India

Uganda

United Kingdom

Malaysia

24. உகாண்டா நிலவரம்.... கலவரம்???

சனி, மே 20, 2006

அங்கே தமிழ்நாட்டில், கலைஞர் ஆட்சியேற்பதற்கு முந்தின நாள் சாயங்காலம், இங்கே, முசிவேனி மூன்றாம் முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். அங்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நாளில், இங்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்கள் கழிந்து...

கடந்த 20 ஆண்டுகளில் முசிவேனி, பதவியேற்கும் நான்காவது விழா இது. 1985 ல் Milton Obote யிடமிருந்து, பதவியைப் பறித்த,Titi Okello விடமிருந்து நாட்டைக் காப்பாற்ற National resistance Army (NRA) புரட்சிக்குப் பின், 1986 இந்திய குடியரசு தினத்தன்று, முதன் முதலாகப் பதவியேற்றார். அதன் பின் முறையாக தேர்தலில் பங்கேற்று, 1996 லும், 2002 லும். இந்த பிப்ரவரியில் நடந்த இந்த Multi Party தேர்தல், உகாண்டா அரசியல் சரித்திரத்தில் ஒரு முக்கியமான் நிகழ்வு. முசிவேனிக்கு 58% ஓட்டுகளும், அவரை எதிர்த்த Forum Democratic Change (FDC)ஐ சேர்ந்த Col. Dr. Kissa Besigye க்கு 37% ஓட்டுகளும் கிடைத்தன.

நிறைய பக்கத்து நாட்டு அதிபர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியும், நிறைய பேர் வராமல் போனது, ஆப்பிரிக்காவில் முசிவேனியின் செல்வாக்கு மங்குவதைக் காட்டியது. ஒரு காலத்தில், ஆப்பிரிக்க மக்களுக்கு மட்டுமல்லாது, பல ஆப்பிரிக்க அதிபர்களுக்கே உதாரண புருசனாக இருந்தவர், 20 வருட தொடர் ஆட்சியின் முடிவில் களையிழந்து காணப் படுகிறார்.

தொடர் மின்சாரத் துண்டிப்பு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதைச் சரிக்கட்ட கருமாவிலும், புஜகாளியிலும் 2010 க்குள், அணைகள் கட்ட வேண்டும். அது போக, நம்மூரில் வீரப்பன் இரண்டு மாநில போலீசுக்குத் தண்ணீர் காட்டியது போல, இங்கே Kony என்னும் புரட்சிக்காரன் Lords Resistance Army (LRA)என்னும் அமைப்பை வைத்துக் கொண்டு, தெருவோர அனாதைச் சிறுவர்களைக் கடத்திக் கொண்டு போய் பயிற்சியளித்து, உகாண்டா, காங்கோ இரண்டு நாட்டு ஆட்சியாளர்களின் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். உகாண்டா அமெரிக்க தூதரகமே இந்த வருட இறுதிக்குள், கோனியின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவோம் என்று அறிவிக்குமளவுக்கு அண்ணன் ஃபேமசாகி விட்டார். அங்கே நடந்தது போலவே இங்கேயும், பொது மன்னிப்பு கொடுக்கலாமா கூடாதா என்று, ரேடியோதோறும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த உகாண்டா வீரப்பனைப் பற்றி தனிப் பதிவு போடலாம் என்றிருக்கிறேன்.

மற்ற படிக்கு, மழைக்காலம் துவங்கி விட்டாலும், சென்ற ஆண்டைக் காட்டிலும், மிகக் குறைவாகவே பெய்கிறது. லேக் விக்டோரியாவிலும் தண்ணீர் மட்டம் எதிர்பார்த்த படிக்கு ஏறவில்லை. இங்கே மின்சார வினியோகம் UMEME என்கிற தனியார் வெளி நாட்டுக் கம்பெனி வசம் இருக்கிறது. குறைந்த அளவே மின்சாரம் உற்பத்தி செய்ய முடிந்த போதிலும், அதே செலவு ஆவதால், 37% மின்கட்டண உயர்வு தடுக்க முடியாதது என்ற நல்ல செய்தியை அறிவித்துள்ளது. சுத்தமாக மின்வினியோகத்தைத் துண்டித்து விட்டு, அதே செலவாகிறது என்று, இன்னும் கட்டணத்தைக் கூட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது...

23. காணாமல் போன பதிவு...

திங்கள், மே 01, 2006

பிளாக்கரில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. இந்தப் பதிவு இரண்டு முறை வெளியிட்டும், டாஸ்போர்டில் தெரியவே மாட்டேனென்கிறது. பின்னூட்ட்மும் வேலை செய்ய மாட்டெனென்கிறது ( தகவல் நன்றி துளசி மேடம்). மூன்றாவது முறையாக முயற்சிக்கிறேன். வருகிறதா பார்க்கலாம.
================================================================

நிறைய நாட்கள் எந்தப் பதிவும் போடாததால், சந்தோசப் படுகிற மக்கள்தொகை அதிகமாகிவிட்ட செய்தி கிடைத்ததனால் அவசர அவசரமாக இந்தப் பதிவு

கொஞ்சம் கொஞ்சமாகவாவது மழை பெய்வதால், 62 மணி நேரத்தில், 48 மணி நேரம் மின்சாரம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சந்தோசம் மனதைத் தொடும் முன்னரே 3 நாட்களுக்கு தண்ணீரைத் துண்டித்து புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறது தண்ணீர் வாரியம். கஷ்டத்தைப் போக்க ஒரே வழி, மழை பெய்யும் போது, ஏதேனும் அலுவலக காரணத்தைச் சொல்லி வெளியில் சுற்ற வேண்டியதுதான். மழையில் நனைந்த மாதிரியும் ஆயிற்று, குளித்த மாதிரியும் ஆயிற்று. வீடு நாறத் தொடங்கும் முன்னர், தண்ணீர் கிடைக்க உட்டாலக்கடி சாமியாரை வேண்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.


ோடா போடா காரர்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்தால், அன்றைய தினம் கழுவிக் கொள்ள ஒரு ஜெரிக்கானில் (கேனில்) தண்ணீர் கிடைக்கிறது. குளிக்க மழையையும், கழுவ போடா போடா காரர்களையும் நம்பி பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
================================================================

சரி ரொம்ப போரடிக்கிறதே இவர்களிடம் ஏதாவது கதையடித்து நேரத்தைப் போக்கலாம் என்று முடிவு செய்தேன்.முந்தா நாள் சேம்பியன்ஸ் ட்ரோபியில் பார்சிலோனா வெற்றி பெற்றதை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அவர்கள் சந்தோசத்தில் பங்கு கொள்ள எண்ணி ரொணால்டோ சூப்பரா விளையாடினாருல்ல (ஏதோ நமக்கு தெரிஞ்ச நாலஞ்சு பேரில ஒண்ணு...நல்லவேளை பீலே கலக்கினாருல்ல என்று சொல்லவில்லை...)என்று சொல்லி அசடு வழிந்த போது, அவர்கள் பார்த்த பார்வையில் இருந்தது இளக்காரமா அல்லது பரிதாபமா என்று தெரியவில்லை. இங்கே நான் சந்திக்கும் இரண்டாவது பிரச்சினை இது.முதலாவது, இந்தி தெரியாதது, இரண்டாவது, கிரிக்கெட் மட்டுமே தெரிந்திருப்பது.இந்தி பேசுரவன்கிட்ட சகஜமா பேச முடியல, ஏன்னா நமக்கு இந்தி தெரியாது. சரி இங்கிலீஸ் பேசுர ஆப்பிரிக்கன் கிட்ட பேசலாம்னா அவனுக்கு பிடிச்ச விசயங்கள்ல நமக்கு பரிட்ச்யம் இல்லை. கவுண்டர் சொன்ன மாதிரி, கல்லக் கண்டா நாயக் காணோம், நாயக் கண்டா கல்லக் காணோம்...

கிளப் மாட்சிற்கே இந்த ஆட்டம் ஆடுபவர்கள் உலகக் கோப்பைக்கு என்ன ஆட்டம் ஆடுவார்களோ தெரியவில்லை. அதற்குள்ளாகவாவது, யார் யார் எந்த டீமில் விளையாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.எந்த பார், ரெஸ்டாரண்ட், ஹோட்டல் என எங்கு சென்றாலும் TV யில் கால்பந்துதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இது போக சில இடங்களில், பெரிய திரையில் வேறு காட்டுவார்களாம்.
================================================================

சரி விளையாட்டை விடுங்கள், சாப்பாடு பற்றி பேசலாம் என்றால், இவர்கள் உண்பது, மட்டோக்கி எனப்படும், வாழைக்காயை நன்றாக வேக வைத்துத் தயாரிக்கப்படும் ஒரு வஸ்து, போஷோ எனப்படும், நம்மூர் குழைந்த பச்சரிசி சாதத்திற்கும், இட்லிக்கும் இடையிலான ஒரு தயாரிப்பு, மற்றும் ஆப்பிரிக்கன் சப்பாத்தி எனப்படும், ரப்பர் தட்டு போன்ற ஒரு சமாச்சாரம் என நமக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது... பற்றாக்குறைக்கு, இவர்களுக்கு உரைப்பு என்று உச்சரித்தாலே கண்ணில் தண்ணீர் வந்துவிடும்...நம்மவர்கள் அதிகமாக காரம் சேர்த்துக் கொள்வதைப் பற்றிக் கிண்டலடிக்கிறார்கள்..(இந்தியர்கள் கழிவறையில் ஏன் டிஸ்யூ பேப்பர் உபயோகிப்பதில்லை தெரியுமா? இவர்கள் உண்கிற காரத்திற்கு, பேப்பரை அங்கே வைத்தவுடன் தீப்பற்றிக் கொள்ளும்..)

இந்தி படிப்பதை விட கால்பந்து பற்றி அறிந்து கொள்தல் சுலபம் என்று தோன்றுகிறது... இவை எல்லாவற்றுக்கும் மேலாக பார்க்கலாம், இன்னும் எத்தனை நாளுக்கு வருண பகவானும், போடா போடாகாரர்களும் கருணை காட்டுகிறார்கள் என்று...