India

Uganda

United Kingdom

Malaysia

35. நின்று போகாத உலகம்...

திங்கள், டிசம்பர் 20, 2010

என் மனைவி ஒரு கணிப்பொறியியலாளர். சில சமயங்களில் கம்பெனிக்காகக் கொஞ்சம் அதிகப் படியாகவே வைலை செய்வாள். கேட்டால் இதையெல்லாம் வேறு யாரும் செய்ய மாட்டார்களென்றும் அவள் மட்டுமே செய்ய முடியுமென்றும் சொல்லுவாள். அப்போதெல்லாம் நான் அவளிடம் சொல்லுவேன், "நீ இந்த வேலைகளைச் செய்யாவிட்டாலும் கம்பெனியின் உலகம் ஒன்றும் நின்று போய்விடாது, இந்த வேலைகளைச் செய்யும் ஆட்கள் திடீரென்று முளைத்து வருவார்கள், கம்பெனி எப்போதும் போல் லாபம் ஈட்டும்" என்று. என் மனைவி எப்போதும் போல் என்னைப் பொருட்படுத்தாமல் சென்று விடுவாள். விவாதத்தில் வென்றுவிட்ட தொனியில் நான் புன்னகைப்பேன். எனக்குத்தான் எல்லாம் தெரியுமே...

இந்தக் கதைக்கிடையில் நான் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். கடந்த மூன்றாண்டுகளாக இங்கே வெள்ளைக்காரர்களுடன் கிருஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஓரளவு உற்சாகத்துடன் கலந்து கொண்டிருந்தாலும் இந்த முறை அந்த உற்சாகம் மிஸ்ஸிங். பக்கத்து லேப் பசங்களுடன் இந்த முறை விருந்துக்குக் கூட செல்ல வில்லை. இந்தக் கொண்டாட்டங்களில் ஒரு ரொட்டீன்தனம் தெரிவது காரணமாக இருக்கலாம். அல்லது நன்றாகப் பழ‌கிய பலர் வெளியேறி புதிதாகப் பலர் வந்திருப்பதால் இருக்கலாம். என்னவோ, நான் கிருஸ்மஸ் கொண்டாடாததால் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை. யாரும் அது பற்றிக் கவலைப் படப் போவதும் இல்லை. ஆனால் கிழக்காப்பிரிக்காவிலிருக்கும் ஒரு சிறிய ஊரில் ஒரு பத்துப் பேராவது அது பற்றிக்கவலைப் படுவார்கள் என நான் நம்புவதற்கு இடமிருந்தது.

உகாண்டாவில் நான் வேலை பார்த்து வந்த கடையின் ஊழியர்களே அவர்கள். கடையில் ஸ்டாக் எடுக்கும் போது அவர்களை எனது வீட்டில் சாப்பிட அழைப்பேன். அங்கே கோழி (வான் கோழியென்று நினைக்கிறேன்) விலை அதிகம், ஆடு விலை கம்மி. எனது  House Girl-லிடம் அவர்களுக்காகக் கோழி வாங்கி சமைக்கச் சொல்லுவேன். அவர் ஆப்பிரிக்கரானதால் அவர்களுடைய சுவக்கேற்ற மாதிரி மசாலா இல்லாமலும்,  எனக்காகத் தனியாக மசாலா போட்டு ஆடும் சமைப்பார். Stock taking என்பது அதிகமான களைப்பை உண்டாக்கும் வேலையாதலால் இந்த மதிய உணவு அவர்களுக்கு சற்றே தெம்பளிக்கும் என்று நான் இதைச் செய்து வந்தேன். அந்த உணவுக்குப் பின்பும் அவர்கள் வேலை செய்ய வேண்டுமென்பதால் அங்கு குடிப்பதற்கு அனுமதிப்பதில்லை.

அதுபோக அவர்களை வருடத்திற்கு இரண்டு முறை வெளியே உணவகத்தில் இரவு விருந்திற்கு அழைப்பதுண்டு. அங்கே குடிப்பதற்கு அனுமதி உண்டு. ஈஸ்டருக்கு விடுமுறைக்கு முன்னாலும், கிருஸ்மஸ் விடுமுறைக்கு முன்னாலும் பாலேயின் உயர்தர உணவகம் ஒன்றில் இது வருடாவருடம் நடக்கும். நூறிலிருந்து நூற்றம்பதாயிரம் ஷில்லிங்குகள் வரை செலவாகும். மூவாயிரத்து ஐநூறு ரூபாய் வரை. இது எனக்கும் அவர்களுக்குமான உறவைப் பலப்படுத்தி, இதெல்லாம் செய்கிறானே என்று கடையில் திருடாமல் இருப்பார்களே என்று நம்பி செலவானாலும் பரவாயில்லை என்று செய்து வந்தேன். அப்படியும் நிறைய ஊழியர்கள் திருடி மாட்டிக் கொள்வார்கள். அப்படி மாட்டி நிறைய பேரை வேலையிலிருந்து தூக்கியும் இருக்கிறேன். இருந்தாலும் இந்த விருந்து வைபோகத்தை மட்டும் நிறுத்தவில்லை. அங்கிருந்து வந்து மூன்றாண்டுகளாகி விட்டன. அவர்கள் என்னை மிகவும் மிஸ் செய்திருப்பார்கள் எனத் திண்ணமாக நம்பியே இதுநாள் வரையிலும் இருந்து வந்தேன். இந்த உலகில் நாம் திரும்பிப் போகவே போகாத இடத்திலிருக்கும் சிலர் நம்மை மிஸ் செய்கிறார்கள் என்ற எண்ணமே சில சமயங்களில் நம்மை ஆழ்ந்த பெருமிதத்திற்குள்ளாக்குகிறது. ஆகா, எவ்வளவு நல்லவன் நான்... எவ்வளவு கொடுத்து வைத்தவன் நான்!!!

கடந்த வாரம் உகாண்டாவிலிருக்கும் ஒரு நண்பருக்குத் தொலைபேசினேன். அவரிடம் எனது பெருமையை நிலை நாட்டும்பொருட்டு இப்போது அங்கே நிலவரம் என்ன என்று விசாரித்தேன். என்னைக் கடை ஊழியர்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள் என்ற செய்தியை உள்வாங்கி என் மனதைக்குளிர்விக்க என் காது மிகவும் உன்னிப்பானது. ஆனால் அவர் சொன்ன விசயம் என் அகந்தையைத் தவிடு பொடியாக்கியதுதான் மிச்சம். அதாகப் பட்டது, நான் கடையை விட்டகன்ற அடுத்த வருடத்தில் கடை ஊழியர்கள் அனைவரும் புதிய மேலாளரிடம் இந்த விருந்து வைபோகத்தைப் பற்றிக் கூறி அதைத் தொடரும் பொருட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவரும் அதை கம்பெனி மேலதிகாரிகளிடம் விளக்கி அந்த வருடத்திலிருந்து கம்பெனி செலவிலேயே அவர்களுக்கு கிருஸ்மஸ் விருந்து வழங்கப் பட்டிருக்கிறது. ஆக இந்த விருந்து படலத்தைத் தொடங்கி வைத்தவன் என்ற முறையிலே எனக்கு மூவாயிரத்து ஐநூறு வருடாவருடம் நட்டம்.  அவ்வளவுதான்.

நண்பர் சொன்ன விசயம் எனக்கு நம்பமுடியாததாக இருந்தது. நான் ஒருவன் இல்லாதது அவர்கள் எவருக்கும் ஒரு சிறு சலனத்தைக்கூட அளிக்க வில்லையா? வெட்கம்... திரும்பிப் பார்க்கிறேன். என் மனைவி வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். என்னை நிமிர்ந்து பார்த்தாள். வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை.  எனக்கு ஒன்று புரிந்தது. நான் கிருஸ்மஸ் கொண்டாடாததைப் பற்றிக் கிழக்காப்பிரிக்காவிலும் யாரும் கவலைப் படப் போவதில்லை.

34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...

வியாழன், அக்டோபர் 07, 2010

சமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்த படங்களின் கதையையோ  அல்லது காட்சியையோ நம் இந்தியத் தன்மைக்கு மாற்றியோ அல்லது மாற்றாமலோ படமாக்கி விடுகின்றார்களாம். அதை விடக் கொடுமை அந்த ஒரிஜினல் படங்களுக்கு நன்றி என்று கூடப் போடுவதில்லையாம். என்ன கொடுமை, என்ன கொடுமை... இப்படிப்பட்ட விமர்சனங்கள் இணையம் முழுக்க நிறைய காணக்கிடைக்கின்றன. இந்தப் பின்ன‌னியில்தான் நான் நேற்று பார்த்த ஒரு ஆங்கிலப் படத்தை  அலச வேண்டியிருக்கிறது. படத்தின் பெயர் "தி டவுன்". சார்ல்ஸ் டவுன் என்பதன் சுருக்கமே அது. இந்தப் பெயர் ஒன்றே போதும் இந்த இயக்குனருக்கு கற்பனை வளமே இல்லையென்று நிரூபிக்க. ஏனென்றால் நம் இயக்குனர் இங்கே சுப்ரமணியபுரம் என்று ஏற்கெனவே சுயமாகச் சிந்தித்துப் பெயர் வைத்து விட்டார். ஊரின் பெயரால் இங்கே ஏற்கெனவே ஒருவர் சிவகாசி, மதுர, திருப்பாச்சி என்று பல படங்கள் வந்திருந்தாலும், சுப்ரமணியபுரத்தில் மட்டுமே கதைமாந்தர்கள் ஊடாக‌ அந்த ஊரின் ஒரு முழுமையான சித்திரம் பார்வையாளனுக்குக் கிடைத்தது. தி டவுனும் அதே மாதிரியான ஒரு முயற்சியே. இது படம் தொடங்குவதற்கு முன்னர் காட்டப்படும் எழுத்துக்களிலேயே விளக்கப் பட்டு விடுகிறது.

சுப்ரமணியபுரத்தின் கதை என்ன? ஒழுங்கான வேலை இல்லாத சில இளைஞர்கள் காலப்போக்கில் ஒரு அரசியல்வாதியின் அடியாட்கள் போல ஆக நேரிடுகிறது. வன்முறையின் பாதையில் இழுக்கப்படும் அவர்கள் அதன்பின் அதிலிருந்து வெளிவரவே முடிவதில்லை. இடையில் நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இந்தக் காதல் பிடிக்காமல் எச்சரிக்கும் இன்னொரு நண்பன், காதலித்த‌ பெண்ணின் துரோகத்தால் அவர்கள் எல்லோரின்  கதையும் முடிகிறது.

இப்போது தி டவுனின் கதை. திருடுவதையே தொழிலாகக் கொண்ட சில நண்பர்கள், அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு மாஸ்டர் மைண்ட் தாதா, முயன்றாலும் அந்த தாதாவின் பிடியிலிருந்து வெளிவரமுடியாத நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இதை எச்சரிக்கும் இன்னொரு நண்பன், ஒரு பெண்ணின் துரோகத்தால் நண்பர்கள் அனைவரும் காலி. கதாநாயகன் மட்டும் எஸ்கேப்.   அவன் காதலியை வைத்து அவனைப் பிடிக்க திட்ட்ம் தீட்டும் போலீஸ், துரோகியாகும் கதாநாயகி, இதிலும் எஸ்கேப்பாகும் கதாநாயகன். கதாநாயகன் எஸ்கேப் தவிர எல்லாமே ஒன்றுதானே.

கதாநாயகன் சாகிற சீன் இதிலே இல்லையே என்று ஜல்லியடிப்பவர்கள் போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கலாம். படத்தின் இயக்குனரான் பென் அப்ஃலெக் சுப்ரமணியபுரத்தைப் பார்திருப்பார் என்று நான் நம்பவில்லை, நீங்களும் நம்பப் போவதில்லை. இதைப்பற்றி ஆங்கிலத்தில் யாரும் பதிவிடப் போவதுமில்லை. ஆனால் இதே விச‌யம் தமிழில் நடந்தால் மட்டும் ஏன் நாம் இயக்குனரைக் குறை சொல்லி ஏகப்பட்ட‌ பதிவுகள் இடுகிறோம்? சில இடுகைகளில் கூறப்படும் சினிமா ஒற்றுமைகள் சிரிப்பை வரவழைப்பதாகவே இருக்கிறது. ஆகவே பொதுமக்களே வதந்திகளை நம்பாதீர்கள். இந்தப் பதிவையும் கூட...