India

Uganda

United Kingdom

Malaysia

30. இங்கிலாந்து கொண்டாட்டங்களும் ஒரு அப்பாவித் தமிழனும்...

புதன், டிசம்பர் 26, 2007

இந்தியாவில் ஏகப்பட்ட முறையும், ஆப்பிரிக்க நாடுகளில் சில முறையும் கிருஸ்த்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. இம்முறை இங்கிலாந்தில்... இருந்தாலும் வெள்ளைக்காரங்க கொஞ்சம் ஓவராத்தான் கொண்டாடுறாய்ங்க...
கிருஸ்துமஸுக்கான தொடக்கநிலை முன்னேற்பாடுகள் செப்டம்பர்/அக்டோபர் மாதத்திலேயே தொடங்கி விட்டன. இதில் முதலிடம் வகிப்பது கிருஸ்துமஸ் டின்னருக்கான உணவகத்தைத் தேர்ந்தெடுப்பது. ஒரு நான்கைந்து உணவகங்களிலிருந்து மெனு வாங்கி இரண்டு வாரங்களாக‌ ஓட்டெடுப்பு நடத்தி ஒன்றைத் தேர்ந்தெடுத்தாகி விட்டது. பின் அதற்கு முன்பணம் வசூலிப்பதில் இரண்டு வாரங்களை செலவிட்டனர். பணம் கொடுக்காமல் டிமிக்கி அடித்து இழுத்தடித்த இரண்டு பேர் ஓட்டெடுப்பில் எல்லோருக்கும் முன்பாக ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியவர்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் இரண்டு ஆய்வகங்களில் ஆய்வு செய்வதால் (அப்படித்தான் நம்பவைச்சிருக்கேன்) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஓட்டெடுப்பில் இரண்டு முறை கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி ஆயிற்று. இரண்டு முறையும் நான் தேர்தெடுத்த உணவகங்கள் டெப்பாஸிட் இழந்து தோற்றுப் போனது அவர்கள் உணவில் எனக்கிருக்கும் புலமையை உலகிற்கு உணர்த்தியது.
ஒரு வழியா டிசம்பர் மாசம் முதல் வாரத்தில் மிச்சக் காசையும் வசூல் செய்துவிட்டு, அடுத்த நாள் ஒரு உணவகத்திற்கு கூட்டிச் சென்றனர். நானும் ஸ்டைலாக ஒரு ஜீன்ஸும் டி சர்ட்டையும் மாட்டிக்கொண்டு போனால் அங்கே சொல்லி வைத்தாற்போல் ஒருவர் கூட டி சர்ட் அணிந்திருக்கவில்லை. எல்லோரும் ரொம்ப நல்ல புள்ளைங்களா ஜீன்ஸும், ஒரு முழுக்கை சட்டையும் அணிந்து வந்திருந்தனர். என்னடா இது, ஆரம்பமே சரியில்லையே என்று விதியை நொந்தபடி அமர்ந்தால் அடுத்த அடி விழுந்தது. அது உணவு மட்டுமில்லை, stand up காமெடி ஷோவும் சேர்ந்ததென்று. இந்த காமெடி ஷோக்களைப் பற்றி நான் முன்னரே கேள்விப் பட்டிருக்கிறேன். பக்கத்திலே உட்கார்ந்து இருக்கிறவங்களை வம்புக்கிழுத்து காமெடி செய்வதுதான் இவர்களில் நிறைய பேர் செய்வது. நல்ல வேளையாக மேடைலேருந்து கொஞ்சம் தள்ளிதான் இடம் கிடைத்தது. இருந்தாலும் மொத்த இடமே சின்னதா இருந்ததாலே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.
சாப்பாடு முடிஞ்சதும் இவங்க காமெடி ஷோவும் தொடங்கிச்சு. நானும் எவ்வளவோ கவனிச்சுப் பார்த்தேன், ஒரு 25% கூடப் புரியலை. நானும் எவ்வளவு நேரம்தான் புரியற மாதிரியே நடிக்கிறது...புரியுற மாதிரி நடிக்கிறது மட்டும்னா கூடப் பரவாயில்லை, ஸ்கூல், காலேஜ்ன்னு ஏகப்பட்ட இடங்கள்ள நடிச்ச அனுபவம் இருக்கு...இங்கே அவனுங்களோட சேர்ந்து சிரிக்கவும் வேண்டியிருக்கு. பிரச்சனை என்னன்னா அவனுங்க எப்போ சிரிப்பானுங்கன்னு எனக்குத் தெரியவே மாட்டேங்குது... நிறைய இடங்களில் அவனுங்க சிரிக்கிறப்ப நான் உர்றென்று இருப்பதும், அவனுங்க சீரியஸா கவனிச்சுக்கிட்டு இருக்கிறப்ப நான் அடக்க மாட்டாமல் சிரிப்பதுமாக காமெடி ஷோ பயங்கர காமெடியாக போய்க் கொண்டு இருந்தது. பக்கத்தில் ஒரு மாதிரியா பார்த்த வெள்ளைக்காரனிடம் "நைஸ் காமெடி, சிரிப்பை அடக்கவே முடியலை" என்று சொல்லி சமாளித்தேன். ஒரு கட்டத்திற்கு மேலே இனிமே நடிக்கவே முடியாது என்ற நிலை வந்து, எதிரே அமர்ந்து இருப்பவர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன். எதிரே ஒரு மலேசிய இந்தியப் பெண் என்னை மாதிரியே திரு திருவென்று முழிப்பதும், அவ்வப்போது கெக்கே பிக்கேவென்று சிரிப்பதுவுமாக இருந்தது. அடச்சே இங்கேயும் போட்டிக்கு வந்திட்டாங்களே என்று, சேரில் மிகவும் கீழே சாய்ந்து உட்கார்ந்து கொண்டால் மற்றவர்கள் என்னைக் கவனிக்க மாட்டார்களே என்று சாய்ந்த போதுதான் பார்த்தேன், பக்கத்து ஸீட் சைனாக்காரன் எனக்கு முன்னரே அந்த டெக்னிக்கைக் கையாண்டு கொண்டிருந்தான். "அடப்பாவி, நீ நேரா உட்கார்ந்தாலே உன்னை யாராலும் பார்க்க முடியாதேடா... நீ ஏன்டா இப்படிக் கஷ்டப் படுறே" என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஒரு வழியா ஒரு மணி நேரம் கழித்து, இந்தக் காமெடி கொடுமை முடிந்தது. அடுத்தது டான்ஸ் ஆடும் கொடுமை நடந்து கொண்டிருந்தது. நம்ம நான்கடி சைனாக்கார நண்பன் கிட்டத்தட்ட ஆறடி இருக்கும் பெண்ணுடன் டான்ஸ் ஆட எம்பி எம்பி முயன்று கொண்டிருந்தான். ஒரு நாளைக்கு ஒரு முறை அவமானப்பட்டால் போதுமென்று நான் விடு ஜூட்...

29.உகாண்டா போய் இங்கிலாந்து வந்தது டும் டும் டும்....

ஞாயிறு, நவம்பர் 04, 2007

நான் திரும்ப எழுதும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மிரட்டிய கோடிக்கணக்கான வாசகர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி இன்று முதல் திரும்ப எழுத ஆரம்பித்திருக்கிறேன்...(கொஞ்சம் ஓவராத்தான் பேசிட்டேனோ...!)


போன தடவை பிளேடைப் போட்டப்ப உகாண்டால இருந்தேன்... கொஞ்சம் மொக்கையா இருந்தாலும் பரவாயில்லை, பையன் உகாண்டாவைப் பத்தி எழுதுறானேன்னு எக்கச்சக்கமான பேர் (சரியா நாலு பேர்! அதுல ரெண்டு பேர் வழி தெரியாம உள்ளே வந்து மாட்டின‌வங்க...!) என்னோட பதிவு பக்கமா வந்துக்கிட்டு போயிக்கிட்டு இருந்தாங்க. இதுல நான் வேற ரொம்ப நாளா, எழுத முடியாத அளவுக்கு ரொம்ப பிஸியா இருந்தனா, அவங்களும் வந்து வந்து பார்த்துட்டு ஏமாந்து போய், இப்பல்லாம் என் பதிவை எட்டிப்பாக்குறதையே விட்டுட்டாங்க...(நான் எழுதியிருந்தாலும் அதைப் படிச்சுட்டு ஏமாந்துதான் போயிருப்பாங்கன்றதெல்லாம் வேற விசயம்...) கொஞ்சம் பிஸியா இருக்கிற மாதிரி ஆக்ட் குடுத்தா, இதுதான் சாக்குன்னு, இப்படியெல்லாமா பண்ணுறது...என்னது இது...சின்னப்புள்ளத்தனமா இருக்கு...


ஆகவே பெரியோர்களே, தாய்மார்களே... வாலிப, வயோதிக அன்பர்களே...எனது நண்பர்களே... உங்க எல்லோருக்கும் நான் இந்த மொக்கை பதிவு மூலமா சொல்லிக்கிறது ஒன்றே ஒன்றுதான்... நான் இப்பொழுது உகாண்டாவில் இல்லை. என்னை மேன்மை பொருந்திய மகாராணி ஆட்சிபுரியும் சூரியன் அஸ்தமிக்காத தேசத்திற்கு நாடுகடத்தி விட்டனர். (சாயங்காலம் மூன்றரை மணிக்கெல்லாம் இருட்டீருது, இதுக்கு இவனுங்க வெச்ச பேரப் பாத்தீங்களா.?வெள்ளைக்காரனுங்களுக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான்). எனவே அலைகடலென திரண்டு எனது வலைப்பதிவுக்குள் வாரீர்... உங்கள் பொன்னான ஆதரவைத் தாரீர்... நன்றி, வணக்கம்.

28.ஸ்காட்லாந்தின் கடைசி மன்னனும், உகாண்டாவும்...

திங்கள், மார்ச் 12, 2007

ஹாலிவுட்காரர்களுக்குத் திடீரென்று உகாண்டா மேல் காதல் வந்து விட்டது. காசினோ ராயலில் பாலேயைக் காட்டியவர்கள் (வெறும் 5 நிமிடங்களே என்றாலும்) இப்போது ஸ்காட்லாந்தின் கடைசி மன்னனிலும்....(இதில் முழுப் படமுமே உகாண்டாதான்)

இடி அமீன் கதை என்றவுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். ஆசியர்களை(இந்தியர்கள் எனப் பொருள் கொள்க) வெளியேற்றியது பற்றின படமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். படம் முடியும் தருணத்தில் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

இந்தப் படம் பற்றின உகாண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்....?

பத்திரிக்கைகள் பாராட்டித் தள்ளின. முசிவேனியின் மீடியா சுதந்திரம், உகாண்டா பற்றின உலகின் பார்வையை மாற்றி விட்ட்து என்று ஒரே புகழாரம்தான்.

ஆனால், ஃபீல்ட் மார்சல், விக்டோரியா கிராஸ் (VC), மிலிட்டரி கிராஸ் (MC), டிஸ்டிங்விஸ்டு சர்வீஸ் ஆர்டர் (DSO), கான்க்விரர் ஆஃப் தி பிரிட்டீஷ் எம்பரர் (CBE) இடி அமீன் தாதாவை (மேற்கூரிய பட்டங்கள் யாவையும் அமீன் தனக்குத் தானே சூட்டிக் கொண்டவை) ரொம்ப‌வும் ந‌ல்ல‌ப‌டியாக‌க் காட்டி விட்டார்க‌ள் என்று சாமானிய‌ர்க‌ள் முணுமுனுக்கிறார்க‌ள்.

இங்கே வ‌ருவ‌த‌ற்கு முன் உகாண்டா என்ற‌வுட‌ன் நினைவுக்கு வ‌ந்த‌வ‌ர் இடி அமீன்தான்.உகாண்டாவில் வேலை பார்க்க‌ப் போகிறேன் என்ற‌வுட‌ன் கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லோரும் நினைவுகூர்ந்த‌ ஒரு பெய‌ர் இடி அமீன்தான். இந்த‌ ச‌ங்க‌ட‌ங்க‌ள் எல்லா உகாண்ட‌ர்க‌ளுக்கும் இருக்கிற‌து. இங்கிருந்து எந்த‌ வெளிநாட்டிற்குச் சென்றாலும், உக‌ண்ட‌ன் என்ற‌வுட‌ன் வ‌ரும் உட‌ன‌டி ப‌தில் "ஓ... இடி அமீன்" ஏதோ இவ‌ர் அமீனால் பாதிக்க‌ப்ப‌ட்டு த‌ப்பி வ‌ந்த‌வ‌ரைப் பார்ப்ப‌து போல் ஒரு பார்வை... இவ‌ர்க‌ளின் கோப‌ம் என்ன‌வென்றால், ஸடாலினுக்காக‌ யாரும் ருஷ்யாவைப் ப‌ழிக்க‌வில்லை, போல் பாட்டிற்காக‌ யாரும் க‌ம்போடியாவை ப‌ழிக்க‌வில்லை. ஆனால் அமீனுக்காக‌ ஏன் எல்லோரும் உகாண்டாவை ப‌ழிக்கிறார்க‌ள்???

இந்த‌ப் ப‌ட‌ம் ஒட்டு மொத்த‌மாக‌, உகாண்டா ப‌ற்றின‌ உல‌கின் பார்வைவை மாற்றிவிடும் என்று தோன்ற‌வில்லை. ஆனால் க‌ண்டிப்பாக‌ அந்த‌த் திசையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறார்க‌ள் என்று சொல்ல‌ முடிகிற‌து. நாம் வ‌ழ‌க்க‌மாக‌ டாக்குமெண்ட‌ரிக‌ளில் பார்க்கும் உகாண்டாவாக இல்லாம‌ல், ப‌சியில் வாடும் ம‌க்க‌ளோ, உட‌ல் முழுக்க‌ ஈக்க‌ள் மொய்க்கும் குழ‌ந்தைக‌ளோ, உண‌வுப் பொட்ட‌ல‌ங்க‌ளைக் கொண்டு வ‌ரும் வ‌ண்டியை ச‌ண்டையிட்டு மொய்க்கும் கூட்ட‌ங்க‌ளோ இல்லாம‌ல் உகாண்டா, ஒரு வித‌த்தில் உண்மையான‌ உகாண்டா காட்ட‌ப் ப‌ட்டிருக்கிற‌து.

ஃபார‌ஸ்ட் விட்டேக‌ர் மிக‌வும் மென‌க்கொட்டிருக்கிறார் என்ப‌து ப‌ட‌ம் பார்க்கும் போது தெரிகிற‌து. நிறைய‌ ஹோம் ஒர்க் செய்திருக்க‌ வேண்டும். ந‌டை, பேச்சுவ‌ழ‌க்கு எல்லாவ‌ற்றிலுமே அச்சு அச‌ல் உகாண்ட‌ர்க‌ள் வாடை. அமீனின் பிர‌ப‌ல‌மான‌ மூட் மாறுத‌லை மிக‌வும் அனாச‌ய‌மாக‌ச் செய்திருக்கிறார். ஆஸ்கார் ஆச்ச‌ர்ய‌ம‌ளிக்க‌வில்லை.

இந்த‌ப் ப‌ட‌ம் வெளிவ‌ந்த‌தும், நிறைய‌ பேர் "அமீனும் நானும் ப‌ய‌ங்க‌ர‌ தோஸ்த் தெரியுமா? ஆனாலும் ம‌னித‌ர் அவ்வ‌ள‌வு மோச‌ம் கிடையாது" என்கிற ரேஞ்சில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அதில் என்னைக் க‌வ‌ர்ந்த‌து இர‌ண்டு பேட்டிக‌ள். ஒன்று, அமீனின் இங்கிலீஷ் வாத்தியார். அமீன் என்கிற‌ பெய‌ரை ஆங்கில‌த்தில் எழுதுவ‌த‌ற்கே ம‌னுச‌னுக்கு 5 வ‌ருட‌ங்க‌ள் ஆகி இருக்கிற‌து. ஆனாலும் விடாப் பிடியாக‌ முய‌ன்றிருக்கிறார். த‌ன‌க்கு ஆங்கில‌ம் தெரியாது என்ப‌தை எல்லோரிட‌மும் சொல்லிக் கொள்ளும் ப‌ழ‌க்கமும் அமீனுக்கு இருந்திருக்கிற‌து. இதைப் ப‌டித்து விட்டு ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் நினைகூர்ந்த‌து, ஒருமுறை இராணியைப் பார்ப்ப‌த‌ற்காக‌ ல‌ண்ட‌ன் சென்றிருந்த‌ போது, இராணியை மிஸ்ட‌ர் க்வீன் என்று அழைத்துவிட்டார்.

இன்னொன்று, அமீன் ஆசிய‌ர்க‌ளை நாட்டை விட்டு வெளியேற்றிய‌ பின்ன‌ர், அவ‌ர்க‌ள‌து சொத்துக்க‌ளை எவ்வாறு பிரித்துக் கொடுத்தார் என்ப‌து ப‌ற்றிய‌து. அமீன் எந்த‌ ஊருக்கொல்லாம் போகிறாரோ அந்த ஊர் ம‌க்க‌ளெல்லாம் அந்த‌ ஊரில் இருக்கும் இந்திய‌ர்க‌ளின் க‌ட்ட‌ட‌ங்க‌ளை நோக்கி ஓடுவார்க‌ள். யார் முத‌லில் சென்ற‌டைகிறாரோ அவ‌ருக்கே அந்த‌ க‌ட்டிட‌த்தை வ‌ழ‌ங்கிவிடுவார் அந்த‌ வ‌ள்ள‌ல். இந்திய‌ர்க‌ளை வெளியேற்றிய‌தில் அன்றைக்கு அங்கிருந்த‌ இந்திய‌ர்க‌ளின் ப‌ங்கும் முக்கிய‌மான‌தாம். அவ்வ‌ள‌வு மோச‌மாக‌ உள்ளூர் ம‌க்க‌ளை ந‌ட‌த்தினார்க‌ளாம். கொஞ்ச‌ம் காசு சேர்ந்த‌ பின், எங்கே இருக்கிறோம் என்ப‌தையே ம‌ற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும் என்ப‌த‌ற்கு இது ஒரு ப‌டிப்பினை.