India

Uganda

United Kingdom

Malaysia

32. சாப்பாட்டு ராமன்...(மான்செஸ்டர் கதைகள் - 2)

ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

"சாப்பிடத் தெரியாம சாப்பிடுறடா நீ" என்றார் எனது அம்மா. வெகு நாட்களுக்குப் பின் கிடைத்ததே என்று அந்த இரவு நேரத்திலும் பத்து பூரிகள் சாப்பிட்டு விட்டு இரவு வெகு நேரம் வரை தூங்கமுடியாமல் அடுத்த நாள் காலையில் நெஞ்சுக் கரிக்கிறது என்று சொன்னதற்குத்தான் இப்படிச்சொன்னார் . இப்படி அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு அவதிப்படுவது எப்போதிருந்து தொடங்கியது என்றுநினைவில்லை. அனேகமாக கல்லூரியில் படிக்கும் போதுதான் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன் +2 வரையில் வீட்டிலிருந்து படித்தபோது இப்படி அதிகமாக உண்டதாகநினைவில்லை. கல்லூரியில் எப்போதாவது இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைவரும் போது காஞ்சமாடு கம்மங்கொல்லையில் பாய்ந்தது போல எக்குத்தப்பாகச் சாப்பிட்டுவிட்டுபுளிச்ச ஏப்பமா வருதும்மா என்று பரிதாபமாகச் சொன்னது நினைவிருக்கிறது. என்னவோதெரியவில்லை, உணவகங்களில் சாப்பிடும் போது அப்படி அதிகமாகவெல்லாம் சாப்பிடமுடியவில்லை. மற்றவர்கள் பார்ப்பார்களோ என்ற உணர்வுடனே சாப்பிட்டதால்இருக்கலாம். இருந்தாலும் தமிழ் நாட்டு உணவகங்களில் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் நாட்டின் தேசிய உணவான புரோட்டா சால்னா சாப்பிடும் போது அதிகமாகவே சாப்பிட்டிருக்கிறேன்.... வீட்டிற்கு வந்துவிட்டால் சாப்பாட்டில் நான் பீமன்தான். நிறைய நேரங்களில் சாப்பிட்ட பின் என்னால் எழுந்திரிக்கவே முடியாமல் போய் விடும். என் தம்பிதான் கை கொடுத்துத் தூக்கி விடுவான். அம்மா சமையலில் எல்லாமே பிடிக்கும் என்றாலும் மிகவும் பிடித்தது ஞாயிறு காலையில் வைக்கும் இட்லி, கறிக்குழம்பு கூட்டணி. பலமுறை பதினைந்து இட்லிகளுக்கு மேல் ஸ்வாகா பண்ணியிருக்கிறேன்.

இப்படி சாப்பாட்டு இராமனாக இருந்த நான் திடீரென்று உகாண்டாவிற்குச் செல்ல வேண்டும் என்றவுடனே கொஞ்சம் பயந்துதான் போனேன்... அங்கே அவர்கள் வேறு நரமாமிசம் சாப்பிடுவார்கள் என்று நண்பர்கள் டுபாக்கூர் விட்டிருந்ததால் கனவில் கறிக் கடைக்காரரிடம் சென்று, "அந்த பிருஷ்ட பாகம் வேண்டாம், கொஞ்சம் கீழே முழங்காலுக்கு மேலே தொடைக் கறியாக‌த் தாருங்கள். ரொம்ப மேலே போகாதீர்கள்...வேறு எதையாவது வெட்டிவிடப் போகிறீர்கள்..." என்றெல்லாம் கேட்டுத்தொலைக்க வேண்டியிருக்குமோ என்று நடுங்கித்தான் போனேன். நல்லவேளையாக நான் சென்ற போது கறிக்கடைகளில் ஆடு மாடுகளையே தொங்க விட்டிருந்தார்கள்.

உகாண்டாவில் வீட்டு வேலை செய்வதற்கு குறைந்த ஊதியத்திற்கு House Boys அல்லது House Girls எனப்படும் ஆட்கள் கிடைப்பார்கள். (அவர்களை வேலைக்காரர்கள் என்று குறிப்பிட்டால் கோபித்துக் கொள்வார்கள்) வீட்டில் சமையல், துணி துவைப்பது, தேய்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது என எல்லா வேலைகளையும் செய்து விடுவார்கள். இவர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சில இடங்களில் திருடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். என் வீட்டில் இருந்த பெண்மணி நல்லவர். சமையலிலும் வல்லவர். நான் உகாண்டாவில் இரண்டரை வ‌ருடங்கள் இருந்தாலும் எடை குறையாமல் இருந்ததற்கு இவரும் ஒரு காரணம். இட்லி, தோசை, பூரி, இடியாப்பம், மிக்சர், சமோசா, முறுக்கு, சாம்பார், அனைத்து வகை சட்னிகள் மற்றும் கறி, கோழிக்குழம்பு, பிரியாணி என அனைத்தையும் சுவையாகச் செய்வார். இவர் சமையலில் எனக்கு மிகவும் பிடித்தது பூரி, தேங்காய் சட்னி, சாம்பார் கூட்டணி...ம்ம்ம்.... நினைத்தால் இப்பவும் எச்சில் ஊறுகிறது.

உகாண்டாவில் நான் இருந்த சின்ன ஊரான பாலே(Mbale) யில் இரண்டு இந்திய உணவகங்கள் இருந்தன. நான் உகாண்டா போன புதிதில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மின்தடை அமலில் இருந்தது. அதெல்லாம் அந்தக் காலம்... இப்போது மின்சாரம் தடைபடுவதே அபூர்வம் என்று கேள்விப்பட்டேன். (சத்தியமாக இதில் நுண்ணரசியல் எதுவும் இல்லை ;‍)) அந்த சமயங்களில் நானும் என்னுடன் வேலை பார்த்த குஜராத்தி நண்பனும் அங்கே சென்று விடுவோம். கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும். பெரும்பாலும் வட இந்திய உணவுகளே கிடைத்தாலும் சுவை நன்றாகவே இருக்கும். அங்கே என் விருப்ப உணவு மசாலா சிப்ஸ். இங்கே மான்செஸ்டர் வருவதற்கு முன்னரே முன்னேற்பாடாக எங்கெங்கெல்லாம் இந்திய உணவகங்கள் இருக்கின்றன என்று இணையத்தில் தேடியாயிற்று (படிப்பு சம்பந்தமாக எதையுமே தேடவில்லை என்பதை இந்தப் பொன்னான தருண‌த்தில் உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் ;‍-)) என்னுடைய அதிர்ஷ்டம் இங்கே பல்கலை அருகிலேயே Curry Mile என்று செல்லமாக அழைக்கப் படும் சாலை இருக்கிறது. நிஜமாகவே ஒரு மைல் தூரத்திற்கு நெடுக உணவகங்கள்தான் (ஏறக்குறைய 70 என்று கேள்வி). பெரும்பாலும் இந்திய உணவகங்கள் என்ற பெயரில் பங்களாதேசிக்காரர்கள் நடத்துவது. சில இடங்களில் சாப்பிட்டுப் பார்த்து நொந்து போய்விட்டேன். சில பரவாயில்லை. நிறைய Take Aways இருக்கின்றன. இதில் அதிக கொழுப்பு இருக்கிறது என்று தெரிந்தும் விரும்பிச் சாப்பிடுவது கபாப் எனப்படும் வஸ்து... இங்கே வந்த பின்னர் சாப்பிட்டுப் பழகியது. இன்று மதியம் சாப்பிட்டால் நாளை காலை வரை வயிறு கம் என்றிருக்கும். சாப்பிடும் வரை நன்றாயிருக்கும். சாப்பிட்டு முடித்தபின் ஏன்டா சாப்பிட்டோம் என்றிருக்கும்... இருந்தாலும் இதற்கெல்லாம் பீதியடைகிற ஆட்களா நாம்???

இது போக மான்செஸ்டரிலேயே வேறு இடங்களில் இருப்பவைகளில் நவாப், ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் ஓரியண்டல் பஃபே மற்றும் சில பெயர் மறந்து போன உணவங்களில் ஓரளவுக்கு நன்றாக இருந்தது. என்ன இருந்தாலும் இவ்வளவு பெரிய மான்செஸ்டரில் ஒரு தென்னிந்திய உணவகம் கூட இல்லாதது எனக்குப் பெரும் குறையாகவே இருந்து வருகிறது. எனக்குத் தெரியாமல் எங்கேனும் ஒளிந்து கொண்டிருக்கிற தென்னிந்திய உணவகம் பற்றித் தெரிவிப்பவர்களுக்கு மன்செஸ்டர் மியூசியத்தில் ஒரு சிலை வைக்கப் படும்.சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த போது, "உன் மருமகன் உன்னை மாதிரியே வந்திருக்கிறான்டா, சாப்பிட்டதுக்கு அப்புறமா கை கொடுத்துத் தூக்கினாத்தான் எந்திரிக்கிறான்" என்றாள் அக்கா. இந்தப் பழக்கம் ஜீனிலேயே அச்சேறி அடுத்த தலைமுறையும் கிளம்பி விட்டதை புரிந்து சிரிக்கிறேன்...

0 கருத்துகள்: