India

Uganda

United Kingdom

Malaysia

21. முடிவைத் தொடங்கி வைக்கிறேன்...

வியாழன், மார்ச் 16, 2006

நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு, நாலு சங்கிலில சேர்த்து விட்டிருக்குற நம்ம இதயக்கனி, பாசத்த்லைவர், அன்பு அண்ணன் மணியன் அவர்களுக்கு, கம்பாலா பாம்போ ரோட்டின் நடுவில் சிலை வைக்க போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தாகி விட்டது. :-)

இனி நம்ம நாலுகள்...

1. பிடித்த நாலு உணவு வகைகள்:
சொல்ல நினைப்பது:
1. கம்மஞ் சோறும், கருவாட்டுக் குழம்பும்
2. பழைய சோறும், சின்ன வெங்காயமும்
3. புரோட்டாவும், காரமான சால்னாவும்
4. அம்மா கைவண்ணத்தில் மல்லிகைப்பூ இட்லியும், தொட்டுக்கப் பொடியும்

சொல்வது:
1. பீட்சா
2. பர்கர்
3. நக்கெட்ஸ்
4. சிக்கன் சிப்ஸ் (என்னன்னே தெரியல, இதெல்லாம் சாப்பிடலேன்னா தூக்கமே வர மாட்டேங்குது)

2. போயிருக்கும் நாலு வெளி நாடுகள் (அட்ரா சக்கை..அட்ரா சக்கை)
சொல்ல நினைப்பது:
1. மலேசியா
2. சிங்கப்பூர்
3. உகாண்டா
4. கென்யா (அடங்குடா...அடங்குடா...)

சொல்வது(எதிரேயிருப்பவர் நான் எது சொன்னாலும் நம்புபவராக இருந்தால்...)
1. சுவிஸ்
2. கனடா
3. யு.கே
4. கியூபா

3. பிடித்த நாலு நடிகைகள் (யாருப்பா அது, நடிகர்களைப் பத்தி கேக்குறது... அவங்கல்லாம் யாருன்னே தெரியாது எனக்கு...)
சொல்ல நினைப்பது:
1. ஜோதிலட்சுமி
2. ஜெயமாலினி
3. சிலுக்கு சுமிதா
4. டிஸ்கோ சாந்தி (இந்த மாதிரி குல விளக்குகள்லாம் இப்ப பிரபலம் ஆகிறதில்லையே ஏன்???)

சொல்வது:
கொஞ்சம் விவரமான ஆளாக இருந்தால்:
1. சாவித்திரி
2. ரேவதி
3. லட்சுமி
4. ராதிகா

கொஞ்சம் அப்பாவியா தெரிஞ்சார்னா..
1. ஜூலியா ராபர்ட்ஸ்
2. ஆஷ்லி ஜூட்
3. காமரூன் டையாஸ்
4. ரென்னி ரஸ்ஸோ

4. பிடித்த நாலு விளம்பரங்கள்
1. ஹட்ச் சின்னப் பையனும் நாய்க்குட்டியும்
2. சாப்பிட்டுக்கிட்டு இருக்குறவங்க மேல தண்ணி ஊத்தர மாதிரி வரும் கண்ணாடி விளம்பரம்
3. உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர்
4. அக்சய்குமார் வந்த தம்ஸ் அப் விளம்பரம்

அனேகமாக எல்லோருமே ஆடி முடித்து விட்ட ஒரு விளையாட்டாகத் தோன்றுவதால் இவ்விளையாட்டின் முடிவைத் தொடங்கி வைக்க விரும்புகிறேன். நன்றி.

20. பிங்க் நிற மனிதர்கள்...

வெள்ளி, மார்ச் 10, 2006

இங்கே வந்த புதிதில், இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது சற்று சிரமமான காரியமாக இருந்தது. காரணம் நூற்றுக்கு 90 சதவீதம் ஆண்கள் தலையை சுத்தமாக மழித்திருப்பதுதான். பெண்களும் நிறைய பேர் மொட்டைத்தலையுடன்தான் இருக்கிறார்கள். இயற்கையாக இவர்கள் முடி மிகவும் சுருட்டையாகவும், மெலிதான் பஞ்சு போல் இருப்பதாலும், படிவதில்லை. முடி நிறைய வளர்ந்தால் கிட்டத்தட்ட சாய்பாபா style ல் வளர்கிறது.சிறு வயதிலிருந்தே இப்படி தலையை மழித்து மழித்து, லேசாக முடி வளர்ந்தாலே இவர்களுக்கு அரிக்க ஆரம்பித்துவிடும். உடனே வீட்டில் அவர்களாகவே மொட்டையடித்துக் கொள்கிறார்கள்.

பெண்கள், பள்ளியில் படிக்கும் போது முடி வைத்துக் கொள்ளக்கூடாது என பல பள்ளிகள் கட்டுப்பாடு வைத்துள்ளன. ஒரு இஞ்ச் வரை அனுமதிக்கிறார்கள். இவர்கள் முடியே வெட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அது தோள்பட்டைக்கு கீழே வளர மாட்டேனென்கிறது. அதுவும் அருக்காணி Style ல் தூக்கிக்கொண்டு இருக்கிறது. இப்படி அடங்காமுடியாகவும், கொஞ்சமாகவும் வளர்வதால், முடியை அலங்காரம் செய்ய நிறைய பணமும், நேரமும் செலவிடுகிறார்கள். நாடு நெடுக முடியலங்கார நிலையங்கள் இருக்கின்றன, எப்போதும் கூட்டத்துடன்.


 
 
 
 

முடியை ஒருவிதமான Lotion தடவினால்தான் கொஞ்சமாவது படிகிறது. அதன் பின் கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவழித்து, மெலிதான சிறு சிறு சடைகளாகத் திரித்து அலங்கரித்துக் கொள்கிறார்கள். இதில் உபரி வசதி ஒன்றும் இருக்கிறது, தலை முழுக வேண்டாம். சென்ட் கொஞ்சம் சேர்த்து அடித்துக் கொண்டால் போதும்.

ஆப்பிரிக்காவில் முழுக்க முழுக்க கருப்பர்கள்தான் இருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இங்கே நிறைய கலப்பின மக்களும் இருக்கிறார்கள். முக்கியமாக, அரேபிய-ஆப்பிரிக்க கலப்பு. இவர்களை சவுதாரா எனக் குறிப்பிடுகிறார்கள்.இந்திய ஆப்பிரிக்க கலப்பும் இருக்கிறது. சவுதாராக்கள், வெள்ளையாக சற்றே செம்பட்டையான, லேசான சுருட்டைத்தலையுடன் இருக்கிறார்கள்.இவர்கள் போக பக்கத்து, கென்ய, சோமாலிய நாட்டினரும் இருக்கிறார்கள். சோமாலியர்கள் கிட்டத்தட்ட இந்தியர்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள். இவர்களைத் தவிர, சில ஆப்பிரிக்கர்கள் பிளீச் செய்து, கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது, ஒரு விதமான பிங்க் நிறத்தில் வினோதமாக் காட்சியளிக்கிறார்கள்.

உகாண்டாவின் பாரம்பரிய உடையை வயதானவர்கள் மட்டுமே உடுத்துகிறார்கள். அதுவும் கிராமங்களில் இருப்பவர்கள் மட்டுமே. மற்றபடிக்கு எல்லோருமே மேற்கத்திய உடைகள்தான். மாற்றங்களை எளிதில் ஏற்றுக் கொள்கிறார்கள். மொழியும் அப்படித்தான்.எளிதில் வசப்படுபவர்கள் போலிருக்கிறது.

நம்மையும்தான் வெள்ளைக்காரன் 200 வருடங்கள் ஆட்சி செய்தான். இருந்தாலும் நம்மவர்களால் ஏன் ஒழுங்காக எல்லோராலும் பிழையின்றி ஆங்கிலம் பேச முடிவதில்லை?? என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஆந்திர நண்பர் ஒருவர், கடையில் வேலை பார்ப்பவர்களை அடுத்த நாள் காலையில் சற்று நேரம் முன்னதாக வர வேண்டும் என சொல்ல விரும்பினார். அதற்கு அவர் சொன்னது...

"Yesterday everybody should come on 8 o' clock. Nobody should told funny funny reasons".

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இவர் சொன்னதைப் புரிந்து கொள்ளவே 10 நிமிடங்கள் தேவைப்பட்டன.இவர், இதற்குப் பேசாமல் சைகை பாஷையிலேயே சொல்லியிருந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

அடுத்த பதிவில்...

நாலு நாளா, நாலப் பத்தி யோசிக்க வச்சிட்டாரு நம்ம மணியன்... Posted by Picasa