India

Uganda

United Kingdom

Malaysia

42. ஃபிலிம் காட்டுவது எப்படி!!!

ஞாயிறு, நவம்பர் 20, 2011

எனக்கு வெகு நாட்களாக லினக்ஸ் அடிப்படையிலான இயங்குதளத்தில் வேலை செய்யனும்னு ஆசைங்க. ஆனா பாருங்க, நான் ஒரு உயிரியல் வல்லுனனுங்க‌ (அடங்கொக்க மக்க..எம்புட்டு ஆசை!). இருந்தாலும் கணிப்பொறி-ல இந்தப் பசங்கள்லாம் ஆணி புடுங்கிறதப் பார்க்குறப்ப நாமலும் இப்படி பொட்டி தட்டுனா எப்படி இருக்கும்னு அப்பப்ப ஆசை வருமுங்க. ஆனா நம்ம பப்பெல்லாம்  இந்த சாஃப்ட்வேர் பண்ணாடைங்க கிட்டே வேகாதுன்னு நமக்கு நல்லாத் தெரியுமுங்க. அதனால எதையாவது அரைகுறையாவாவது படிச்சுட்டு, நம்மளைப் போன வீணாப் போன உயிரியல் வல்லுனனுங்க கிட்டேயே பீட்டர் விடனும்னு முடிவு பண்ணீட்டனுங்க. ஆனா அதிலேயும் பாருங்க, அங்கேயும் Bio-Statistics -ல (இதைத் தமிழல டைப் பண்ணா ரெம்ப காமெடியா இருக்குங்க..) வேலை செய்யுறவெனுங்க கிட்டேல்லாம் வெச்சுக்க முடியாதுங்க. இப்படில்லாம் சில பல ஆராய்ச்சிகள் பண்ணி யாருகிட்டேல்லாம் பீட்டர் உடனும்னு முடிவு பண்ணீட்டேங்க... ஆனா இந்த ஆராய்ச்சில்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமாத்தானுங்க அது நமக்கு உரைச்சது. அடடா இந்த மைக்ரோசாஃப்ட் ஆபீசை விட்டா நமக்கும் எதுமே தெரியாதே. இந்த எழவெடுத்த மைக்ரோசாஃப்ட் ஆபீசை எல்லாப் பண்ணாடைங்களும் நம்மளை விட நல்லா யூஸ் பண்ணுங்களேன்னு பல்ப் எரிஞ்சது. அப்போ வந்ததுதாங்க இந்த லினக்ஸ் ஐடியா... எப்படியாவது லினக்ஸ்சைப் படிச்சு இந்த அப்பாவி உயிரியல் வல்லுனனுங்க உயிரை எடுக்கிறதுன்னு முடிவு பண்ணீட்டேனுங்க... அதில பாருங்க, நாம ஒரு தடவை முடிவு பண்ணீட்டமுன்னா நம்ம பேச்சை எவனுமே கேட்க மாட்டானுங்க‌ (ஒரு காட்டன் டயலாக் கூட இல்லாம பதிவு போட்டா தற்கொலை பண்ணிக்கிடுவேன்னு அன்பா மிரட்டி லெட்டர் போட்ட திருப்பூர் சங்கருக்கு இந்த காட்டன் டயலாக் சமர்ப்பணம் - சமர்ப்பணம்னு ஏன் சொல்றேன்னா என்னோட முந்திய பதிவப் படிச்சுட்டு அய்யா அல்ரெடி மர்கயா!!).

சரி எப்படியாவது லினக்சைப் படிச்சுடலாம்னு, முதல்ல லினக்ஸை விண்டோஸுக்கு சைடியேயே இன்ஸ்டால் பண்ணினேன். ஆனா பாருங்க வயர்லெஸ், மவுஸ்லாம் வேலை செய்யலை. அதை எப்படி சரி பண்ணலாம்னு ஒரு நண்பரைப் பார்த்தேன். அவரு, எப்போப் பார்த்தாலும் ஒரு 27 இன்ச் ஆப்பிள் முன்னாடி உக்கார்ந்து சின்சியரா சாட் பண்ணீட்டு இருப்பார். அப்பப்போ நம்ம கிட்டே வந்து லினக்ஸ் ஐஒஎஸ் அப்படி இப்படின்லாம் பீலா உட்டிட்டு இருப்பார். சரின்னு அவர்கிட்டே இந்தப் பிரச்சினைகளைக் காட்டினா, அப்புறமாத்தான் தெரியுது, அவரு நம்ம கிட்டே உட்ட பீலால்லாம் அதுக்கு முந்தின நாளு நைட்ல மனப்பாடம் பண்ணீட்டு வந்ததுன்னு!!. நம்மளை மாதிரியே நிறைய பேரு இருக்காங்க போலிருக்கேன்னு நினைச்சுக்கிட்டு ஓடி வந்துட்டேன்.

சரி இது வேலைக்காகாதுன்னு, என்னோட நோட்பேடுல விண்டோசை எடுத்து விட்டுட்டு உபுண்டுவை இன்ஸ்டால் பண்ணீட்டேன். அதில மவுஸ் பிரச்சினை தீர்ந்தது. அப்புறம் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் ஆராய்ச்சி பண்ணி வயர்லெஸ் பிரச்சினையையும் சரி பண்ணீட்டேன். அப்புறமா பார்த்தா லினக்ஸ்ல மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் இல்லை. அதுக்குப் பதிலா ஓபன் ஆபீஸ்னு ஒன்னு இருந்தது. அது பார்கிறதுக்கு ஆபீஸ் மாதிரியேதான் இருந்தது. ஆனா பொறந்ததிலேருந்து மைசா (Microsoft ஐ சுருக்கி MS-னு வைக்கலாம்னா மைக்ரோசாஃப்ட்-ஐ சுருக்கி மைசா-ன்னு ஏன் வைக்கக் கூடாது?) ஆபீஸ் மட்டுமே யூஸ் பண்ணின எனக்கு ஓபன் ஆபீசைப் பார்த்த உடனே பிடிக்கலை. என்னடா செய்ய்லாம்னு வழக்கம் போல ஒன்றரை நாள் ஆராய்ச்சி பண்ணினா உபுண்டுல வைனை (WINE) இன்ஸ்டால் பண்ணினா மைசா ஆபீசையும் யூஸ் பண்ணிக்கலாம்னு தெரிஞ்சு அதையும் பண்ணீட்டேன். அப்புறமா இன்னொரு பிரச்சினை, விண்டோஸ்ல வலது பக்கம் இருக்கிற நிறைய விசயம் உபுண்டுல இடது பக்க இருக்குது. உதாரணமா ஏதாவது விண்டோவை மூடனும்னா பட்டன்லாம் இடது பக்கம் இருக்குது. இன்னொரு ஒன்றரை நாள், பட்டனெல்லாத்தையும் விண்டாஸ் மாதிரியே வலது பக்கத்துக்கு மாற்றியாச்சு. ஒரு வாரம் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் மாத்திட்டேன்.

விதைத்தாச்சு.. இப்போ அறுவடை பண்ணனும். மனைவி கிட்டே காட்டலாம், ஆனா அவள் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர். இருந்தாலும் பரவாயில்லைன்னு நம்ம புராடெக்ட் மேல் நம்பிக்கை (!) வச்சு, அவள் கிட்டேப் போய் "மனுசன் படைச்சதிலேயே உருப்படியான ரெண்டே விசயம். ஒன்னு நான், இன்னொன்னு நான் இன்ஸ்டால் பண்ணீருக்கிற இந்த உபுண்டு" அப்டீன்னு டயலாக் உட்டேன். நோட்புக்கை ஒரு பார்வை பார்த்துட்டு காறித்துப்பு விட்டாள். இப்படி எல்லாத்தையுமே விண்டோஸ் மாதிரி மாத்தி விண்டோஸ்ல இருக்கிற எல்லா சாஃப்வேரையும் இங்கே யூஸ் பண்றதுக்கு நீங்க விண்டோஸையே யூஸ் பண்ணலாமே, எதுக்கு உபுண்டு இன்ஸ்டால் பண்ணனும்னு செவுட்டில அடிச்ச மாதிரி கேட்டாள். இந்தக் கேள்வி கேட்டதுக்கு என்னை நீ கொன்னிருக்கலாம்னு சொன்னேன். சரீன்ட்டு அவ உடனே வெசத்தைத் தேடப் போய்ட்டா. நாலு பேர் கிட்டே பிலிம் காட்டனும்னு ஆசைப்பட்டது கடைசிலே உயிருக்கே ஆபத்தாயிப் போயிருச்சுங்க.... நீங்களே சொல்லுங்க, நான் பண்ணினது தப்பாங்க??? 

41. தொலைபேசி... லாப்டாப்.... இப்போ அமேசான் கிண்டில்

வெள்ளி, நவம்பர் 11, 2011

அது நடந்தது அனேகமாக கி.பி 2000 என்று நினைக்கின்றேன். என் நண்பன் அசோக் அந்த வஸ்துவை மிக மிக ஜாக்கிரதையாக பையிலிருந்து எடுத்தான். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை சிறிதாகக் கூட ஃபோன்களை உருவாக்க முடியுமா என்றே தோன்றியது. அதுவரை நான் பார்த்ததெல்லாம் கார்ட்லெஸ் போன்களும், கிட்டத்தட்ட அதே சைஸிலிருந்த (Nokia 5160 என்று நினைக்கிறேன்) செல்ஃபோன்களும்தான். என் நண்பன் காட்டியது Nokia 3310. முதல் தடவை பார்த்த போது அசந்தே போனேன். ஆனால் பாருங்கள் கடந்த‌ பத்து வருடங்களுக்குள் செல்ஃபோன்கள் எவ்வளவு மாறி விட்டன‌! Computer வகையறாக்களும் அதேயளவு ஆச்சர்யகரமான‌ மாற்றங்களையே கடந்த பத்தாண்டுகளில் அடைந்திருக்கின்றன. இரண்டும் ஒன்றினைந்து ஒரே பொருளாகவும் உருமாறி விட்டன. Computer களில் பேசுகின்றோம், செல்ஃபோனைக் கிட்டத்தட்ட Computer போல உபயோகிக்கின்றோம்.

இந்த அதீதமான தொழில்நுட்ப வளர்ச்சி எனக்கு சில சம‌யங்களில் எரிச்சலாகவே இருக்கின்றது. எப்போதுமே எல்லோருடைய‌ தொடர்பு எல்லைக்குள்ளாகவே இருக்கின்ற ஒரு உணர்வு. சமயங்களில் மனிதர்களின் பெயருக்குப் பதிலாக இனிமேல் நம்பர்களே நினைவில் நிற்குமோ என்று கூடத் தோன்றுகிறது. அதிலும் இந்த Smart Phone கள் வந்த பின்பு நிலைமை இன்னும் மோசம். மெயில் பார்ப்பதிலிருந்து, டிவி பார்ப்பது வரை அதிலேயே நடக்கின்றது. மெயில் அலர்ட் வேறு... ஒரு கட்டத்தில் எரிச்சலாகி ஒரு Nokia 1508 வாங்கி விட்டேன். ஆனால் அதை வெளியிடத்தில் உபயோகிக்கத் தயக்கமாக இருக்கின்றது. நம்மை ஏதோ சிந்து சமவெளியிலிருந்து வந்திருப்பவ‌னைப் போல் பார்க்கின்றனர். ஆனால் அவ்வப்போது உபயோகித்தே வருகின்றேன்.

இந்த அதீதமான மாற்றங்களினால் இன்னொரு பிரச்சினையும் தோன்றியது. நமக்கு சும்மாவே மனசு அலைபாயும் (சும்மாவா யூத்துல்ல!!!)... ஹலோ, ஹலோ... தப்புத் தப்பால்லாம் யோசிக்காதீங்க... படிப்பில் ஃபோகஸ் பண்றதைச் சொன்னேன். ஒரு மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது 4 மணி நேர புகைவண்டியில் பயணிக்க வேண்டிய கட்டாயம் (போக வர மாதம் 4 அல்லது 6 முறை). அப்போதெல்லாம் என்னுடைய லாப்டாப்பையும் தூக்கிக் கொண்டே அலைவேன். பயனத்தின் போது படிக்கலாம் பாருங்கள். ஆனால் கடந்த இரண்டரை வருடங்களாக அது ஒழுங்காக நடந்ததே இல்லை. வடிவேலு சொல்வதைப் போல, பிகினிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கும் ஆனா ஃபினிசிங்தான் சரியா இருக்காது. முதல் அரை மணி நேரம் ஓகே. அப்புறம், சரி பாட்டுக் கேட்டுக்கிட்டே படிக்கலாமேன்னு தோணும், அப்புறம், சரி போரடிக்குதே, அந்தப் படத்தை கொஞ்ச நேரம் பார்க்கலாமேன்னு தோணும். அப்புறம் படிச்ச மாதிரிதான்...

இதுக்கு என்னா செய்றதுன்னு யோசிச்சுக்கிட்டு இருந்த போதுதான் அமேசான் கிண்டிலைப் பத்திக் கேள்விப்ப்ட்டேன். படிக்கிறதைத் தவிர வேற எதுவும் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம் என்ன உடனே வாங்கிட்டேன். உண்மையிலேயே சொல்றேன். அடுத்த புகைவண்டிப் பயணத்துல நல்லா உபயோகமாச்சு. மூன்றரை மணி நேரம் படிக்கிறதுல மட்டுமே போச்சு. நல்ல உபயோகமான ஒரு பொருளை வாங்கினேன்னு ஒரு திருப்தி இருக்கு. ஆனா பாருங்க, இப்ப படிப்பை முடிச்சுட்டதினால, மனைவி இருக்கிற ஊருக்கே வந்திட்டேன். இப்போ புகைவண்டிலேயே பயணிக்கிறதில்லை. கிண்டில் வீட்டிலே சும்மாதான் இருக்கு.

40. மற்றுமொரு இடைவேளை

செவ்வாய், நவம்பர் 08, 2011

2007 February -ல் கூட நான் மேற்படிப்பு படிப்பேன் என்பது எனக்குத் தெரியாது. 1998-ல் B.Pharmacy முடித்த பின் ஒரு நாள் கூட Pharmacist ஆகப் பணிபுரியாமல் Marketing-ல் சேர்ந்தேன், பணம் அதிகமாகக் கிடைக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக. நான்கு வருடங்கள் பட்டப்படிப்பு முடித்தவனுக்கு, அரசாங்க வேலைக்கு வாய்ப்பே இல்லை. தனியார் மருத்துவமனையில் 2,000 முதல் 4,000 ரூபாய் வரையும், மருந்துக் கம்பெனிகளில் Production Chemist-ஆகச் சேர்ந்தால் கிட்டத்தட்ட அதே அளவுக்கும்தான் காசு வரும். மருந்துவப் பிரதிநிதி வேலைக்குத்தான் 8,000 முதல் 10,000 ரூபாய் வரை கிடைத்தது.

ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வேலை செய்யலாம் பின்னர் வேறு வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்துச் சேர்ந்தேன். அது ஐந்தரை வருடங்களாக நீண்டு விட்டது. கடைசி கடைசியில் வேலையில் ஆர்வம் சுத்தமாகக் குறைந்து விட்டது. வேறு வேலைக்குப் போக வேண்டுமென்றால் அதற்கான முனைப்பு வேண்டும். இந்த வேலையில் இருக்கும் வரையிலும் வேறு வேலை தேட முடியாது என்று தோன்றிய போது,  வேலையை விட்டு விட்டேன், வேறு வேலை கிடைக்கும் முன்னரே. கிட்டத்தட்ட 5 மாதங்கள் வெளி நாடுகளுக்குச் செல்ல முயற்சி செய்தேன். அப்போதும் மேலே படிக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லை.

ஒரு வழியாக என் நண்பன் ரஜினிகாந்த்தின் உதவியுடன் உகாண்டாவிற்குச் சென்றேன். Pharmacy Manager-ஆக. அங்கே இரண்டரை வருடங்கள். அந்த வேலையை மிகுந்த ஈடுபாட்டுடனே செய்து வந்தேன். இந்தமுறை பிரச்சனை மலேரியா மூலம் வந்தது. இரண்டரை வருடங்களில் கிட்டத்தட்ட 6 முறை மலேரியா வந்து படுத்தியது. அதிலும் ஒருமுறை Falciparum மலேரியா வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் அவதிப்பட்டேன். மற்றோரு பிரச்சினை திருமணத்திற்குப் பெண் கிடைக்காமலிருந்ததில் வந்தது. உகாண்டா என்றதுமே எல்லாப் பெண் வீட்டாரும் பின்வாங்கினர்.
 
மீண்டும் வேறு ஏதாவது வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தபோதுதான் என் தம்பி பிரிட்டனுக்கு வந்து விடு என்றான். அப்போது என் நண்பன் மணிகண்டன் மான்செஸ்டர் பல்கலையில் Ph.D படித்துக் கொண்டிருந்ததால் அவனைத் தொடர்பு கொண்டேன். அவன் முயற்சி எடுத்து பல Supervisor களிடம் தொடர்பு கொண்டு Cancer Biology-ல் இடம் வாங்கிக் கொடுத்தான். 2007 ஜூலையில் மான்செஸ்டர் பல்கலையில் சேர்ந்தேன். நான்கு வருடங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. 2010 ஜூனில் Thesis முடித்து செப்டம்பரில் Viva-ம் முடித்து, அக்டோபரில் Corrections-ம் முடித்தாயிற்று. இதனிடையில் கிடைத்த 6 மாத Research Assistant வேலையும் சரியாக் அக்டோபரில் முடிந்தது. Ph.D யில் செய்த வேலையையும் பேப்பருக்கு அனுப்பியாகி விட்டது. மீண்டும் வேலை தேடும் படலம். கையில் Ph.D இருப்பதால் இம்முறை தைரியமாகவே இருக்கிறேன். பார்க்கலாம்...

39. சில புரியாத விசயங்கள்...

ஞாயிறு, ஜூலை 31, 2011


என்னை மிகவும் கோபமுண்டாக்கும் செயல்களில் ஒன்று ஆய்வகத்தில் அடுத்தவர்கள் என் அனுமதியில்லாமல் என்னுடைய பொருட்களை உபயோகப் படுத்துவது.  ஏனென்றால் எடுத்த பொருட்களை திருப்பி வைக்கவும் மாட்டார்கள், நம்மிடம் சொல்லவும் மாட்டார்கள். நம்முடைய உபயோகத்திற்காக அவசரமாகத் தேடும் போது அவை இருக்காது. இது நம்மை மிகவும் எரிச்சலூட்டுவதோடு மட்டுமல்லாமல் வேலையையும் பாதிக்கும். ஆனால், நிறைய பேர் வேலை பார்க்கும் இடங்களில் ஒழுங்கு என்பதை அதிகமும் எதிர்பார்க்க முடியாது. அதுவும் ஆய்வகங்கள் போன்ற கூடுதலாக ஒழுங்கு தேவைப்படும் இடங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த விசயத்தில் எங்களுடைய ஆய்வகத்தில் இருக்கும் சீன மாணவன் மீது எனக்கு மிகவும் மனவருத்தம் உண்டு. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" கொள்கையில் மிகவும் பிடிப்புள்ள மாணவன். எல்லோருடைய பொருட்களையும் தன்னுடைய பொருட்களாகவே எண்ணும் பரந்த மனப்பான்மை கொண்டவன். எடுத்த பொருட்களை திருப்பியும் வைக்க மாட்டான். ஆனால் நாம் அதை விசாரிக்கத்தால் உடனடியாக மன்னிப்புக் கோரும் உயரிய பண்புடையவன். ஆனால் திரும்ப‌வும் அதே தவற்றை மீண்டும் மீண்டும் செய்யத் துணிந்தவன். "Sorry" என்ற அந்த ஒற்றை வார்த்தை சகல தவறுகளையும் செய்யும் அதிகாரத்தை அவனுக்கு வழங்கியிருந்தது. ஆனால் மற்றபடிக்கு மிகவும் நல்ல பையன். தானுண்டு தன்னுடைய Facebook உண்டென மகிழ்ச்சியாக வாழ்பவன். ஆய்வகத்தில் அவனே இளையவன். ஆகவே பல சமயங்களில் எனக்குத் தோன்றும், நாங்கள் அனைவரும் படிப்பை முடித்துச் சென்ற பிறகு இந்தப் பையன் என்ன செய்வானோ என்று. மிகவும் கஷ்டப்படப் போகிறான் என்று மட்டும் தோன்றும். ஒரு வழியாக அவனையும், புதிதாகச் சேர்ந்த மற்றொரு பெண்ணையும் தவிர அனைவரும் ஆய்வக வேலை முடிந்து, thesis எழுதச் சென்றுவிட்டோம்.

இடையில் ஒரு நாள் என்னுடைய Supervisor-ரைப் பார்க்க நான் அவருடைய அலுவகத்திற்குச் சென்றிருந்தேன். நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர், ஏதோ எடுக்க வேண்டுமென்று ஆய்வகத்திற்குள் சென்றார். திரும்பி வந்தபோது அவருடைய கிரேக்க முகம் முற்றாக வெளிறிப் போயிருந்தது. கிட்டத்தட்ட அழுகின்ற முகபாவத்திலிருந்தார். என்ன ஆயிற்று என்றேன். த‌ன்னுடைய ஆய்வகத்தையே காணவில்லை என்றார். ஆய்வகத்தில் ஒரு பொருளும் இல்லை, யாரோ ஒட்டுமொத்தமாக ஆய்வகத்தையே சுருட்டிக் கொண்டு போய் விட்டனர் என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படி யார் செய்யக்கூடும். அதுவும் இவருடைய அனுமதி இல்லாமல்... நான் சென்று பார்த்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஆய்வகத்தினுல் நுழைந்தேன்.

அங்கே நான் கண்ட காட்சி என்னால் நம்ப முடியாததாக இருந்தது. அவ்வளவு சுத்தமாக எங்கள் ஆய்வகத்தை நான் பார்த்ததே இல்லை. எல்லா கருவிகளும் சுத்தம் செய்யப்பட்டு ஒழுங்காக அதனதன் இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. காலி அட்டைப் பெட்டிகள் மற்றும் பனிக்கட்டி வைக்கப் பயன்படும் பெட்டிகள் ஒன்றையும் காண முடியவில்லை. Bufferகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு Canகளில் முழுவதுமாக நிரப்பப் பட்டிருந்தன. அந்தச் சீன மாணவன் இவையனைத்தையும் செய்திருப்பான் என என்னால் நம்பமுடியவில்லை. இத்தனை குப்பைகளையும் இத்தனை காலமாகப் பார்த்துக் கொண்டிருந்த Supervisor-ருக்கு அவை இல்லாமல் அவருடைய ஆய்வகமே அவருக்கு அடையாளம் தெரியாமல் போய்விட்டது. எனக்கும் வெட்கமாக இருந்தது. இவ்வளவு குப்பைகளையும் வைத்துக் கொண்டா நான் ஆய்வகத்தில் வேலை பார்த்திருக்கிறேன்... வெளியே வந்து Supervisor-ரிடம் விளக்கினேன். ஆய்வகம் நம்பமுடியாத அளவிற்குத் தூய்மையாக இருப்பதைச் சொன்னேன். அவரும் சமாதானமடைந்து பெருமூச்சு விட்டார். முகத்தில் மீண்டும் அமைதி குடிறேறியது.

ஆனால் எனக்குச் சில விசயங்கள் புரியவேயில்லை. அவன் ஏன் இவ்வளவு நாட்களும் இதைச் செய்யவில்லை? நாங்கள் அனைவரும் வெளியேறும் வரை ஏன் காத்திருந்தான்? இவ்வளவு ஒழுங்காக ஆய்வகத்தை வைக்கத் தெரிந்தவன், ஏன் நாங்கள் இருந்தவரையிலும் அத்தனை ஒழுங்கீனமாக நடந்துகொண்டான்? இவைகளுக்கு இன்னமும் விடை தெரியவில்லை எனக்கு.

38. இங்கிலாந்தில் ஓட்டளிக்கும் உரிமையை போராடி மீட்ட தமிழன்!!!

திங்கள், ஏப்ரல் 04, 2011

இங்கே போன ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கோடைகால நேரக் கணக்கு நடைமுறைக்கு வந்தது. அதாவது அன்றிலிருந்து இனி வரும் ஆறு மாதங்களுக்கு GMT+1 நேரம் யு.கே-ன் நேரமாகக் கணக்கில் கொள்ளப் படும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு GMT யு.கே-ன் நேரமாகக் கணக்கிடப் படும். இந்த நேர மாற்றம் முதலில் சில நாட்களுக்கு சற்றே குழப்பமாக இருக்கும். பின்னர் பழகிவிடும். இந்தியாவில் கோடை மற்றும் குளிர் காலங்களுக்கிடையே வித்தியாசம் கண்டறிவது வானிலை ஆய்வாளர்களுக்கே கடினமாக இருப்பதால் ஆணியே புடுங்க வேண்டாம் என்று அரசாங்கம் முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் இந்த மாதம் 13-ம் தேதி தேர்தலில் ஓட்டளிக்க முடியாதது வருத்தமாக இருக்கிறது. அதனாலென்ன இங்கே இங்கிலாந்துத் தேர்தலில் ஓட்டளித்து மகிழுங்கள் என்று காமன்வெல்த் குடிமக்களுக்கு மாட்சிமை பொருந்திய மகாராணி அறிவிவித்திருப்பதால் சற்றே சமாதானமடைந்து இருந்தேன். "நாங்கள் உங்கள் நாட்டை இருநூறு வருடங்களாக ஆண்டு உங்களை ஓட்டாண்டியாக்கிய துயரத்திலிருப்பதை உலகிற்கு அறிவிக்கும் பொருட்டு உங்களுக்கு சர்வ வல்லமையுடைய ஆங்கிலேய தேர்தல்களில் வாக்களிக்க உரிமையளிக்கிறோம்" என்று மகாராணியோ அல்லது ஏதோனும் ஒரு பிரதமரோ அறிவித்தது இங்கே வசிக்கும் ஒவ்வொரு காமன்வெல்த் குடிமகனுக்கும் தனித்தனியாக இல்லை. ஆனால் எனக்கு, எனக்கே எனக்கென கவுன்சில் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்மணி தன் கைப்பட, நான் ஒரு காமன்வெல்த் குடிமகனென்ற உரிமையில் என்னால் இங்கிலாந்துத் தேர்தலில் ஓட்டளிக்க முடியுமென்று கடிதம் எழுதியிருக்கிறார். அது எப்படியென்ற ஆவலைத் தாங்க முடியாதவர்கள் மட்டுமே இந்த மொக்கை கதையை மேலே படிக்க அனுமதிக்கப் படுகிறார்கள்.

இங்கே மே மாதம் 5-ம் தேதி கவுன்சில் தேர்தலும், இங்கிலாந்தின் பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றியமைக்க மக்கள் கருத்தை அறியும் கணிப்பும் நடக்க இருக்கிறது, அங்கே போய் நமது ஜனநாயகக் கடமை ஆற்றிவிட்டு வந்து விடலாமென்றிருந்தேன். தேர்தலை முன்னிட்டு தேர்தல் அட்டையையும் கவுன்சில் என் வீட்டிற்கு அனுப்பி விட்டது. ஆங்கிலக் குடிமக்களைத் தவிர எந்தக் குடியேறியும் எக்காரணம் கொண்டும் சந்தோசமாக இருக்கலாகாது என்று கன்சர்வேட்டிவ்கள் முடிவெடுத்திருப்பதால் கவுன்சில் அலுவலகத்திலிருந்து ஒரு பெண்மணி போன வாரம் என் வீட்டுக் கதவை தட்டினார். என் அடையாளங்களைச் சரி பார்த்த பின்னர் நான் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதால் என்னால் இந்தத் தேர்தலில் ஓட்டளிக்க முடியாது என்று கூறினார். எனக்கு தேர்தல் அட்டை வந்திருக்கும் செய்தியை அவரிடம் கூறி நான் காமன்வெல்த் தேசத்தைச் சேர்ந்தவன் என்பதையும், நான் ஏற்கெனவே பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டளித்திருப்பதையும் கூறினேன். ஆனால் பாவம் அந்தப் பெண்மணிக்கு இதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. நீங்கள் ஆங்கிலக் குடிமகனில்லாத காரணத்தால் ஆங்கிலத் தேர்தலில் ஓட்டளிக்க முடியாது என்று சொல்லி என்னுடைய தேர்தல் அட்டை தவறுதலாக அனுப்பப் பட்டிருக்கலாம் என்று அதன் மேலே நான் ஒரு இந்தியன் என்றும் என்ன விசாவில் இங்கே குடியிருக்கிறேன் என்றும் எழுதி தன்னுடன் எடுத்துச் சென்று விட்டார்.

இத்தனை காரியங்கள் செய்கிறாரே ஒருவேளை சட்டத்தை மாற்றி விட்டார்கள் போலிருக்கிறது என்று நானும் நினைத்தேன். ஆனால் இணையத்தில் தேடிய போது அது போல ஒன்றும் அறிவிக்கப் படவில்லை. எனக்கு சற்றே எரிச்சலாக வந்தது. அந்தப் பெண்மணியின் மேல் கவுன்சிலில் புகார் செய்யலாம் என்றால் அந்தப் பெண்மணியின் பெயரைக் கூட அன்று நான் கேட்கவில்லை. என்னடா இது நம் ஜனநாயகக் கடமைக்கு வந்த சோதனை என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அந்தத் தேர்தல் அட்டையிலிருந்த வாசகங்கள் நினைவுக்கு வந்தன. அதாகப்பட்டது, அவர்கள் அனுப்பிய தேர்தல் அட்டை வாக்காளர் அட்டை இல்லாமலும் என்னால் ஓட்டளிக்க முடியும். வேறு அடையாள அட்டைகள் இருந்தால் போதும், பாஸ்போர்ட் போல. அந்தப் பெண்மணி யார் என்னுடைய வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க, கண்டிப்பாக நான் ஓட்டுப் போட்டே தீருவேன் என்று நினைத்துக் கொண்டேன்.

நேற்று மாலை என் வீட்டு தபால் பெட்டியில் ஒரு கவர் கிடந்தது. என்னுடைய தேர்தல் அட்டை, கூடவே ஒரு கடிதம். நான் பிரேம் போட்டு மாட்ட வேண்டிய அந்த வரலாறு ஆவணம், அந்தப் பெண்மணி எழுதியது. நான் காமன்வெல்த் குடிமகன் என்ற உரிமையில் என்னால் ஆங்கிலேயத் தேர்தல்களில் ஓட்டளிக்க முடியும் என்று தன் கைப்பட எழுதியிருந்தார். இப்போது நீங்கள் பதிலளிக்க வேண்டியது என்னுடைய இரு கேள்விகளுக்கு. ஒன்று, இனி யாரேனும் உனக்கு இங்கிலாந்தில் ஓட்டளிக்கும் உரிமயை கொடுத்தது யார் என்று என்னிடம் கேட்க முடியுமா? இரண்டாவது, இதை விட மரண மொக்கையான கதை சொல்லியை நீங்கள் பார்த்ததுண்டா?

37. சீன அறிவியல் பத்திரிக்கைகளில் ஆய்வு முடிவுகளை வெளியிட மாட்டேன்... சீன மாணவன் சபதம்

திங்கள், ஜனவரி 24, 2011

எங்கள் ஆய்வுக்கூடத்தில் ஒரு சீன மாணவன் உண்டு. உண்மையில் கனடா தேசத்தவன். இவனுடைய‌ எட்டு வயதில் அவன் பெற்றோர் கனடாவிற்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் பத்து வருடங்களுக்குப் பிறகு ஹாங்காங்கிற்கே திரும்பி வந்து விட்டனர். பையன் கனடா பாஸ்போர்ட்டுடனும் சீன முகத்துடனும் இருப்பான். அண்மையில் இவன் விடுமுறைக்காக ஹாங்காங் சென்றிருந்தான். அப்போது அங்கு பார்த்தவற்றை அவன் சொல்லிய போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக சீனர்கள் காப்பியடிப்பதில் வல்லவர்கள் என்பது பெரும்பாலும் அனைவராலும் ஒத்துக் கொள்ளப் பட்ட விசயம். ஆனால் இந்த அளவுக்குச் செய்வார்களா என்று எனக்குச் சந்தேகமாக இருந்தது.

சீன அரசாங்கம் தற்போது தொழில்நுட்பக் கல்விக்கும், உயர் கல்வி ஆய்வுகளுக்கும் அதிகமான அளவில் நிதி அளித்து வருவது தெரிந்ததே. அதுபோக உலகமெங்கும் வியாப்பித்திருக்கும் சீன ஆய்வாளர்கள் தரமான ஆய்வுக் கட்டுரைகளை உலக அளவில் பிரபலமான பல ஆராய்ச்சிப் பத்திரிக்கைகளிலும் வெளியிடுகிறார்கள். ஆனால் இவர்கள் பெயரைக் கெடுக்கும் விதமாக சீனாவில் சிவ விசயங்கள் நடப்பதாக அந்த மாணவன் கூறினான். அதாகப் பட்டது, உலகின் பல மூலைகளில் இருக்கும் உயர்ந்த பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யப்பட்டு தரமான அறிவியல் பத்திரிக்கைகளில் வெளியிடப் படும் பல ஆய்வு வெளியீடுகளைக் காப்பியடித்து அவர்கள் பெயரில் சீனாவிலிருந்து வெளியாகும் பத்திரிக்கைகளில் வெளியிடுகிறார்களாம். அவைகள் பெரும்பாலும் சீன மொழியில் இருப்பதாலும், பிரபலமான பத்திரிக்கைகளாக இல்லாத காரணத்தாலும் வெளி உலகத்திற்குத் தெரிவதில்லை என்றான். ஆய்வாளர்களின் பெயரை மட்டும் மாற்றி விடுவார்கள், அல்லது ஆய்வு முடிவுகளை சற்றே மாற்றி வெளியிட்டு விடுகிறார்களாம். ஒரு போதும் சீன அறிவியல் பத்திரிக்கைகளில் தான் ஆய்வு முடிவுகளை வெளியிடப் போவதில்லை என்ற தகவலையும் கூறினான். இந்தியாவில் இதே மாதிரி ஏதேனும் நடக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள்.

36. 2011

ஞாயிறு, ஜனவரி 02, 2011

புது வருடப் பிறப்பை கடைசியாக எப்போது இந்தியாவில் கொண்டாடினேன்? 2005ல் என நினைக்கிறேன். 2006ல் கென்யா, 2007ல் ருவாண்டா, 2008ல் இங்கிலாந்து, 2009ல் பிரான்சு, இப்போது 2010ல் மறுபடியும் இங்கிலாந்து. (என்னது...இதெல்லாம் யாருக்குய்யா தேவையா? யூ சட்டாப் நான்சென்ஸ் இடியட், கருபுரு கருபுரு கருபுரு, யூ வார் அண்டர் அரெஸ்ட்...). வழக்கமாகப் பாட்டிலுடன் தொடங்கும் புதுவருடம் வாழ்க்கையிலேயே முதன்முறையாக இரவு 12 மணி பூஜையுடன் தெடங்கியிருக்கிறது. மனைவிக்கு நன்றி. காலையில் லண்டனில் இருக்கும் பிரம்ம குமாரிகள் உலக மையத்திற்குச் மனைவி அழைத்துச் சென்றாள். பத்து நிமிட தியானம். (டென்சன் ஆவாதீங்க... நான் இல்ல... நான் இல்ல... அவள்தான்) எலுமிச்சை சாதம் போல ஒன்றும், காபியும் இருந்தது. (இது எனக்குத்தான்...) அங்கிருந்து ஃபெல்த்தாம் சினிவேல்ட்... பதினைந்து நிமிடம் தாமதம். மன்மதன் அம்பு பார்க்க முடியாமல் ஊர் திரும்பினோம். இந்த வருடமாவது கொஞ்சம் அதிகமாக எழுத வேண்டும். பார்க்கலாம். ரொம்ப நாளா யாருமே வராததினால என் வலைப்பதிவுக்குள்ளே வர எனக்கே பயமா இருக்கு!!!. இருந்தாலும் யாரும் தைரியமா நுழைஞ்சிருந்தா உங்களுக்கு என்னோட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...