India

Uganda

United Kingdom

Malaysia

51. உகாண்டாத் திருடர்கள்... (2)

சனி, ஜூலை 28, 2018




உகாண்டாவில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த மருந்துக்கடையில் வருடத்திற்கு ஒருமுறை (சில சமயங்களில் இருமுறை) stock taking என்றொரு வைபவம் நடைபெறும். கடையில் இருக்கும் பொருட்கள் லெட்ஜர் காட்டும் பொருட்களின் எண்ணிக்கையோடு ஒத்துப் போகிறதா என்று பார்ப்பார்கள். வழக்கமாக கம்பாலாவிலிருந்து ஒரு கணக்காயர் வருவார். சில சமயங்களில் கடை மேலாள‌ரிட‌மே அந்தப் பொறுப்பை விட்டு விடுவார்கள். அன்று கடை விடுமுறை. நானும் மற்ற அலுவலர்களும் காலை 8 மணிக்கெல்லாம் கடைக்குள் சென்று கதவை அடைத்துவிட்டு ஸ்டாக் எடுப்போம். மதியம் என் வீட்டில் எல்லோருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்ப‌ட்டிருக்கும். என் வீடு கடையின் மாடியிலேயே இருந்தது. ஒரு மணி நேர மதிய இடைவேளைக்குப் பின்னர் திரும்பவும் stock taking. காலையிலேயே கடை ஆட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் என்று பிரித்து விடுவேன். அவர்கள் மருந்துக்களைக் கணக்கெடுத்து குறித்துக் கொள்வார்கள். நான் ஒவ்வொருவராகச் சென்று சரி பார்ப்பேன். இதுதான் நாங்கள் எப்போதுமே பின்பற்றும் நடைமுறை.
2006-ல் ஒருமுறை இப்படி ஸ்டாக் எடுத்துக் கொண்டு இருந்தோம். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.  மதியம் கடைக்கு மேலுள்ள எங்கள் வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டுத் திரும்பியும் வேலையைத் தொடர்ந்தோம். ஒரு மணி நேரம் கழித்து, வாசலுக்கு அருகில் ஒரு உயரமான நாற்காலியில் நின்று கணக்கெடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவள் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாள். சத்தம் கேட்டு எல்லோரும் அவள் இருந்த இடம் நோக்கி ஓடினோம். முகத்தில் தண்ணீர் தெளித்தவுடன் அந்தப் பெண் சுய நினைவுக்குத் திரும்பினாள். மிகவும் களைப்பாக இருந்தாள். சரியாகச் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று நினைத்தேன். எனவே, அவளை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு நாங்கள் வேலையைத் தொடர்ந்தோம்.

சற்று நேரத்தில் அங்கே இருந்த எட்டுப் பேருக்குமே தலை சுற்ற ஆரம்பித்தது. சிலர் வாந்தியும் எடுத்தார்கள். சாப்பாடுதான் பிரச்சினை என்று நினைத்தேன். ஆனால் கடையின் உதவி மேலாளர் (ஒரு குஜராத்தி) சைவம் ஆதலால் அவனுடைய வீட்டில்தான் சப்பிட்டுவிட்டு வந்திருந்தான். அவனுக்கும் தலைசுற்று இருந்ததால் சாப்பட்டில் பிரச்சினையில்லை என்பது தெரிந்தது. நேரம் ஆக ஆகத் தலைசுற்றும் அதிகமாக ஆரம்பித்தது. கணக்கெடுத்த வரைக்கும் போதும், நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லோரையும் கிளம்பச் சொல்லிவிட்டேன். எனக்கும் நிற்கவே கடினமாக இருந்தது. கடையின் பின்பக்கக் கதவை அடைத்து விட்டுக் கடைக்கு மேலிருந்த வீட்டிற்குச் செல்ல எனக்கு கால் மணி நேரத்திற்கு மேலானது. மாடிப்படிகளில் கிட்டத்தட்ட தவழ்ந்துதான் சென்றேன். எப்படியோ வீட்டிற்குச் சென்று கட்டிலில் படுத்தால் வீடே சுற்றுவது போல் தோன்றியது. உருண்டு கொண்டே இருந்தேன். எவ்வளவு நேரம் முழித்திருந்தேன் என்று தெரியாது. கண் முழித்த போது இரவாகி விட்டிருந்தது. தலைசுற்று நின்று விட்டிருந்தது. ஆனால் களைப்பாக உணர்ந்தேன். அடுத்த நாள் காலையில் பணியாளர்கள் கடைக்கு  வந்த பின்னர், கடையின் முன்வாசலில் black magic க்கில் உபயோகப் படுத்தும்  சில வஸ்துக்கள் கிடந்ததாகச் சொன்னார்கள். Black magicக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அந்தப் பொருட்கள் மயக்கத்தை உண்டு பண்ணக்கூடிய பொருட்களாக இருக்கலாம் என்று நினைத்தேன். கடை முன்பக்கம் அடைத்திருக்கிறது, உள்ளே அனைவரும் மயங்கி விட்டால் பின்னர் பின்பக்க‌மாக‌ உள்ளே நுழையலாம் என்று யாராவது திட்டம் போட்டிருக்கலாம். பிறகு ஏதோ காரணத்தால் திட்டத்தைக் கைவிட்டிருக்கலாம்.

இதைப் போலவே இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. எங்கள் கடையில் வேன் ஓட்டுனராக முண்டு (Muntu) என்றொரு பையன் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல பையன், திருட்டு, போதைவஸ்துக்கள் என ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. வார இறுதியில் அவனுடைய ஊருக்குச் சென்று விட்டு திங்களன்று திரும்பி வருவான். ஒரு நாள் திங்கட்கிழமை காலை பையன் வரவில்லை. கைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. திடீரென மதியம் வாக்கில் ஒரு Boda Boda காரர் அவனைக் கொண்டுவந்து சேர்த்தார். போதைப் பொருள் உபயோகித்தவன் மாதிரி பையன் சிரித்துக் கொண்டே இருக்கிறான். உடனடியாகப் பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தோம். diuretic கொடுத்து அதிக அளவில் சிறுநீரை வெளியேற்றி அவன் உடம்பிலிருந்து நச்சை/போதைப் பொருளை வெளியேற்றினார்கள். இரண்டு மணி நேரம் கழித்துச் சுயநினைவுக்கு வந்தவன் சொன்னான். பேரூந்தில் இவன் அருகே அமர்ந்திருந்தவன் ஏதோ உபயோகித்து இவனை மயக்கமடையச் செய்து, பணத்தைத் திருடியிருக்கிறான். பேரூந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தவனைத் தெரிந்த Boda Boda காரர் கடையில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் வேன் பயணத்தின் போதெல்லாம் ஓட்டுனருக்கு அருகிலிருக்கும் முன்னிருக்கையில் மட்டுமே பயணிக்கத் தொடங்கினேன். அதிலும் பிரச்சினை இருந்தது. ஏற்கெனவே அந்த இருக்கையில் யாராவது அமர்ந்திருந்தால், நான் அந்த வேனில் ஏறமாட்டேன். ஓட்டுனர் எனக்காக அங்கே ஏற்கெனவே அமர்ந்திருப்பவர்களை எழுப்பிவிட்டு என்னை அமரச் செய்வார்கள். சில சமயம் அப்படி எழுப்பிவிடப்பட்டவர்கள் மிகவும் கோபமாக என்னை முறைத்துக் கொண்டே பின்னால் செல்வார்கள். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்பது புரிகிறது. நிறத்தை/இனத்தை முன்னிறித்திச் சிலருக்குச் சலுகைகள் வழங்கப் படும் போது, அதனால் பாதிக்கப் படுப‌வர்களுக்கு எப்படி வலிக்கும் என்பது, வளர்ந்த நாடுகளுக்குக் (??) குடியேறி நான் பாதிக்கப்பட்ட பின்னர்தான் புரிந்தது. விதி வலியது, வேறென்ன சொல்ல?

0 கருத்துகள்: