India

Uganda

United Kingdom

Malaysia

49. ராசிக்காரன்

வியாழன், நவம்பர் 17, 2016

என்னுடைய சம்பளம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகிறது. காரணம் மலேசியன் ரிங்கெட்டின் மதிப்பு குறைந்து கொண்டே செல்வதுதான். அது ரிங்கெட்டின் குற்றமல்ல. என்னுடைய ராசி அப்படிப்பட்டது. 2005-ல் உகாண்டா சென்றேன். அங்கே எனக்கு அமெரிக்கன் டாலரில் சம்பளம். ஊருக்குப் பணமே அனுப்பாமல் டாலராகவே எல்லா சேமிப்பையும் வைத்திருந்தேன். 2007-ல் உகாண்டாவை விட்டுக் கிளம்பும் முன் டாலர் மதிப்பு சடாரெனக் குறைந்து (37 அல்லது 38 ரூபாய் என்று நினைக்கின்றேன்) என்னுடைய சேமிப்பு மதிப்பைக் குறைத்தது. பின் யுகேவிலும் அதே கதைதான். உகாண்டாவில் செய்த தவற்றை யுகேவில் செய்யக்கூடாதென்று அடிக்கடி இந்தியாவுக்குப் பணம் அனுப்பினேன். அப்போது பவுண்டு மதிப்பு 68 ரூபாயிலிருந்து 72 ரூபாய்க்குள்தான் இருந்தது. 2012 கடைசியில் யுகேவை விட்டுக் கிளம்பியதும் சடாரென்று பவுண்டு 100 ரூபாய்க்குத் தாவியது. நான் கிளம்புறதுக்குத்தான் காத்துக்கிட்டு இருந்திருப்பாங்க போலிருந்தது. அதுக்குப் பின்னாடி மலேசியா ரிங்கெட். நான் இங்கே வந்த புதுசுல 18, 19ன்னு திடகாத்திரமா இருந்தது. இப்போ 15, 16 ல தள்ளாடிக்கிட்டு இருக்கு. மலேசியன் ரிங்ஙெட் மதிப்பை தூக்கி நிறுத்த மலேசிய அரசாங்கம் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காம். என் கிட்டே ஒரு நல்ல ஐடியா இருக்கு. தயவுசெஞ்சு யாரும் மலேசிய அரசாங்கத்துட்ட சொல்லிடாதீங்க...  

48. உகாண்டா திருடர்கள்... (1)

வெள்ளி, பிப்ரவரி 20, 2015

பாதுகாப்பு என்ற விசயத்தைப் பற்றிப் பேசும் போது எனக்கு உகாண்டாவில் நடைபெற்ற சில சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன. இவை வழிப்பறி போன்ற சிறு திருட்டுகள் கிடையாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என நம்பும்படியான திருட்டுகள். உகாண்டாவின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் பங்களிப்பு மிக அதிகம். இடி அமீன் காலத்தில் இந்தியர்கள் விரட்டி அடிக்கப்பட்டதும் அதன்பின் உகாண்டாவின் பொருளாதாரம் மிகவும் சரிந்து கவலைக்கிடமானதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அப்போது அடுத்து வந்த குடியரசுத்தலைவர் இந்தியர்களைத் திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தார். அவருடைய நோக்கம் இந்தியர்கள் உகாண்டாவின் தொழிற்துறையில் பலமாக முதலீடு செய்வார்கள், அதன் மூலம் பல‌ உகாண்டர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே.

விதி வலியதல்லவா? இந்தியர்களும் வந்தார்கள், பல தொழில்களில் முதலீடும் செய்தார்கள். அவ்வாறு தொழில் தொடங்க வந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் குஜராத்திகள். அவர்கள் வரும் போதே அவர்களின் ஆலைகளிலும் அலுவலகங்களிலும் வேலைசெய்வதற்காக கூட்டம் கூட்டமாக இந்தியர்களை (குஜராத்திகளை)  அழைத்தும் வந்தார்கள். குஜராத்திகள் எந்த நிலையிலும் எப்போதுமே தங்களை முதலாளிகளாகவே கருதுபவர்கள். தொழிலைக் கற்றுக் கொள்வதற்காகவே வேலையில் சேருவார்கள். தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டதும் தனியாகக் கடை விரித்து விடுவார்கள். இவர்களின் இந்த சொந்தத் தொழில் சார்ந்த மனோநிலை உகாண்டாவிற்குப் பாதகமாகப் போயிற்று. வேலை செய்ய வந்தவர்கள் எல்லோரும் கொஞ்ச காலத்தில் சொந்தத் தொழில் செய்ய முற்பட்டனர். பெரிய அளவில் தொழில் தொடங்க முதலீடு இல்லை, என்ன செய்வது, சிறிய கடையைத் தொடங்கு என்று மளிகைக்கடை, மருந்துக்கடை, stationery shop என்று சிறு முதலீட்டுத் தொழில்களில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். பரிதாபம் என்னவென்றால் இந்தக் கடைகளில் வேலை செய்வதற்கும் இந்தியாவிலிருந்தே ஆட்களைக் கொண்டு வந்தனர். அவர்களும் கொஞ்ச காலம் அவர்களிடம் வேலை செய்துவிட்டு பின்னர் தனியாகக் கடைகளை ஆரம்பித்தனர்.

ஆனால் உகாண்டா அரசாங்கம் இந்தியர்களை திரும்பி அழைத்தற்கான காரணங்கள் வேறு. அப்படியானால் இந்தியர்கள் பெரிய சொழிற்சாலைகளே அமைக்க வில்லையா? அதையும்தான் செய்தார்கள். இன்றும் உகாண்டாவின் பொருளாதாரத்தில் இந்தியர்களின் (குஜராத்திகளின்) பங்களிப்பு மிகவும் அதிகம். ஆனால் சிறுதொழில்கள் என்பவை உகாண்டர்களுக்கானவை. அதில் இந்தியர்கள் கை வைத்திருக்கக் கூடாது என்பது என் எண்ணம். அரசாங்கம் இப்போது சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருப்பதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். சாதாரண உகாண்டர்கள் நம்மாட்களால் எவ்வாறு சுரண்டப் படுகிறார்கள் என்பதைத் தனியே எழுதுகிறேன். எதையோ எழுதத் தொடங்கி எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன்.

2005-ல் நான் இருந்த பாலே (Mbale) எனும் நகரத்தில் நான்கு மொத்த விலை மருந்துக்கடைகள் இருந்தன. அனைத்துமே இந்தியர்களுடையவை. உரிமையாளர்கள் குஜராத்திகள், கடைகளின் முக்கிய பொறுப்பிலிருந்தவர்கள் தமிழர்கள். அங்கே வழக்கமான நடைமுறை என்னவென்றால் முதல் நாள் விற்பனையில் சேர்ந்த பணத்தை அடுத்த நாள் காலையில் வங்கியில் கட்டி விடுவார்கள். சில சமயங்களில் விற்பனை அதிகமாக இருந்தால் காலையில் சேர்ந்த பணத்தை மதியம் வங்கியில் கட்டி விடுவார்கள். எல்லா கடைகளிலும் இதே நடைமுறைதான். பாதுகாப்புக் காரணங்களால் நிறைய பணத்தை கடையில் வைக்க வேண்டாம் என்பதற்காக இந்த ஏற்பாடு. இன்னொரு பாதுகாப்பு அடுக்காக கடைகளுக்கு "அஸ்காரிகள்" எனப்படும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் உண்டு. உகாண்டாவில் இது போன்ற தனியார் பாதுகாப்பு வழங்குதல் என்பது மிகப் பெரிய சந்தை. காசுக்குத் தகுந்தாற்போல பாதுகாப்பு உபகரணங்கள் மாறுபடும். வெறும் கம்பு முதல் துப்பாக்கி வரை காசுக்கேற்ற தோசை. இது போன்ற பாதுகாப்பு வழங்கும் நிறுவனங்கள் அவர்கள் வாடிக்கையாளர்களிடம் அதிகமாகப் பணம் வசூலித்தாலும், அங்கே வேலையில் சேரும் அஸ்காரிகளின் சம்பளம் என்பது மிகவும் குறைவே. எங்கள் கடையிலிருந்த அஸ்காரிக்கு மாத சம்பளம் 2500 ரூபாய்தான். அதை ஒப்பிட்டால் எங்கள் கடையில் அப்போது வேலை செய்த கடைநிலை ஊழியருக்கே மாதம் 3600 ரூபாய்க்கு மேல் சம்பளம் மற்றும் வருட இறுதி ஊக்கத் தொகையும் உண்டு. எங்கள் கடை பாதுகாப்புக்கு வரும் அஸ்காரிகள் எங்கள் கடையில் வேலை ஏதேனும் இருக்கிறதா என்று விசாரிப்பர்.

பாலேவிலிருந்த மற்றொரு மொத்தவிலை மருந்துக் கடையிலும் இதே போல் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் துப்பக்கி ஏந்திய அஸ்காரி பாதுகப்பு வழங்கிக் கொண்டிருந்தது. ஒரே அஸ்காரியே எப்போதும் ஒரு கடைக்கு வரமாட்டார், சுழற்சி முறையில் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கோ ஒருமுறை மாறி மாறி வருவார்கள்.

சம்பவ நாளன்று அங்கே வேலை செய்யும் தமிழர் ஒருவர் பணத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வர, இதற்காகவே காத்துக் கொண்டிருந்த ஒருவன் துப்பாக்கியைக் காட்டிவிட்டான். வேறு வழியே இல்லை, பணத்தைக் கொடுத்தாயிற்று. வாங்கியவன் ஓடத் தொடங்கிவிட்டான். வேலை செய்பவர் அஸ்காரி என்ன செய்கிறான் என்று பார்த்தார். அஸ்காரி துப்பாக்கியை வைத்துக் குறிபார்க்காமல், ஓடியவனைத் தொடர்ந்து ஒரே ஓட்டம். பரவாயில்லையே கடமை தவறாத வீரனாக திருடியவனைத் தொடர்ந்து ஓடுகிறானே என நம்மவரும் நம்பி இருந்தார். அரை மணி நேரமாக இருவருமே திரும்பாத பின்னர்தான் தெரிந்தது, இருவருமே எஸ்கேப். இருவருமே கூட்டுக் களவானிகள். இந்த அஸ்காரி கடையின் பண நடமாட்டத்தைக் கண்காணித்திருக்கிறான். எந்த நேரத்தில் வங்கியில் பணம் கட்டுகிறார்கள், யார் வங்கிக்குச் செல்கிறார், வங்கிக்கு எவ்வாறு செல்கிறார்கள், இவை அனைத்தையும் கவனமாக நோட்டமிட்டிருக்கிறான். எல்லாம் தெரிந்தவுடன் நண்பனுடன் சேர்ந்து நாள் குறித்துவிட்டான்.

கடை முதலாளி குஜராத்தி, விடுவாரா? பாதுகாப்பு வழங்கிய நிறுவனமே பணத்தைத் தந்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டார். பாதுகாப்பு நிறுவனமோ பணமெல்லாம் கொடுக்க முடியாது வேண்டுமானால் கணக்கில்   கழித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது. அதன்படி பாதுகாப்பு நிறுவனம் அஸ்காரியை அனுப்பும், மாதாமாதம் அதற்கான செலவு இந்தத் திருடு போன கணக்கிலிருந்து கழிக்கப்படும்.   கணக்குப் பார்த்தபோது மூன்றோ நான்கோ வருடங்களுக்கு கடைக்காரர்கள் மொத்தமாகப் பணம் கட்டியிருந்தார்கள். இது முதல் சம்பவம். பதிவு நீளமாகப் போவதால் மற்றவை அடுத்த பதிவில்.

47. மலேசியா பாதுகாப்பான நாடா?

வியாழன், பிப்ரவரி 05, 2015

மலேசியாவிற்கு வரப்போகின்றோம் என்று முடிவானவுடனே மலேசிய நிலவரங்களை அறியும் பொருட்டு நண்பர்கள் பலருடனும் பேசினேன். அனேகமாக எல்லோருமே முதன்மையாகக் குறிப்பிட்டது திருட்டு பயம் பற்றியது. நகைகளை அணிய முடியாது, கைபேசி, காமெரா உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை யாரும் பார்க்கும்படி பொது இடங்களில்  உபயோகிக்க முடியாது என்றெல்லாம் கூறினர். இவையெல்லாம் பொது இடங்களில் உபயோகிக்காமல் வேறெங்கு உபயோகிப்பதாம்?

எப்படியோ வந்து சேர்ந்தாகி விட்டது. பல்கலைக்கு முதல் நாள் சென்றபோது, லாப்டாப்பை எடுத்துச் சென்றேன். கண்டனக்குரல்களும் அறிவுரைகளும் பல திசைகளிலிருந்தும் பறந்து வந்தன. அதில் ஒருவர் மேலதிக உரிமையோடு, "உங்களுக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்... இப்படி எல்லோருக்கும் தெரிகிற மாதிரி எடுத்து வரவேண்டியது, அப்புறம் அய்யோ போச்சே என்று அழ வேண்டியது" என்றார். என் பல்கலை வீட்டிலிருந்து நடக்கும் தொலைவிலேயே இருக்கிறது... முதல் நாள் நடந்தே சென்றேன். சாயங்காலம் 6 மணிக்கு மேல் நடந்து போகாதீர்கள் என்றார் இன்னொருவர். வேறு எப்படிச் செல்வதாம்? ஏதாவதொரு நண்பருடைய காரில் செல்ல வேண்டுமாம். 250 மீட்டர் நடந்தால் நான் குடியிருக்கும் condominium-ன் சுற்றுச்சுவர் வந்துவிடும். நம்புங்கள்... அந்த தூரத்திற்கு taxi-ல் சென்றிருக்கிறேன். குறைந்தபட்சக் கட்டணமான மூன்று ரிங்கெட்டுகள் கொடுத்து. வந்த ஒரு வாரத்திற்குள் ஒரு நண்பரொருவருடைய தங்கச் செயின் பறிபோயிற்று. உண்மையில் அடுத்த விமானத்தில் ஊரை விட்டுப் போய்விடலாம் என்ற எண்ணம் கூடத் தோன்றியது.  சில பல குடும்பக் காரணங்களால் அப்படியெல்லாம் செய்ய முடியவில்லை. இன்றும் பல்கலையில் புதிதாகச் சேருபவர்களிடம் இத்தகைய அறிவுரைகளே அதிகமும் போய்ச் சேருகின்றன.

ஆனால் உண்மை நிலைதான் என்ன? மலேசியா அவ்வளவு பாதுகாப்புக் குறைவான‌ நாடா? அது நீங்கள் எந்த நாட்டுடன் மலேசியாவை ஒப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நான் தங்கியிருந்த நாடுகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். மலேசியா வருவதற்கு முன்னர் சிங்கப்பூரில் மூன்று மாதங்கள் இருந்திருக்கிறேன். கண்டிப்பாக சிங்கப்பூருடன் ஒப்பிட்டால் மலேசியாவில் பாதுகாப்பு குறைவுதான். ஆனால் சிங்ப்பூருடன் ஒப்பிட்டால் உலகில் பெரும்பாலான நாடுகளில் பாதுகாப்பு மிகவும் குறைவே. உகாண்டாவில் நான் இரண்டேகால் வருடங்கள் தங்கியிருந்திருக்கிறேன். உகாண்டாவுடன் மலேசியாவை ஒப்பிடுதல் என்பது சரியாக இருக்காது. உகாண்டாவை ஏனைய ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடலாம், ஆனால் மலேசியா போன்ற ஒப்பீட்டளவில் மிகவும் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடக்கூடாது. உகாண்டா கிழக்காப்பிரிக்காவில் மிகவும் பாதுகாப்பான நாடாகக் கருதப்படுகிறது என்பது உபதகவல்.

இங்கிலாந்தில் 5 வருடங்களுக்கு மேல் இருந்திருக்கிறேன். இங்கிலாந்து மலேசியாவை விடப் பாதுகாப்பான நாடா? இதற்குப் பதில் ஆம் மற்றும் இல்லை. இங்கிலாந்தில் மலேசியாவை விட petty crime கம்மிதான், ஆனால் சுத்தமாக இல்லை என்று கூறி விட முடியாது. நம்புங்கள்... வெறும் ஒரு பவுண்டு நாற்பது பென்ஸ் விற்ற பெட்ரோலை என் வண்டியிலிருந்து திருடியிருக்கிறார்கள். 10 லிட்டர் பெட்ரோல் மட்டுமே என் வண்டியிலிருந்தது. டாங்கிலிருந்து இஞ்சின் செல்லும் டியூபை வெட்டி திருட முயன்றிருக்கிறார்கள். அந்த டியூபை மாற்றுவதற்கு நான் 100 பவுண்டுகள் செலவு செய்தேன். என்னுடைய நண்பர் சூப்பர் மார்கெட்டிலிருந்து வேலையிலிருந்து திரும்பும் போது இரண்டு முறை தாக்கப் பட்டிருக்கிறார், பணத்திற்காக. ஆனால் இவை அரிதான சம்பவங்களாகவே என் நினைவில் நிற்கின்றன. ஆனால் மலேசியாவில் கத்தி முனையில் பணம் மற்றும் நகைகளை இழந்த கதைகளை மிக அதிகமாகக் கேள்விப் படுகிறேன். பெரும்பாலும் தனியாக ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இடங்களில் நடந்து செல்பவர்களே பாதிக்கப் படுகிறார்கள். காரில் செல்வது ஒப்பீட்டளவில் மட்டுமே பாதுகாப்பானது. காரில் செல்பவர்கள் traffic light-ல் நிற்கும் போது helmet-ஆல் கார் கண்ணாடியை உடைத்துத் திருடுகிறார்கள். ஆனால் இங்கிலாந்தை விட, துப்பாக்கிக் கலாச்சாரம் குறைவு என்றே நம்புகிறேன். அவ்வளவாகக் கேள்விப்படவில்லை. இந்தியாவுடன் மலேசியாவை ஒப்பிடலாமா? லாம்... ஆனால் வேண்டாம்... நமக்கே தெரியும்தானே...





46. மலேசியா

செவ்வாய், ஜனவரி 13, 2015

இந்த வருடத்தின் முதல் பதிவு இது. மலேசியாவிலிருந்தும் முதல் பதிவு. கடைசியாக 2012 மே மாதத்தில் பதிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். மகள் பிறந்திருக்கிறாள். மலேசிய உயர் கல்வி அமைச்சிடமிருந்து ஆய்வு நிதி பெற்றிருக்கிறேன். ஒரு பட்ட மேற்படிப்பு மாணவியை  supervise செய்கிறேன். மகள் பிறந்த ராசி என்று எண்ணி சந்தோசப் படுகிறேன். பாமரத்தனமாக இருக்கிறது என்கிறீர்களா? இருந்துவிட்டுப் போகட்டும். பரவாயில்லை.

மலேசியா மிகவும் நன்றாக இருக்கிறது. இங்கே நான் என்னை அன்னியனாக உணரவில்லை. இதை ஒரு முக்கியமான விசயமாகப் பார்க்கிறேன். நினைத்த போது குறைந்த செலவில் வீட்டுக்குச் சென்று வரலாம். கடந்த வருடம் மட்டும் மூன்று முறை தமிழ்நாட்டிற்குச் சென்று வந்தேன். இந்தியாவின் வேறு மாநிலங்களில் வசிப்பதைவிடவும் மலேசியாவில் தமிழர்கள் எளிதாக ஒன்ற முடியும் என்று தோன்றுகிறது. இது என்னுடைய கோலாலம்பூர் அனுபவத்திலிருந்து மட்டுமே எழுதுகிறேன். மலேசியாவின் மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது.

மலேசியாவில் எனக்குப் பிடித்த மற்றும் பிடிக்காத விசயங்களைப் பற்றி இந்த வருடம் எழுதலாம் என்றிருக்கிறேன். பிடித்தவற்றில் உடனடியாக என் நினைவுக்கு வருவது, நிறைய நம்மவ‌ர்கள், விதவிதமான உணவு வகைகள், திரைப்படங்கள், தட்பவெப்ப நிலை, எளிதில் அணுகக் கூடிய, நட்பான  மக்கள். பிடிக்காதவை...? அதை இப்போது ஏன் எழுத வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.  

45. கை பரபரக்குது...

சனி, மே 12, 2012

இந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று தெரியவில்லை. சின்னப் புள்ளத்தனமாத்தான் இருக்கு. ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியலையே.... அப்படி என்னதான்டா உன் பிரச்சினைன்னு கேக்குறீங்களா? தேவையில்லாத பொருட்களா வாங்கிக் குவிக்கிற ஆசைதாங்க அது. அப்படி என்னத்தடா வாங்கிக் கிழிச்சேன்றீங்களா? இந்தப் பிரச்சினை முதல்ல லாப்டாப்பிலேருந்து தொடங்குச்சுங்க. முதல்ல என் தம்பி எனக்கு ஒரு லாப்டாப் பரிசா கொடுத்தாங்க. அத வச்சு ஒரு வருசம் ஓட்டுனேங்க. அப்புறம், தினமும் வீட்டிலேருந்து லேபுக்கு தூக்கிட்டுப் போக முடியலேன்னு வீட்டுக்குன்னு என்னோரு லாப்டாப் வாங்கினேங்க. அப்புறமா ஒரு வருசம் கழிச்சு அவ்வளவா உபயோகிக்கலேன்னு அத 12ம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த என் அக்கா பையனுக்கு கொடுத்துட்டேங்க. அப்பவாவது அறிவு வந்து நிப்பாட்டிருக்கனும். விட்டனா, சல்லீசா வருதேன்னு இன்னோரு 13 இன்ச் லாப்டாப் வங்கினேன். இப்ப அந்தப் பழைய லாப்டாப்பை டிவியோட கனெக்ட் பண்ணி யூடியூப்ல படம் பார்க்கன்னு வச்சுக்கிட்டேங்க. அப்புறமா டிரெய்ன்ல படிக்க மட்டும் வேணும்னு ஒரு கிண்டில் வாங்கினேங்க. அதாவது கொஞ்சம் யூஸ் ஆச்சு. அதுக்கு அப்புறமா ஒண்ணு வாங்கினேன் பாருங்க... கொடுமை. ஒரு டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்டர். அத இன்னும் ஒரு தடவ கூட யூஸே பண்ணலைங்க. அத ஏன் வாங்கினேன் எதுக்கு வாங்கினேன்னு எனக்கே இது வரைக்கும் புரியல. இதுக்கு ஊடால லாப்டாப் எல்லாம் வெயிட் அதிகமா இருக்குன்னு சொல்லி ஒரு நெட்புக்கும் வாங்கி வச்சுருக்கேன். இப்ப அது பத்திரமா கப்போர்டுக்குள்ள கிடக்குங்க. அதுக்கு அப்புறமா ஒரு இன்டர்நெட் புளூரே பிளேயர் வாங்கி டிவியோட கனெக்ட் பண்ணீட்டேன். இப்போ அந்தப் பழைய லாப்டாப் சும்மாத்தான் கிடக்குங்க. இதோட‌ விட்டனா... யுஎஸ்ல வாட் கிடையாதுன்னு ஒருத்தர் சொன்னாருன்னு, இப்ப ரெண்டு வாரத்துக்கு முன்னாடி யுஎஸ் போன நண்பர் ஒருத்தர் கிட்டச் சொல்லி ஒரு ஐபேடும் வாங்கியாச்சு. இதுக்கு நடுவிலே சில பல ஸ்மார்ட் போன்களும் வாங்கியாச்சு. புதுசா ஏதாவது ஒரு பொருளப் பார்த்தாலே கை பரபரன்னு அரிக்க ஆரம்பிச்சுடுதுங்க. அத வாங்கி வீட்டுல அடுக்குனாத்தாங்க அந்தப் பதட்டம் குறையுது. இது எதுல போய் முடியுமோன்னு பயமா இருக்குங்க. ஏதாவது உருப்படியான யோசனை இருந்தா சொல்லுங்களேன்...

44. என்ன கொடுமை சரவணன் இது?

திங்கள், பிப்ரவரி 27, 2012


"ஹலோ குமார்?"

"ஹலோ?"

"ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்."

"ஹலோ... யார் பேசுறது."

"நான் ராம்குமார் பேசறேன்."

"கொஞ்சம் சத்தமா பேசுங்க... சரியா கேக்க மாட்டேங்கு... யார்னு சொன்னீங்க?"

"சார்... நான் குமாரோட ஃபிரண்டு பேசறேன். குமார் இருக்காருங்களா?"

"ஒங்க பேரு என்னா சொன்னீங்க?"

"ராம்குமார் சார். நான் குமாரோட ஃபிர‌ண்டு. அவர் இருக்காருங்களா?"

"இங்க சரியா கேக்க மாட்டேங்கு... எங்கேருந்து பேசறீங்க?"

"நான் யூ.கே லேருந்து பேசறேன் சார். நான் குமாரோட ஃபிரண்டு."

"சரியா கேக்கலைங்க. எங்கேருந்து பேசறீங்க?"

"மான்செஸ்டர்... யூ.கே-ல மான்செஸ்டர்லேருந்து பேசறேன் சார். "

"ஓ... யு ஆர் காலிங் ஃபிரம் மான்செஸ்டர்... குமார் இஸ் நாட் ஹியர். கால் ஆஃப்டர் ஹாஃப் ஆன் அவர்..."

???


43. பிரிட்டனில் பொங்கல் விழா!

ஞாயிறு, ஜனவரி 22, 2012

இன்று Bracknell தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல்தான் முடிந்து போயிற்றே என்று யோசிக்காதீர்கள். அது அப்படித்தான். சரியாக 4 மணியளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கப் பட்டன. முதலில் குழந்தைகள் சிலர் ஆடிப் பாடினார்கள். பின்னர் ஒரு மெல்லிசைக் குழுவினர் கரோக்கி மூலம் பாடல்கள் பாடினர். அதன் பின்னர் சிறுவர் சிறுமியர்களுக்கான வினாடி வினா நடத்தப்பட்டது. அதில் சர்க்கரைப் பொங்கல் அணி வெண்பொங்கல் அணியைத் தோற்கடித்தது. பின்னர் பெண்கள் ஆடினார்கள், கோலாட்டம் போல் ஆரம்பித்துப் பின்னர் அனைத்து வகை நடனங்களும் ஆடினர். அதன் பின்னர் ஆண்கள் குழு ஆடியது. பாடல்களுக்கு நடிகர்கள் போல் ஆடினர். இதன் நடுவிலேயே சாப்பாடு பரிமாற ஆரம்பித்தனர். ஒரு இட்லி, சட்னி, சாம்பார், சிறிது சாதம், புளிக்குழம்பு, சிறிது ஃப்ரைடு ரைஸ், கொஞ்சம் மெது பக்கோடா, பாயசம் மற்றும் அப்பளம். அனைத்தும் நன்றாகவே இருந்தன. கிட்டத்தட்ட 150க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். Bracknell மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதே எனக்கு இன்றுதான் தெரிந்தது.

இந்நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்கள் கீழே...

நண்பர் ஒருவர் எம்ஜிஆர் வேடத்தில் கலக்குகிறார்.

ஆண்கள் ஆடுகிறார்கள்

பெண்கள் கொண்டாட்டம்.

இன்னிசைக் குழு.

ஒரு சிறுமி பாடுகிறாள்.

காவடியாட்டம்.

சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சி.

கரகாட்டம்.

சிறுவர் சிறுமியர் ஆட்டம் பாட்டம்.

சிறுவர் சிறுமியர் ஆர்கெஸ்ட்ரா.

இவை தவிர மூன்று சிறுமிகள் சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு சிறு பகுதியை நாடகமாக நடத்தினார்கள். மற்றொரு சிறுமி கர்னாடக இசைக் கச்சேரி வழங்கினாள். மிகவும் நன்றாக இருந்தது. அவற்றைப் புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். 

நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் நல்ல முறையில் இருந்தது. யாரோ ஒருவர் அசிங்கத்தை மிதித்து விட்டு அரங்கிற்குள் நுழைந்து விட்டார். ஏதேனும் சிறுவர்களாக இருக்கலாம். விழா ஏற்பாடு செய்த நண்பர் ஒருவர், அருவெறுப்புப் படாமல் அதைத் துடைத்து வெளியே போட்டார். நாங்கள் சாப்பிட்ட பிளேட்களை ஒரு பெண்கள் சிலர் கவனமாக வாங்கி அடுக்கி வைத்தார்கள். அவர்களுக்கு இதெல்லாம் செய்ய வேண்டுமென்ற அவசியம் எதுவும் இல்லை. ஆனாலும் விழா சிறப்பாக நடக்க அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.