India

Uganda

United Kingdom

Malaysia

34. கதைத் திருட்டு ‍ வதந்திகளை நம்பாதீர்...

வியாழன், அக்டோபர் 07, 2010

சமீப காலமாக இணையத்தில் ஒரு விசயம் அதிகமாகவே விவாதிக்கப் படுகிறது. அதாவது நம் திரை இயக்குனர்கள் ஆங்கிலமோ அல்லது வேறு ஏதோ ஒரு மொழியிலோ வெளிவந்த படங்களின் கதையையோ  அல்லது காட்சியையோ நம் இந்தியத் தன்மைக்கு மாற்றியோ அல்லது மாற்றாமலோ படமாக்கி விடுகின்றார்களாம். அதை விடக் கொடுமை அந்த ஒரிஜினல் படங்களுக்கு நன்றி என்று கூடப் போடுவதில்லையாம். என்ன கொடுமை, என்ன கொடுமை... இப்படிப்பட்ட விமர்சனங்கள் இணையம் முழுக்க நிறைய காணக்கிடைக்கின்றன. இந்தப் பின்ன‌னியில்தான் நான் நேற்று பார்த்த ஒரு ஆங்கிலப் படத்தை  அலச வேண்டியிருக்கிறது. படத்தின் பெயர் "தி டவுன்". சார்ல்ஸ் டவுன் என்பதன் சுருக்கமே அது. இந்தப் பெயர் ஒன்றே போதும் இந்த இயக்குனருக்கு கற்பனை வளமே இல்லையென்று நிரூபிக்க. ஏனென்றால் நம் இயக்குனர் இங்கே சுப்ரமணியபுரம் என்று ஏற்கெனவே சுயமாகச் சிந்தித்துப் பெயர் வைத்து விட்டார். ஊரின் பெயரால் இங்கே ஏற்கெனவே ஒருவர் சிவகாசி, மதுர, திருப்பாச்சி என்று பல படங்கள் வந்திருந்தாலும், சுப்ரமணியபுரத்தில் மட்டுமே கதைமாந்தர்கள் ஊடாக‌ அந்த ஊரின் ஒரு முழுமையான சித்திரம் பார்வையாளனுக்குக் கிடைத்தது. தி டவுனும் அதே மாதிரியான ஒரு முயற்சியே. இது படம் தொடங்குவதற்கு முன்னர் காட்டப்படும் எழுத்துக்களிலேயே விளக்கப் பட்டு விடுகிறது.

சுப்ரமணியபுரத்தின் கதை என்ன? ஒழுங்கான வேலை இல்லாத சில இளைஞர்கள் காலப்போக்கில் ஒரு அரசியல்வாதியின் அடியாட்கள் போல ஆக நேரிடுகிறது. வன்முறையின் பாதையில் இழுக்கப்படும் அவர்கள் அதன்பின் அதிலிருந்து வெளிவரவே முடிவதில்லை. இடையில் நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இந்தக் காதல் பிடிக்காமல் எச்சரிக்கும் இன்னொரு நண்பன், காதலித்த‌ பெண்ணின் துரோகத்தால் அவர்கள் எல்லோரின்  கதையும் முடிகிறது.

இப்போது தி டவுனின் கதை. திருடுவதையே தொழிலாகக் கொண்ட சில நண்பர்கள், அவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு மாஸ்டர் மைண்ட் தாதா, முயன்றாலும் அந்த தாதாவின் பிடியிலிருந்து வெளிவரமுடியாத நண்பர்களில் ஒருவனுக்குக் காதல், இதை எச்சரிக்கும் இன்னொரு நண்பன், ஒரு பெண்ணின் துரோகத்தால் நண்பர்கள் அனைவரும் காலி. கதாநாயகன் மட்டும் எஸ்கேப்.   அவன் காதலியை வைத்து அவனைப் பிடிக்க திட்ட்ம் தீட்டும் போலீஸ், துரோகியாகும் கதாநாயகி, இதிலும் எஸ்கேப்பாகும் கதாநாயகன். கதாநாயகன் எஸ்கேப் தவிர எல்லாமே ஒன்றுதானே.

கதாநாயகன் சாகிற சீன் இதிலே இல்லையே என்று ஜல்லியடிப்பவர்கள் போய் பிள்ளை குட்டிகளைப் படிக்க வைக்கலாம். படத்தின் இயக்குனரான் பென் அப்ஃலெக் சுப்ரமணியபுரத்தைப் பார்திருப்பார் என்று நான் நம்பவில்லை, நீங்களும் நம்பப் போவதில்லை. இதைப்பற்றி ஆங்கிலத்தில் யாரும் பதிவிடப் போவதுமில்லை. ஆனால் இதே விச‌யம் தமிழில் நடந்தால் மட்டும் ஏன் நாம் இயக்குனரைக் குறை சொல்லி ஏகப்பட்ட‌ பதிவுகள் இடுகிறோம்? சில இடுகைகளில் கூறப்படும் சினிமா ஒற்றுமைகள் சிரிப்பை வரவழைப்பதாகவே இருக்கிறது. ஆகவே பொதுமக்களே வதந்திகளை நம்பாதீர்கள். இந்தப் பதிவையும் கூட...