India

Uganda

United Kingdom

Malaysia

47. மலேசியா பாதுகாப்பான நாடா?

வியாழன், பிப்ரவரி 05, 2015

மலேசியாவிற்கு வரப்போகின்றோம் என்று முடிவானவுடனே மலேசிய நிலவரங்களை அறியும் பொருட்டு நண்பர்கள் பலருடனும் பேசினேன். அனேகமாக எல்லோருமே முதன்மையாகக் குறிப்பிட்டது திருட்டு பயம் பற்றியது. நகைகளை அணிய முடியாது, கைபேசி, காமெரா உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை யாரும் பார்க்கும்படி பொது இடங்களில்  உபயோகிக்க முடியாது என்றெல்லாம் கூறினர். இவையெல்லாம் பொது இடங்களில் உபயோகிக்காமல் வேறெங்கு உபயோகிப்பதாம்?

எப்படியோ வந்து சேர்ந்தாகி விட்டது. பல்கலைக்கு முதல் நாள் சென்றபோது, லாப்டாப்பை எடுத்துச் சென்றேன். கண்டனக்குரல்களும் அறிவுரைகளும் பல திசைகளிலிருந்தும் பறந்து வந்தன. அதில் ஒருவர் மேலதிக உரிமையோடு, "உங்களுக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்... இப்படி எல்லோருக்கும் தெரிகிற மாதிரி எடுத்து வரவேண்டியது, அப்புறம் அய்யோ போச்சே என்று அழ வேண்டியது" என்றார். என் பல்கலை வீட்டிலிருந்து நடக்கும் தொலைவிலேயே இருக்கிறது... முதல் நாள் நடந்தே சென்றேன். சாயங்காலம் 6 மணிக்கு மேல் நடந்து போகாதீர்கள் என்றார் இன்னொருவர். வேறு எப்படிச் செல்வதாம்? ஏதாவதொரு நண்பருடைய காரில் செல்ல வேண்டுமாம். 250 மீட்டர் நடந்தால் நான் குடியிருக்கும் condominium-ன் சுற்றுச்சுவர் வந்துவிடும். நம்புங்கள்... அந்த தூரத்திற்கு taxi-ல் சென்றிருக்கிறேன். குறைந்தபட்சக் கட்டணமான மூன்று ரிங்கெட்டுகள் கொடுத்து. வந்த ஒரு வாரத்திற்குள் ஒரு நண்பரொருவருடைய தங்கச் செயின் பறிபோயிற்று. உண்மையில் அடுத்த விமானத்தில் ஊரை விட்டுப் போய்விடலாம் என்ற எண்ணம் கூடத் தோன்றியது.  சில பல குடும்பக் காரணங்களால் அப்படியெல்லாம் செய்ய முடியவில்லை. இன்றும் பல்கலையில் புதிதாகச் சேருபவர்களிடம் இத்தகைய அறிவுரைகளே அதிகமும் போய்ச் சேருகின்றன.

ஆனால் உண்மை நிலைதான் என்ன? மலேசியா அவ்வளவு பாதுகாப்புக் குறைவான‌ நாடா? அது நீங்கள் எந்த நாட்டுடன் மலேசியாவை ஒப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நான் தங்கியிருந்த நாடுகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். மலேசியா வருவதற்கு முன்னர் சிங்கப்பூரில் மூன்று மாதங்கள் இருந்திருக்கிறேன். கண்டிப்பாக சிங்கப்பூருடன் ஒப்பிட்டால் மலேசியாவில் பாதுகாப்பு குறைவுதான். ஆனால் சிங்ப்பூருடன் ஒப்பிட்டால் உலகில் பெரும்பாலான நாடுகளில் பாதுகாப்பு மிகவும் குறைவே. உகாண்டாவில் நான் இரண்டேகால் வருடங்கள் தங்கியிருந்திருக்கிறேன். உகாண்டாவுடன் மலேசியாவை ஒப்பிடுதல் என்பது சரியாக இருக்காது. உகாண்டாவை ஏனைய ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடலாம், ஆனால் மலேசியா போன்ற ஒப்பீட்டளவில் மிகவும் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. உகாண்டா கிழக்காப்பிரிக்காவில் மிகவும் பாதுகாப்பான நாடாகக் கருதப்படுகிறது என்பது உபதகவல்.

இங்கிலாந்தில் 5 வருடங்களுக்கு மேல் இருந்திருக்கிறேன். இங்கிலாந்து மலேசியாவை விடப் பாதுகாப்பான நாடா? இதற்குப் பதில் ஆம் மற்றும் இல்லை. இங்கிலாந்தில் மலேசியாவை விட petty crime கம்மிதான், ஆனால் சுத்தமாக இல்லை என்று கூறி விட முடியாது. நம்புங்கள்... வெறும் ஒரு பவுண்டு நாற்பது பென்ஸ் விற்ற பெட்ரோலை என் வண்டியிலிருந்து திருடியிருக்கிறார்கள். 10 லிட்டர் பெட்ரோல் மட்டுமே என் வண்டியிலிருந்தது. டாங்கிலிருந்து இஞ்சின் செல்லும் டியூபை வெட்டி திருட முயன்றிருக்கிறார்கள். அந்த டியூபை மாற்றுவதற்கு நான் 100 பவுண்டுகள் செலவு செய்தேன். என்னுடைய நண்பர் சூப்பர் மார்கெட்டிலிருந்து வேலையிலிருந்து திரும்பும் போது இரண்டு முறை தாக்கப் பட்டிருக்கிறார், பணத்திற்காக. ஆனால் இவை அரிதான சம்பவங்களாகவே என் நினைவில் நிற்கின்றன. ஆனால் மலேசியாவில் கத்தி முனையில் பணம் மற்றும் நகைகளை இழந்த கதைகளை மிக அதிகமாகக் கேள்விப் படுகிறேன். பெரும்பாலும் தனியாக ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் நடந்து செல்பவர்களே பாதிக்கப் படுகிறார்கள். காரில் செல்வது ஒப்பீட்டளவில் மட்டுமே பாதுகாப்பானது. காரில் செல்பவர்கள் traffic light-ல் நிற்கும் போது helmet-ஆல் கார் கண்ணாடியை உடைத்துத் திருடுகிறார்கள். ஆனால் இங்கிலாந்தை விட, துப்பாக்கிக் கலாச்சாரம் குறைவு என்றே நம்புகிறேன். அவ்வளவாகக் கேள்விப்படவில்லை. இந்தியாவுடன் மலேசியாவை ஒப்பிடலாமா? லாம்... ஆனால் வேண்டாம்... நமக்கே தெரியும்தானே...

8 கருத்துகள்:

தனிமரம் சொன்னது…

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதி ஆனால் ஓப்பீடு சரியில்லை. மலேசியா பாதுக்காப்பான நாடு நான் பார்த்தவரை!

5:24 முற்பகல்
துளசி கோபால் சொன்னது…

எங்க மலேசியப்பயணம் முழுசும் கழுத்துச்செயினைக் கழட்டி பையில் வச்சுருங்க. வளையல்? ஐயோ... கையையே வெட்டிக்கிட்டு போயிருவான்....

போதும் போதுண்டா சாமின்னு ஆகிப்போச்சு. பயத்துடனேயே பயணம் முடிஞ்சு சிங்கை வந்து இறங்குனதும்தான் பாதுகாப்பாக உணர்ந்தோம்.

இங்கே எங்க ஊரில் காசுமாலை போட்டுக்கிட்டுக் கடைக்குப்போனாலும் யாரும் சட்டையே செய்யமாட்டாங்க. அது இன்னொரு சோகம்:-))))

6:22 முற்பகல்
sivaje36 சொன்னது…

நீங்க சொல்வதில் சில உண்மைகள் இருக்கு. சில கற்பனைகள் .ரொம்ப நன்றி

9:02 பிற்பகல்
sivaje36 சொன்னது…

நீங்க சொல்வதில் சில உண்மைகள் இருக்கு. சில கற்பனைகள் .ரொம்ப நன்றி

9:03 பிற்பகல்
துபாய் ராஜா சொன்னது…

இந்தியாவைப் போலவே மலேசியாவிலும் நகரங்களை விட கிராமங்களே பாதுகாப்பானவை.

8:54 பிற்பகல்
Ram சொன்னது…

//ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதி ஆனால் ஓப்பீடு சரியில்லை. மலேசியா பாதுக்காப்பான நாடு நான் பார்த்தவரை!//

உண்மைதான். நான் சொல்ல வந்ததும் அதுவே... இங்கே நண்பர்கள் தேவைக்கு அதிகமாக, நிறைய பயமுறுத்துகிறார்கள். ஆகவே வந்த புதிதில் அதீத கவனத்துடன் இருக்கும்படி ஆயிற்று. இன்று கூட நடந்து செல்லும் போது ஒரு தம்பதி காரை நிறுத்தி புத்ரஜெயா செல்லும் வழி கேட்டனர். சொன்னேன். அதைக் கவனித்துக் கொண்டிருந்த நண்பர் ஒருவர் நான் கவனமுடன் இருக்க வேண்டுமென்றும் இது போன்று வழி கேட்கும் பாவனையில் நம்மைக் கடத்திச் சென்று விடுவார்கள் என்றும் சொன்னார். "முடியலை" என்று வாய் விட்டே சொல்லி விட்டேன்.

9:13 பிற்பகல்
Ram சொன்னது…

//இங்கே எங்க ஊரில் காசுமாலை போட்டுக்கிட்டுக் கடைக்குப்போனாலும் யாரும் சட்டையே செய்யமாட்டாங்க. அது இன்னொரு சோகம்:-))))//

:-)))

9:15 பிற்பகல்
Ram சொன்னது…

//நீங்க சொல்வதில் சில உண்மைகள் இருக்கு. சில கற்பனைகள் .ரொம்ப நன்றி//

எது உண்மை, எது கற்பனைன்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும் ;-))) உங்களுக்கே தெரியும்ன்லாம் சொல்லாதீங்க... நிஜமாவே தெரியாமதான் கேட்கிறேன்.

9:18 பிற்பகல்