India

Uganda

United Kingdom

Malaysia

22. நான் Muzungu வான கதை...

செவ்வாய், ஏப்ரல் 11, 2006

வயது அதிகமாகிக் கொண்டே போவதை நினைவு படுத்தும் சமாச்சாரமாக இருப்பதால், நான் பிறந்த நாளெல்லாம் கொண்டாடுவதில்லை. பெற்றோரும், உடன்பிறந்தோரும் ஃபோனில் வாழ்த்துச் சொல்லும் போதுதான் அன்று பிறந்த நாள் என்பதே நினைவுக்கு வரும்.

பிறருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் அதிகமாகக் கலந்து கொண்டதில்லை. (என் தம்பியுடையதைத் தவிர... காரணம் அவன் பிறந்த தினம்... டிசம்பர் 25). இங்கே நண்பி ஒருவர் அவருடைய பையனின் 3 வது பிறந்த நாள் விழாவிற்கு அழைத்த போது, இங்கே எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் ஆவலில் ஒப்புக் கொண்டேன்.

விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னர், என்னவெல்லாம் தேவைப்படும் என்று கணக்கிட்டு வாங்கி விட்டார். 150,000 உகாண்டன் சில்லிங்ஸ், கிட்டத்தட்ட 3750 ரூபாய். அவர்கள் உரைப்பு அதிகம் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.எனவே எனக்காக சில்லி சாஸ் வாங்கிக் கொண்டார்.

நான் தங்கியிருக்கும் சிற்றூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலிருக்கும் கிராமத்தில்தான் விழா. நண்பிதான் அந்த ஊரில் வசதியானவர் என்பதால், கிட்டத்தட்ட 100 பேர் வரை அழைத்திருந்தார். நான்கு மணிக்கு விழா தொடங்கியது. முதலில் ஒரு பாதிரியார் ஜெபம் செய்து விழாவைத் தொடங்கி வைத்தார்.பின் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒவ்வொருவராக எழுந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பையனின் அம்மா தன்னையும், பையனையும் அறிமுகப் படுத்தினார். அம்மா பெயர் Faith, மகன் பெயர் Innocent. அப்பா பெயரைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ள வில்லை.

 
பையன் சிசேரியன் மூலமாகப் பிறந்தவன் என்பதைப் பையனின் தாத்தா நினைவு கூர்ந்தார். பின்னர் இசை ஆரம்பமாகியது. சிறுவர்கள் எழுந்து ஆடத் தொடங்கினர். நன்றாக ஆடும் சிறுவர்களை ஊக்குவிக்க சிலர் அவர்கள் பையில் பணம் சொருகினர். இது அரை மணி நேரம் நடந்தது.

பின் அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. ஒரு சிறு டேபிளில் ஒரு தட்டு வைத்து, பக்கத்தில் பையன் அமர்ந்திருக்க, ஒவ்வொருவராகச் சென்று அன்பளிப்புகளை வழங்கினர். அன்பளிப்புகளை வாங்கி வராதவர்கள் அந்தத் தட்டில் பணத்தை வைத்துச் சென்றனர். பின்னர் கேக் வெட்டினான் பொடியன். நம்மூர் குலவைச் சத்தம் போலவே சத்தம் எழுப்பினர் கிராமப் பெண்மணிகள்.

விருந்து தொடங்குவதற்கு முன்னர் மறுபடியும் பாதிரியார், மீண்டும் ஜெபம். பின்னர் விருந்து தொடங்கியது. Buffet. நம்மூர் போண்டா மாதிரி ஒரு Item , ஆப்பிரிக்க சப்பாத்தி (முழு சப்பாத்திக்கல் சைசில், அரை இஞ்ச் தடிமனில் ஏதேனும் பரிமாறப் பட்டால் அது ஆப்பிரிக்க சப்பாத்தி என்று அறிந்து கொள்க), நம்மூர் பிரியாணி கலரில், மாட்டிறைச்சி கலந்த சோறு, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழிக்குழம்பு (உரைப்பே இல்லாமல், மசாலா எதுவும் கலக்காமல்) பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் சோடா(குளிர்பானங்களை இங்கே இப்படித்தான் அழைக்கிறார்கள்) வைக்கப் பட்டிருந்தன. பெரியவர்கள் வரிசையாகச் சென்று எடுத்து கொண்டனர். பெரிய தட்டுகளில் நிறைய வைக்கப் பட்டு ஐந்தாறு சிறுவர்களுக்கு மொத்தமாக வைக்கப்பட்டது.

 
 

கிட்டத்தட்ட ஆறு மணியளவில் விழா இனிதே முடிவடைந்தது. விழா ஆரம்பித்ததிலிருந்து, முடியும் வரை பையன் என்னை ஒரு மாதிரியாகவே பார்த்துக் கொண்டிருந்தான். நான் கிட்டத்தட்ட அவர்கள் கலரில் இருந்தாலும், முடி இருப்பதால் பையனுக்கு நான் வினோதமான ஜந்துவாகத் தெரிந்திருக்கிறேன். கடைசியில் பையனின் அம்மா நான் ஒரு Muzungu என்று அறிமுகப் படுத்திய பின்தான் சந்தேசமாக ஒட்டிக்கொண்டான். Muzungu என்றால் யாரென்று கேட்கவில்லையே..Muzungu என்றால் வெள்ளைக்காரன் என்று அர்த்தம். Posted by Picasa