India

Uganda

United Kingdom

Malaysia

48. உகாண்டா திருடர்கள்... (1)

வெள்ளி, பிப்ரவரி 20, 2015

பாதுகாப்பு என்ற விசயத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு உகாண்டாவில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இவை வழிப்பறி போன்ற சிறு திருட்டுகள் கிடையாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என நம்பும்படியான திருட்டுகள். உகாண்டாவின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்களிப்பு மிக அதிகம். இடி அமீன் காலத்தில் இந்தியர்கள் விரட்டி அடிக்கப்பட்டதும் அதன்பின் உகாண்டாவின் பொருளாதாரம் மிகவும் சரிந்து கவலைக்கிடமானதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அப்போது அடுத்து வந்த குடியரசுத்தலைவர் இந்தியர்களைத் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தார். அவருடைய நோக்கம் இந்தியர்கள் உகாண்டாவின் தொழிற்துறையில் பலமாக முதலீடு செய்வார்கள், அதன் மூலம் பல‌ உகாண்டர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே.

விதி வலியதல்லவா? இந்தியர்களும் வந்தார்கள், பல தொழில்களில் முதலீடும் செய்தார்கள். அவ்வாறு தொழில் தொடங்க வந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் குஜராத்திகள். அவர்கள் வரும் போதே அவர்களின் ஆலைகளிலும் அலுவலகங்களிலும் வேலைசெய்வதற்காக கூட்டம் கூட்டமாக இந்தியர்களை (குஜராத்திகளை)  அழைத்தும் வந்தார்கள். குஜராத்திகள் எந்த நிலையிலும் எப்போதுமே தங்களை முதலாளிகளாகவே கருதுபவர்கள். தொழிலைக் கற்றுக் கொள்வதற்காகவே வேலையில் சேருவார்கள். தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டதும் தனியாகக் கடை விரித்து விடுவார்கள். இவர்களின் இந்த சொந்தத் தொழில் சார்ந்த மனோநிலை உகாண்டாவிற்குப் பாதகமாகப் போயிற்று. வேலை செய்ய வந்தவர்கள் எல்லோரும் கொஞ்ச காலத்தில் சொந்தத் தொழில் செய்ய முற்பட்டனர். பெரிய அளவில் தொழில் தொடங்க முதலீடு இல்லை, என்ன செய்வது, சிறிய கடையைத் தொடங்கு என்று மளிகைக்கடை, மருந்துக்கடை, stationery shop என்று சிறு முதலீட்டுத் தொழில்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். பரிதாபம் என்னவென்றால் இந்தக் கடைகளில் வேலை செய்வதற்கும் இந்தியாவிலிருந்தே ஆட்களைக் கொண்டு வந்தனர். அவர்களும் கொஞ்ச காலம் அவர்களிடம் வேலை செய்துவிட்டு பின்னர் தனியாகக் கடைகளை ஆரம்பித்தனர்.

ஆனால் உகாண்டா அரசாங்கம் இந்தியர்களை திரும்பி அழைத்தற்கான காரணங்கள் வேறு. அப்படியானால் இந்தியர்கள் பெரிய சொழிற்சாலைகளே அமைக்க வில்லையா? அதையும்தான் செய்தார்கள். இன்றும் உகாண்டாவின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் (குஜராத்திகளின்) பங்களிப்பு மிகவும் அதிகம். ஆனால் சிறுதொழில்கள் என்பவை உகாண்டர்களுக்கானவை. அதில் இந்தியர்கள் கை வைத்திருக்கக் கூடாது என்பது என் எண்ணம். அரசாங்கம் இப்போது சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருப்பதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். சாதாரண உகாண்டர்கள் நம்மாட்களால் எவ்வாறு சுரண்டப் படுகிறார்கள் என்பதைத் தனியே எழுதுகிறேன். எதையோ எழுதத் தொடங்கி எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

2005-ல் நான் இருந்த பாலே (Mbale) எனும் நகரத்தில் நான்கு மொத்த விலை மருந்துக்கடைகள் இருந்தன. அனைத்துமே இந்தியர்களுடையவை. உரிமையாளர்கள் குஜராத்திகள், கடைகளின் முக்கிய பொறுப்பிலிருந்தவர்கள் தமிழர்கள். அங்கே வழக்கமான நடைமுறை என்னவென்றால் முதல் நாள் விற்பனையில் சேர்ந்த பணத்தை அடுத்த நாள் காலையில் வங்கியில் கட்டி விடுவார்கள். சில சமயங்களில் விற்பனை அதிகமாக இருந்தால் காலையில் சேர்ந்த பணத்தை மதியம் வங்கியில் கட்டி விடுவார்கள். எல்லா கடைகளிலும் இதே நடைமுறைதான். பாதுகாப்புக் காரணங்களால் நிறைய பணத்தை கடையில் வைக்க வேண்டாம் என்பதற்காக இந்த ஏற்பாடு. இன்னொரு பாதுகாப்பு அடுக்காக கடைகளுக்கு "அஸ்காரிகள்" எனப்படும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் உண்டு. உகாண்டாவில் இது போன்ற தனியார் பாதுகாப்பு வழங்குதல் என்பது மிகப் பெரிய சந்தை. காசுக்குத் தகுந்தாற்போல பாதுகாப்பு உபகரணங்கள் மாறுபடும். வெறும் கம்பு முதல் துப்பாக்கி வரை காசுக்கேற்ற தோசை. இது போன்ற பாதுகாப்பு வழங்கும் நிறுவனங்கள் அவர்கள் வாடிக்கையாளர்களிடம் அதிகமாகப் பணம் வசூலித்தாலும், அங்கே வேலையில் சேரும் அஸ்காரிகளின் சம்பளம் என்பது மிகவும் குறைவே. எங்கள் கடையிலிருந்த அஸ்காரிக்கு மாத சம்பளம் 2500 ரூபாய்தான். அதை ஒப்பிட்டால் எங்கள் கடையில் அப்போது வேலை செய்த கடைநிலை ஊழியருக்கே மாதம் 3600 ரூபாய்க்கு மேல் சம்பளம் மற்றும் வருட இறுதி ஊக்கத் தொகையும் உண்டு. எங்கள் கடை பாதுகாப்புக்கு வரும் அஸ்காரிகள் எங்கள் கடையில் வேலை ஏதேனும் இருக்கிறதா என்று விசாரிப்பர்.

பாலேவிலிருந்த மற்றொரு மொத்தவிலை மருந்துக் கடையிலும் இதே போல் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் துப்பக்கி ஏந்திய அஸ்காரி பாதுகப்பு வழங்கிக் கொண்டிருந்தது. ஒரே அஸ்காரியே எப்போதும் ஒரு கடைக்கு வரமாட்டார், சுழற்சி முறையில் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கோ ஒருமுறை மாறி மாறி வருவார்கள்.

சம்பவ நாளன்று அங்கே வேலை செய்யும் தமிழர் ஒருவர் பணத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வர, இதற்காகவே காத்துக் கொண்டிருந்த ஒருவன் துப்பாக்கியைக் காட்டிவிட்டான். வேறு வழியே இல்லை, பணத்தைக் கொடுத்தாயிற்று. வாங்கியவன் ஓடத் தொடங்கிவிட்டான். வேலை செய்பவர் அஸ்காரி என்ன செய்கிறான் என்று பார்த்தார். அஸ்காரி துப்பாக்கியை வைத்துக் குறிபார்க்காமல், ஓடியவனைத் தொடர்ந்து ஒரே ஓட்டம். பரவாயில்லையே கடமை தவறாத வீரனாக திருடியவனைத் தொடர்ந்து ஓடுகிறானே என நம்மவரும் நம்பி இருந்தார். அரை மணி நேரமாக இருவருமே திரும்பாத பின்னர்தான் தெரிந்தது, இருவருமே எஸ்கேப். இருவருமே கூட்டுக் களவானிகள். இந்த அஸ்காரி கடையின் பண நடமாட்டத்தைக் கண்காணித்திருக்கிறான். எந்த நேரத்தில் வங்கியில் பணம் கட்டுகிறார்கள், யார் வங்கிக்குச் செல்கிறார், வங்கிக்கு எவ்வாறு செல்கிறார்கள், இவை அனைத்தையும் கவனமாக நோட்டமிட்டிருக்கிறான். எல்லாம் தெரிந்தவுடன் நண்பனுடன் சேர்ந்து நாள் குறித்துவிட்டான்.

கடை முதலாளி குஜராத்தி, விடுவாரா? பாதுகாப்பு வழங்கிய நிறுவனமே பணத்தைத் தந்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார். பாதுகாப்பு நிறுவனமோ பணமெல்லாம் கொடுக்க முடியாது வேண்டுமானால் கணக்கில்   கழித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது. அதன்படி பாதுகாப்பு நிறுவனம் அஸ்காரியை அனுப்பும், மாதாமாதம் அதற்கான செலவு இந்தத் திருடு போன கணக்கிலிருந்து கழிக்கப்படும்.   கணக்குப் பார்த்தபோது மூன்றோ நான்கோ வருடங்களுக்கு கடைக்காரர்கள் மொத்தமாகப் பணம் கட்டியிருந்தார்கள். இது முதல் சம்பவம். பதிவு நீளமாகப் போவதால் மற்றவை அடுத்த பதிவில்.

1 கருத்துகள்:

குலவுசனப்பிரியன் சொன்னது…

உங்கள் விவரணை சாகசக் கதை போல இருக்கிறது. என் உறவினர் ஒருவரும் உகாண்டாவில் வேலை செய்கிறார். ஆனாலும் இப்படிபட்ட பதிவுகளால்தான் நெருக்கம் கிடைக்கிறது. பதிவிற்கு நன்றி.

9:10 PM