India

Uganda

United Kingdom

Malaysia

45. கை பரபரக்குது...

சனி, மே 12, 2012

இந்தப் பிரச்சினை இப்போது கொஞ்சம் அளவு கடந்து போய்க் கொண்டிருக்கிறது. அது எனக்கும் நன்றாகவே தெரிகிறது. ஆனால் எப்படி இதிலிருந்து மீளுவதென்று தெரியவில்லை. சின்னப் புள்ளத்தனமாத்தான் இருக்கு. ஆனா என்ன செய்யுறதுன்னு தெரியலையே.... அப்படி என்னதான்டா உன் பிரச்சினைன்னு கேக்குறீங்களா? தேவையில்லாத பொருட்களா வாங்கிக் குவிக்கிற ஆசைதாங்க அது. அப்படி என்னத்தடா வாங்கிக் கிழிச்சேன்றீங்களா? இந்தப் பிரச்சினை முதல்ல லாப்டாப்பிலேருந்து தொடங்குச்சுங்க. முதல்ல என் தம்பி எனக்கு ஒரு லாப்டாப் பரிசா கொடுத்தாங்க. அத வச்சு ஒரு வருசம் ஓட்டுனேங்க. அப்புறம், தினமும் வீட்டிலேருந்து லேபுக்கு தூக்கிட்டுப் போக முடியலேன்னு வீட்டுக்குன்னு என்னோரு லாப்டாப் வாங்கினேங்க. அப்புறமா ஒரு வருசம் கழிச்சு அவ்வளவா உபயோகிக்கலேன்னு அத 12ம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்த என் அக்கா பையனுக்கு கொடுத்துட்டேங்க. அப்பவாவது அறிவு வந்து நிப்பாட்டிருக்கனும். விட்டனா, சல்லீசா வருதேன்னு இன்னோரு 13 இன்ச் லாப்டாப் வங்கினேன். இப்ப அந்தப் பழைய லாப்டாப்பை டிவியோட கனெக்ட் பண்ணி யூடியூப்ல படம் பார்க்கன்னு வச்சுக்கிட்டேங்க. அப்புறமா டிரெய்ன்ல படிக்க மட்டும் வேணும்னு ஒரு கிண்டில் வாங்கினேங்க. அதாவது கொஞ்சம் யூஸ் ஆச்சு. அதுக்கு அப்புறமா ஒண்ணு வாங்கினேன் பாருங்க... கொடுமை. ஒரு டிஜிட்டல் வாய்ஸ் ரெக்கார்டர். அத இன்னும் ஒரு தடவ கூட யூஸே பண்ணலைங்க. அத ஏன் வாங்கினேன் எதுக்கு வாங்கினேன்னு எனக்கே இது வரைக்கும் புரியல. இதுக்கு ஊடால லாப்டாப் எல்லாம் வெயிட் அதிகமா இருக்குன்னு சொல்லி ஒரு நெட்புக்கும் வாங்கி வச்சுருக்கேன். இப்ப அது பத்திரமா கப்போர்டுக்குள்ள கிடக்குங்க. அதுக்கு அப்புறமா ஒரு இன்டர்நெட் புளூரே பிளேயர் வாங்கி டிவியோட கனெக்ட் பண்ணீட்டேன். இப்போ அந்தப் பழைய லாப்டாப் சும்மாத்தான் கிடக்குங்க. இதோட‌ விட்டனா... யுஎஸ்ல வாட் கிடையாதுன்னு ஒருத்தர் சொன்னாருன்னு, இப்ப ரெண்டு வாரத்துக்கு முன்னாடி யுஎஸ் போன நண்பர் ஒருத்தர் கிட்டச் சொல்லி ஒரு ஐபேடும் வாங்கியாச்சு. இதுக்கு நடுவிலே சில பல ஸ்மார்ட் போன்களும் வாங்கியாச்சு. புதுசா ஏதாவது ஒரு பொருளப் பார்த்தாலே கை பரபரன்னு அரிக்க ஆரம்பிச்சுடுதுங்க. அத வாங்கி வீட்டுல அடுக்குனாத்தாங்க அந்தப் பதட்டம் குறையுது. இது எதுல போய் முடியுமோன்னு பயமா இருக்குங்க. ஏதாவது உருப்படியான யோசனை இருந்தா சொல்லுங்களேன்...

44. என்ன கொடுமை சரவணன் இது?

திங்கள், பிப்ரவரி 27, 2012


"ஹலோ குமார்?"

"ஹலோ?"

"ஹலோ குமார்... நான் ராம்குமார் பேசறேன்."

"ஹலோ... யார் பேசுறது."

"நான் ராம்குமார் பேசறேன்."

"கொஞ்சம் சத்தமா பேசுங்க... சரியா கேக்க மாட்டேங்கு... யார்னு சொன்னீங்க?"

"சார்... நான் குமாரோட ஃபிரண்டு பேசறேன். குமார் இருக்காருங்களா?"

"ஒங்க பேரு என்னா சொன்னீங்க?"

"ராம்குமார் சார். நான் குமாரோட ஃபிர‌ண்டு. அவர் இருக்காருங்களா?"

"இங்க சரியா கேக்க மாட்டேங்கு... எங்கேருந்து பேசறீங்க?"

"நான் யூ.கே லேருந்து பேசறேன் சார். நான் குமாரோட ஃபிரண்டு."

"சரியா கேக்கலைங்க. எங்கேருந்து பேசறீங்க?"

"மான்செஸ்டர்... யூ.கே-ல மான்செஸ்டர்லேருந்து பேசறேன் சார். "

"ஓ... யு ஆர் காலிங் ஃபிரம் மான்செஸ்டர்... குமார் இஸ் நாட் ஹியர். கால் ஆஃப்டர் ஹாஃப் ஆன் அவர்..."

???


43. பிரிட்டனில் பொங்கல் விழா!

ஞாயிறு, ஜனவரி 22, 2012

இன்று Bracknell தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல்தான் முடிந்து போயிற்றே என்று யோசிக்காதீர்கள். அது அப்படித்தான். சரியாக 4 மணியளவில் கலைநிகழ்ச்சிகள் தொடங்கப் பட்டன. முதலில் குழந்தைகள் சிலர் ஆடிப் பாடினார்கள். பின்னர் ஒரு மெல்லிசைக் குழுவினர் கரோக்கி மூலம் பாடல்கள் பாடினர். அதன் பின்னர் சிறுவர் சிறுமியர்களுக்கான வினாடி வினா நடத்தப்பட்டது. அதில் சர்க்கரைப் பொங்கல் அணி வெண்பொங்கல் அணியைத் தோற்கடித்தது. பின்னர் பெண்கள் ஆடினார்கள், கோலாட்டம் போல் ஆரம்பித்துப் பின்னர் அனைத்து வகை நடனங்களும் ஆடினர். அதன் பின்னர் ஆண்கள் குழு ஆடியது. பாடல்களுக்கு நடிகர்கள் போல் ஆடினர். இதன் நடுவிலேயே சாப்பாடு பரிமாற ஆரம்பித்தனர். ஒரு இட்லி, சட்னி, சாம்பார், சிறிது சாதம், புளிக்குழம்பு, சிறிது ஃப்ரைடு ரைஸ், கொஞ்சம் மெது பக்கோடா, பாயசம் மற்றும் அப்பளம். அனைத்தும் நன்றாகவே இருந்தன. கிட்டத்தட்ட 150க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். Bracknell மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதே எனக்கு இன்றுதான் தெரிந்தது.

இந்நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்கள் கீழே...

நண்பர் ஒருவர் எம்ஜிஆர் வேடத்தில் கலக்குகிறார்.

ஆண்கள் ஆடுகிறார்கள்

பெண்கள் கொண்டாட்டம்.

இன்னிசைக் குழு.

ஒரு சிறுமி பாடுகிறாள்.

காவடியாட்டம்.

சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சி.

கரகாட்டம்.

சிறுவர் சிறுமியர் ஆட்டம் பாட்டம்.

சிறுவர் சிறுமியர் ஆர்கெஸ்ட்ரா.

இவை தவிர மூன்று சிறுமிகள் சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு சிறு பகுதியை நாடகமாக நடத்தினார்கள். மற்றொரு சிறுமி கர்னாடக இசைக் கச்சேரி வழங்கினாள். மிகவும் நன்றாக இருந்தது. அவற்றைப் புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். 

நிகழ்ச்சி ஏற்பாடுகள் மிகவும் நல்ல முறையில் இருந்தது. யாரோ ஒருவர் அசிங்கத்தை மிதித்து விட்டு அரங்கிற்குள் நுழைந்து விட்டார். ஏதேனும் சிறுவர்களாக இருக்கலாம். விழா ஏற்பாடு செய்த நண்பர் ஒருவர், அருவெறுப்புப் படாமல் அதைத் துடைத்து வெளியே போட்டார். நாங்கள் சாப்பிட்ட பிளேட்களை ஒரு பெண்கள் சிலர் கவனமாக வாங்கி அடுக்கி வைத்தார்கள். அவர்களுக்கு இதெல்லாம் செய்ய வேண்டுமென்ற அவசியம் எதுவும் இல்லை. ஆனாலும் விழா சிறப்பாக நடக்க அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும்.