிக்கொண்டு போனால் அங்கே சொல்லி வைத்தாற்போல் ஒருவர் கூட டி சர்ட் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் ரொம்ப நல்ல புள்ளைங்களா ஜீன்ஸும், ஒரு முழுக்கை சட்டையும் அணிந்து வந்திருந்தனர். என்னடா இது, ஆரம்பமே சரியில்லையே என்று விதியை நொந்தபடி அமர்ந்தால் அடுத்த அடி விழுந்தது. அது உணவு மட்டுமில்லை, stand up காமெடி ஷோவும் சேர்ந்ததென்று. இந்த காமெடி ஷோக்களைப் பற்றி நான் முன்னரே கேள்விப் பட்டிருக்கிறேன். பக்கத்திலே உட்கார்ந்து இருக்கிறவங்களை வம்புக்கிழுத்து காமெடி செய்வதுதான் இவர்களில் நிறைய பேர் செய்வது. நல்ல வேளையாக மேடைலேருந்து கொஞ்சம் தள்ளிதான் இடம் கிடைத்தது. இருந்தாலும் மொத்த இடமே சின்னதா இருந்ததாலே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.
சாப்பாடு முடிஞ்சதும் இவங்க காமெடி ஷோவும் தொடங்கிச்சு. நானும் எவ்வளவோ கவனிச்சுப் பார்த்தேன், ஒரு 25% கூடப் புரியலை. நானும் எவ்வளவு நேரம்தான் புரியற மாதிரியே நடிக்கிறது...புரியுற மாதிரி நடிக்கிறது மட்டும்னா கூடப் பரவாயில்லை, ஸ்கூல், காலேஜ்ன்னு ஏகப்பட்ட இடங்கள்ள நடிச்ச அனுபவம் இருக்கு...இங்கே அவனுங்களோட சேர்ந்து சிரிக்கவும் வேண்டியிருக்கு. பிரச்சனை என்னன்னா அவனுங்க எப்போ சிரிப்பானுங்கன்னு எனக்குத் தெரியவே மாட்டேங்குது... நிறைய இடங்களில் அவனுங்க சிரிக்கிறப்ப நான் உர்றென்று இருப்பதும், அவனுங்க சீரியஸா கவனிச்சுக்கிட்டு இருக்கிறப்ப நான் அடக்க மாட்டாமல் சிரிப்பதுமாக காமெடி ஷோ பயங்கர காமெடியாக போய்க் கொண்டு இருந்தது. பக்கத்தில் ஒரு மாதிரியா பார்த்த வெள்ளைக்காரனிடம் "நைஸ் காமெடி, சிரிப்பை அடக்கவே முடியலை" என்று சொல்லி சமாளித்தேன். ஒரு கட்டத்திற்கு மேலே இனிமே நடிக்கவே முடியாது என்ற நிலை வந்து, எதிரே அமர்ந்து இருப்பவர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். எதிரே ஒரு மலேசிய இந்தியப் பெண் என்னை மாதிரியே திரு திருவென்று முழிப்பதும், அவ்வப்போது கெக்கே பிக்கேவென்று சிரிப்பதுவுமாக இருந்தது. அடச்சே இங்கேயும் போட்டிக்கு வந்திட்டாங்களே என்று, சேரில் மிகவும் கீழே சாய்ந்து உட்கார்ந்து கொண்டால் மற்றவர்கள் என்னைக் கவனிக்க மாட்டார்களே என்று சாய்ந்த போதுதான் பார்த்தேன், பக்கத்து ஸீட் சைனாக்காரன் எனக்கு முன்னரே அந்த டெக்னிக்கைக் கையாண்டு கொண்டிருந்தான். "அடப்பாவி, நீ நேரா உட்கார்ந்தாலே உன்னை யாராலும் பார்க்க முடியாதேடா... நீ ஏன்டா இப்படிக் கஷ்டப் படுறே" என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஒரு வழியா ஒரு மணி நேரம் கழித்து, இந்தக் காமெடி கொடுமை முடிந்தது. அடுத்தது டான்ஸ் ஆடும் கொடுமை நடந்து கொண்டிருந்தது. நம்ம நான்கடி சைனாக்கார நண்பன் கிட்டத்தட்ட ஆறடி இருக்கும் பெண்ணுடன் டான்ஸ் ஆட எம்பி எம்பி முயன்று கொண்டிருந்தான். ஒரு நாளைக்கு ஒரு முறை அவமானப்பட்டால் போதுமென்று நான் விடு ஜூட்...