India

Uganda

United Kingdom

Malaysia

27. தைரியமான ஆண்களுக்கு மட்டும்....

புதன், நவம்பர் 22, 2006

நம்மூர் ஆண்கள் தைரியத்தை வெளிக்காட்ட, ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது போல, இங்கே ஒரு குறிப்பிட்ட இன மக்கள் ஒரு காரியம் செய்து தங்கள் தைரியத்தை வெளிக்காட்டுகிறார்கள்.

முகிசு என்ற அந்த இனத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் கண்டிப்பாக அந்த வீர சாகசத்தைப் பண்ணியாக வேண்டும். அதுவும் சிறு வயதில் இதை செய்து காட்ட அனுமதி இல்லை. வயதுக்கு வந்த ஆண்கள் (!) மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த சாகசத்தை செய்யாவிட்டால் அந்த ஆணைத் திருமணம் செய்ய எந்த அழகியும் முன்வரமாட்டாள்.

இந்த வீர விளையாட்டிற்குப் பயந்துபோய் புதரில் ஒளிந்து கொண்டு வாழ நினைத்தாலும் முடியாது. இதற்கென அமைக்கப்ப்ட்டிருக்கும் புதர் ஒழிப்புக் கமிட்டி ஒன்று, ஒரு புதர் விடாமல் தேடி அவர்களைக் கண்டுபிடித்து விளையாட்டை நடத்தி முடித்து விடுவார்கள்.

பண்டைக்காலத்தில் நம்மூரில் குழந்தை இறந்தே பிறந்தால், அதன் மார்பில் வாளால் கீறி அதன் பிறகுதான் தகனம் செய்வார்களாம். இந்த மேட்டரை எப்படியோ தெரிந்து கொண்ட இந்த மக்களும், இறந்து பிறந்த குழந்தைக்கும் இதை செய்துதான் புதைப்பார்கள்.

இந்த இனத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், மற்ற இனத்தைச் சேர்ந்த ஆண்களும் இதைச் செய்து காட்ட வேண்டும்.

போதும்டா பில்ட் அப்பு, மேட்டரைச் சொல்லுங்கிறீங்களா... வர்றேன். அதுக்குத்தான் வர்றேன். அதாகப் பட்டது, முகிசு ஆண் ஒருவன் வயதுக்கு வந்துவிட்டான் என என்று உலகிற்கு அறிவிக்கும் உன்னத முயற்சி இது. ந்ம்மூரில் பெண்களுக்கு பூப்புனித நீராட்டு விழா என்று நடத்துகிறார்களே, அதைப் போல்தான் இது.

அன்றைய தின விழாவில் கலந்து கொள்ள உற்றார் உறவினர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பி, அந்த தினத்தன்று அந்தப் பையனை மணலால் (களிமண் போல இருக்கிறது) குளிப்பாட்டுகிறார்கள். அதன் பின் தாரை தப்பட்டை அடித்துக் கொண்டு அனைவரும் ஊர்வலம் செல்கிறார்கள். (ஊர் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காகத்தான்..) பின் இதற்காகவே அமைக்கப் பட்டிருக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கே ஒரு பூசாரி இவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். பையன் கொஞ்சம் பயந்தவனாக இருந்தால் சரக்கடித்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள். அதன் பின்னர் அனைவரும் ஆடிப்பாடுகிறார்கள். பின் பையனின் ஆடை களையப் படுகிறது. பூசாரி கத்தியுடன் பையனை நெருங்குகிறார். மக்கள் அனைவரும் குலை போடுவது போல் பயங்கரமாக கத்துகிறார்கள். அதன் பின் என்ன நடந்திருக்கும் என உங்களால் ஊகிக்க முடிந்திருக்கும்.

ஆமாம் மக்களே அதேதான். தினமலர் பாசையில் சொன்னால் "நறுக்". இரத்தம் செட்டச் சொட்ட அதில் மெத்திலேட்டட் ஸ்பிரிட் அல்லது டிங்சர் ஊற்றுகிறார்கள். மக்கள் அனைவரும் பையனின் தைரியத்தில் மெய்மறந்து கைதட்டுகிறார்கள். இதில் மிகவும் தைரியமான ஆண்கள் செய்வதைக் கேட்டால் நீங்களே மெய்சிலீர்த்து விடுவீர்கள்... அது என்னவென்றால் நம்மூரில் சமைக்கப் பயன்படும் மிளகாய்தூளையும், உப்பையும் கலந்து அந்த இடத்தில் பூசிக் கொள்வார்கள்... (அடப் பாவிகளா... என்ன, சமைக்கவா போறீங்க...)
இந்த வீர விளையாட்டைப் பற்றி கேள்விப்ப்ட்ட நாளிலிருந்தே முகிசு இனப் பெண்களைப் பார்த்தாலே நடுக்கமாக இருக்கிறது. அங்கே யாருக்கும் தைரியம் இருந்தால் சொல்லுங்கள்... பரவாயில்லை பிளைட் டிக்கெட்டை நீங்களே எடுத்துக்குங்க... வர்றதுக்கு முன்னாடி தெரியப்படுத்துங்க. ஊரைக்கூட்டி அமர்களம் பண்ணீறலாம்...

26. இதுதான் உகாண்டா...

சனி, ஜூன் 24, 2006

முதன்முதலாக இங்கே பார்மஸியில் நுழைந்த போது மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய பழைய மற்றும் புழக்கத்தில் இல்லாத மருந்து வகைகள் தென்பட்டன. புதிய மருந்துகள் வருகை மிகவும் தாமதமாகவே நடக்கிறது.

இவர்களக்கு அனைத்திலும் பெரிய பெரிய டின்கள்தான் வேண்டும். பாராசெட்டமாலில் தொடங்கி, குளோராம்பினிக்கால், ஆம்பிசிலின், அமாக்சிசிலின் முதலான ஆன்ட்டி பயாட்டிக்குகள் வரை எல்லாமே 1000, 500 மாத்திரைகள் கொண்ட டின்களில்தான் அதிகமாக மார்க்கெட்டில் விற்பனையாகின்றன‌. பிளிஸ்டரில் வரும் மருந்துகளை விட இவை மிகவும் விலை குறைவாக இருப்பதே காரணம்.

இருமலுக்குப் பயன்படும் லிங்டஸும் ஒரு லிட்டர் கேனில் கிடைக்கிறது. பிராண்டட் மருந்துகளின் விற்பனை முகவும் குறைவு, ஆனால் விலை அதிகம். அதனால் ஜெனிரிக் கம்பெனிகள்தான் சக்கை போடு போடுகின்றன. பாராசெட்டமாலை "பனடால்" என்கிற ஸ்மித் க்ளய்ம் பெயரில்தான் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் வங்கும் போது, அதைக் கொடுத்தால் மறுத்து விட்டு லோக்கல் கம்பெனியின் பிராண்டை கேட்கிறார்கள். காரணம் விலை. ஒரு பாக்கெட்(100 மாத்திரைக‌ள்) பனடால் விலை கிட்டத்தட்ட 150 ரூபாய். லோக்கல் கம்பெனி 1000 மாத்திரைகள் கொண்ட டின் 125 ரூபாய். வேறு என்ன செய்வார்கள்?

மருந்துகள்தான் இப்படி என்றால், வைத்தியம் செய்பவர்கள் கதை அதற்கும் மேல். இங்கே ஒழுங்காக டாக்டருக்குப் படித்து பிராக்டீஸ் பண்ணுபவர்கள் மிகவும் குறைவு. மிகவும் குறைவான ஸீட்கள். மற்ற படிக்கு Clinical Officer எனப்படும் (நம்மூர் கம்பௌண்டர் மாதிரி) மூன்று வருட படிப்பு முடித்தவர்கள் டாக்டர்களைப் போலவே வைத்தியம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள். இவர்கள் போக நர்ஸுகளும் கிளினிக் வைத்து நடத்துகிறார்கள். இவ்வளவும் நடந்தும் நிறைய இடங்களில் மருத்துவ வசதி இல்லை என்பது வேதனையான விஷயம்.

இங்கே கொடிகட்டிப் பறப்பவர்கள் பார்மஸிட்கள் எனப்படும் மருந்தாளுனர்கள்தான். கல்லூரியில் சேர டாக்டருக்குத் தேவைப்படும் மதிப்பெண்களை விட பார்மஸி படிப்பிற்கு நிறையத் தேவைப் படுகிறது. காரணம் இடங்கள். சென்ற ஆண்டு வரை, பார்மஸி படிப்பிற்குப் பத்தே பத்து இடங்கள். இவர்களின் தேசிய யுனிவர்சிட்டியான Makarere University யில் மட்டுமே அட்மிஸன். போனால் போகிறதென்று போன வருடம் Mbarara University யிலும் பத்து இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். கற்பனை செய்து பாருங்கள் கிட்டத்தட்ட தமிழ்நாடு சைஸில் இருக்கும் ஒரு இடத்தில் வருடத்திற்கு பத்தே பார்மஸிஸ்டுகள். (தமிழ்நாட்டில் வருடத்திற்கு கிட்டத்தட்ட 1700 பேர்). பின் அவர்களுக்கு ஏன் இருக்காது மவுசு.

பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு பார்மஸிஸ்டும் இரண்டு பார்மஸியில் வேலை பார்க்க அனுமதிக்கப் படுகிறார்கள்.அப்படியும் பற்றாக்குறை. புதிதாக பார்மஸி வைக்க விரும்புபவர்கள் பார்மஸி படிக்கும் மாணவர்களை மூன்றாம் வருடத்திலேயே புக் பண்ணி விடுகிறார்கள். உபரியாக காலேஜ் ஃபீஸையும் கட்டி விடுகிறார்கள்). இவ்வளவு பற்றாக்குறை இருந்தும், வெளிநாட்டு பார்மஸி பட்டதாரிகளை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் மக்கரேரேயில் கிட்டத்தட்ட 6 மாதம் படித்து, 6 மாதம் பயிற்சி எடுத்த பின்தான் அங்கீகாரம்.

மலேரியாதான் பிரதான வியாதி. அடுத்தது எயிட்ஸ். வெகு காலமாக குயினினையும், க்ளோரோகுயினையும் பயன் படுத்தியதில், இப்போது அவை எதிர்ப்புத் தன்மை இழந்துவிட்டன. இனிமேல் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டி விட்டு, புதிய வகை மலேரியா மருந்துகளை இலவசமாக வினியோகிக்கிறது அரசாங்கம்.மருத்துவமனை ஊழியர்கள் சிலர் அவற்றை வெளியே கடத்திவந்து விலைக்கு விற்பதை காணும் போது வருத்தமாக இருக்கிறது. வருத்தப் படுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் உகாண்டா...

25. இந்தியாவை மிஞ்சி விட்டது உகாண்டா...

புதன், ஜூன் 21, 2006

இந்தியாவில் இருந்த போது, உலகிலேயே அங்கேதான் லஞ்சம் அதிகமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்த பின்பு, இந்தியா எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது. ஏதெனும் திருட்டு போய் விட்டது என்று புகார் கொடுக்க காவல் நிலையம் சொன்றால், புகாரை வாங்குவதில் ஆரம்பிக்கும் உங்கள் தண்டச் செலவு. வெளிநாட்டவர் என்றால் ஸ்பெசல் ரேட். உள்ளூர்காரர்களுக்கு கொஞ்சம் தள்ளுபடி கிடைக்கும். புகாரை வாங்கின மறுநாளே, கடமையே கண்ணாயிணாராக காலங்கார்த்தால் உங்களைச் சந்திக்க ஒரு கான்ஸ்டேபில் வருவார்.

"எங்க பாஸ் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்"

அவனுடைய பாஸிற்கும், நம்மூர் கொள்ளைக்கூட்ட பாஸிற்கும் ஆறு வித்தியாசங்களைக் கூட காண முடியாது. அத்தகைய "பாஸ்" எனப்படுபவர் ஒரு C.I D. ஏதேனும் காணாமல் போய் விட்டதென்று புகார் கொடுத்திருந்தால், அதைத் திருடியதே நாம்தான் என்று ஆரம்பிப்பார். அதாவது, காணாமல் போனது எங்கே என்று அவரை நாம் கேட்டால், எது எங்கே இருக்கிறது என்று அவர் நம்மைத் திருப்பிக் கேட்பார்.

நான்கு காஸ்டேபில்கள் அவரது அடியாட்கள் மாதிரி உங்களைச் ச்ற்றி வந்து, நீங்கள்தான் திருடிவிட்டீர்கள் என்று கோஷம் போடுவார்கள். இவரைத் தூக்கி உள்ளே போடுங்கள் என்று சொல்லி விட்டு, பாஸ் வெளியே போய் விடுவார். சுற்றி இருக்கும் நான்கு அல்லக் கைகளில், ஒன்று, எவ்வளவு வைத்திருக்கிறாய் என்று ஆரம்பிக்கும். காய்கறிக்கடை போல் பேரம் பேசி, ஆளுக்கு 5000 ஷில்லிங்ஸ் கொடுத்தால், இன்று உன் வீட்டில் தூங்கலாம் என்று ஆசை காட்டி முடிப்பார்கள்.

இது முதல் நாள், இரண்டாம் நாள் ஒரு கான்ஸ்டேபில் பவ்யமாக உங்களைப் பார்க்க வருவார். திருடன் என்று ஒருவனைச் சந்தேகப் படுகிறோம். அவன் இப்போது 150 கி.மீ தள்ளி இருக்கும் ஒரு ஊரில் இருக்கிறான். அவனைப் போய் பிடித்து விசாரிக்க போக்குவரத்துச் செலவுக்கு 100,000 கொடுங்கள் என்று அதிகாரமாக வழிவார்கள். பின் இரண்டு நாட்கள் கழித்து, அது அவனில்லை என்று சொல்லி விடுவார்கள். கடைசியில், நீ இதை இன்ஸூரன்ஸில் க்ளெய்ம் செய்து வாங்கிக் கொள் என்று ஒரு ரிப்போர்ட் கொடுத்து விடுவார்கள். கடைசியி பார்த்தால், நாம் தொலைத்ததை விட அவர்களுக்குத்தான் அதிகமாகத் தண்டம் அழுதிருப்போம். அதனாலோ என்னவோ, இங்கே நிறைய பேர் தொலைத்தாலோ, திருடு போனாலோ போலீஸிடம் போவதே இல்லை.

அடுத்த கொள்ளைக் காரர்கள், குடியேற்ற உரிமை ஆட்கள். இங்கே யாராவது இந்தியர்களைப் பார்த்தாலே அவர்களுக்கு கொண்டாட்டம் வந்துவிடும். காரணம் 100க்கு 80 குஜராத்திகள் சட்ட விரோதமாகத் தங்கி இருப்பவர்கள். இவர்கள் சற்று பணக்கார கொள்ளையர்கள். டாலரில்தான் டீல் செய்வார்கள். முறையான உரிமம் இருந்தாலும் வந்து தொல்லை கொடுக்கத்தான் செய்கிறார்கள். என்னிடம்தான் முறையான உரிமம் இருக்கிறதே என்று காட்டினாலும் விட மாட்டார்கள். சாய் மணி கொடு, வந்து விட்டோம் ஏதாவது கொடு என்று வழிவார்கள். உரிமம் இருந்தால் கொஞ்சம் தைரியமாகப் பேசலாம். இல்லையென்றால் டாலரில் மொய் எழுதிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அது இது என்று இல்லை. எங்கேயும் லஞ்சம் எதிலும் லஞ்சம். யாராவது உகாண்டன் தாத்தா வந்து, வர்ம அடி கொடுத்தால்தான் உண்டு.

25. ஒரு படக் கதை...

ஞாயிறு, ஜூன் 18, 2006
காலைலே எழுந்திச்ச உடனே இப்படி கண்ணை மூடிக்கிட்டு யோகா பண்ணனும்னு அம்மா சொல்லி இருக்காங்க...
யோகாவை முடிச்சுட்டு ஃப்ரெஷா குளிச்சுட்டு வரனுமாம்...
யாருப்பா அது, கைல கிலுகிலுப்பை எல்லாம் குடுத்து விளையாடச் சொல்றது... அதெல்லாம் சின்னப் பசங்க விளையாட வேண்டியது...

Posted by Picasaஹையா... ஸ்டெதஸ்கோப் கிடைச்சாச்சு... நான் டாக்டராயிட்டேன்...
நான் டாக்டரானது தெரிஞ்ச உடனே வெளில ஒரே பேஸண்ட்ஸ் கூட்டமாம்.. இன்னைக்கு என் காட்ல ஒரே மழைதான் போங்க...

என்னது..!!! என் பேரை போலி டாக்டர் லிஸ்ட்ல சேர்த்துட்டாங்களா...?
என் பேரை அந்த லிஸ்ட்ல இருந்து எடுக்கிற வரைக்கும் இந்த ஸ்டெதஸ்கோப் கடிக்கும் போராட்டத்தை நடத்தலாம்னு இருக்கேன்...

Posted by Picasa


ஹி ஹி ஹி.. என் பேர லிஸ்ட்ல இருந்து எடுத்துட்டாங்கலாம்...
இந்தக் கொடுமையைப் பார்த்தீங்களா... இந்த மாமாவுக்கு எழுத ஒன்னுமே தோணலைன்னு என்னல்லாம் எழுதுறார்னு....

Posted by Picasa


இந்த மாமாவுக்கு வேற வேலையில்லை... வாங்க, நாம தூங்கப் போகலாம்...

24. உகாண்டா நிலவரம்.... கலவரம்???

சனி, மே 20, 2006

அங்கே தமிழ்நாட்டில், கலைஞர் ஆட்சியேற்பதற்கு முந்தின நாள் சாயங்காலம், இங்கே, முசிவேனி மூன்றாம் முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். அங்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நாளில், இங்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்கள் கழிந்து...

கடந்த 20 ஆண்டுகளில் முசிவேனி, பதவியேற்கும் நான்காவது விழா இது. 1985 ல் Milton Obote யிடமிருந்து, பதவியைப் பறித்த,Titi Okello விடமிருந்து நாட்டைக் காப்பாற்ற National resistance Army (NRA) புரட்சிக்குப் பின், 1986 இந்திய குடியரசு தினத்தன்று, முதன் முதலாகப் பதவியேற்றார். அதன் பின் முறையாக தேர்தலில் பங்கேற்று, 1996 லும், 2002 லும். இந்த பிப்ரவரியில் நடந்த இந்த Multi Party தேர்தல், உகாண்டா அரசியல் சரித்திரத்தில் ஒரு முக்கியமான் நிகழ்வு. முசிவேனிக்கு 58% ஓட்டுகளும், அவரை எதிர்த்த Forum Democratic Change (FDC)ஐ சேர்ந்த Col. Dr. Kissa Besigye க்கு 37% ஓட்டுகளும் கிடைத்தன.

நிறைய பக்கத்து நாட்டு அதிபர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியும், நிறைய பேர் வராமல் போனது, ஆப்பிரிக்காவில் முசிவேனியின் செல்வாக்கு மங்குவதைக் காட்டியது. ஒரு காலத்தில், ஆப்பிரிக்க மக்களுக்கு மட்டுமல்லாது, பல ஆப்பிரிக்க அதிபர்களுக்கே உதாரண புருசனாக இருந்தவர், 20 வருட தொடர் ஆட்சியின் முடிவில் களையிழந்து காணப் படுகிறார்.

தொடர் மின்சாரத் துண்டிப்பு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதைச் சரிக்கட்ட கருமாவிலும், புஜகாளியிலும் 2010 க்குள், அணைகள் கட்ட வேண்டும். அது போக, நம்மூரில் வீரப்பன் இரண்டு மாநில போலீசுக்குத் தண்ணீர் காட்டியது போல, இங்கே Kony என்னும் புரட்சிக்காரன் Lords Resistance Army (LRA)என்னும் அமைப்பை வைத்துக் கொண்டு, தெருவோர அனாதைச் சிறுவர்களைக் கடத்திக் கொண்டு போய் பயிற்சியளித்து, உகாண்டா, காங்கோ இரண்டு நாட்டு ஆட்சியாளர்களின் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். உகாண்டா அமெரிக்க தூதரகமே இந்த வருட இறுதிக்குள், கோனியின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவோம் என்று அறிவிக்குமளவுக்கு அண்ணன் ஃபேமசாகி விட்டார். அங்கே நடந்தது போலவே இங்கேயும், பொது மன்னிப்பு கொடுக்கலாமா கூடாதா என்று, ரேடியோதோறும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த உகாண்டா வீரப்பனைப் பற்றி தனிப் பதிவு போடலாம் என்றிருக்கிறேன்.

மற்ற படிக்கு, மழைக்காலம் துவங்கி விட்டாலும், சென்ற ஆண்டைக் காட்டிலும், மிகக் குறைவாகவே பெய்கிறது. லேக் விக்டோரியாவிலும் தண்ணீர் மட்டம் எதிர்பார்த்த படிக்கு ஏறவில்லை. இங்கே மின்சார வினியோகம் UMEME என்கிற தனியார் வெளி நாட்டுக் கம்பெனி வசம் இருக்கிறது. குறைந்த அளவே மின்சாரம் உற்பத்தி செய்ய முடிந்த போதிலும், அதே செலவு ஆவதால், 37% மின்கட்டண உயர்வு தடுக்க முடியாதது என்ற நல்ல செய்தியை அறிவித்துள்ளது. சுத்தமாக மின்வினியோகத்தைத் துண்டித்து விட்டு, அதே செலவாகிறது என்று, இன்னும் கட்டணத்தைக் கூட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது...

23. காணாமல் போன பதிவு...

திங்கள், மே 01, 2006

பிளாக்கரில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. இந்தப் பதிவு இரண்டு முறை வெளியிட்டும், டாஸ்போர்டில் தெரியவே மாட்டேனென்கிறது. பின்னூட்ட்மும் வேலை செய்ய மாட்டெனென்கிறது ( தகவல் நன்றி துளசி மேடம்). மூன்றாவது முறையாக முயற்சிக்கிறேன். வருகிறதா பார்க்கலாம.
================================================================

நிறைய நாட்கள் எந்தப் பதிவும் போடாததால், சந்தோசப் படுகிற மக்கள்தொகை அதிகமாகிவிட்ட செய்தி கிடைத்ததனால் அவசர அவசரமாக இந்தப் பதிவு

கொஞ்சம் கொஞ்சமாகவாவது மழை பெய்வதால், 62 மணி நேரத்தில், 48 மணி நேரம் மின்சாரம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சந்தோசம் மனதைத் தொடும் முன்னரே 3 நாட்களுக்கு தண்ணீரைத் துண்டித்து புண்ணியம் கட்டிக் கொண்டிருக்கிறது தண்ணீர் வாரியம். கஷ்டத்தைப் போக்க ஒரே வழி, மழை பெய்யும் போது, ஏதேனும் அலுவலக காரணத்தைச் சொல்லி வெளியில் சுற்ற வேண்டியதுதான். மழையில் நனைந்த மாதிரியும் ஆயிற்று, குளித்த மாதிரியும் ஆயிற்று. வீடு நாறத் தொடங்கும் முன்னர், தண்ணீர் கிடைக்க உட்டாலக்கடி சாமியாரை வேண்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.


ோடா போடா காரர்களிடம் கொஞ்சம் பணம் கொடுத்தால், அன்றைய தினம் கழுவிக் கொள்ள ஒரு ஜெரிக்கானில் (கேனில்) தண்ணீர் கிடைக்கிறது. குளிக்க மழையையும், கழுவ போடா போடா காரர்களையும் நம்பி பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
================================================================

சரி ரொம்ப போரடிக்கிறதே இவர்களிடம் ஏதாவது கதையடித்து நேரத்தைப் போக்கலாம் என்று முடிவு செய்தேன்.முந்தா நாள் சேம்பியன்ஸ் ட்ரோபியில் பார்சிலோனா வெற்றி பெற்றதை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள். அவர்கள் சந்தோசத்தில் பங்கு கொள்ள எண்ணி ரொணால்டோ சூப்பரா விளையாடினாருல்ல (ஏதோ நமக்கு தெரிஞ்ச நாலஞ்சு பேரில ஒண்ணு...நல்லவேளை பீலே கலக்கினாருல்ல என்று சொல்லவில்லை...)என்று சொல்லி அசடு வழிந்த போது, அவர்கள் பார்த்த பார்வையில் இருந்தது இளக்காரமா அல்லது பரிதாபமா என்று தெரியவில்லை. இங்கே நான் சந்திக்கும் இரண்டாவது பிரச்சினை இது.முதலாவது, இந்தி தெரியாதது, இரண்டாவது, கிரிக்கெட் மட்டுமே தெரிந்திருப்பது.இந்தி பேசுரவன்கிட்ட சகஜமா பேச முடியல, ஏன்னா நமக்கு இந்தி தெரியாது. சரி இங்கிலீஸ் பேசுர ஆப்பிரிக்கன் கிட்ட பேசலாம்னா அவனுக்கு பிடிச்ச விசயங்கள்ல நமக்கு பரிட்ச்யம் இல்லை. கவுண்டர் சொன்ன மாதிரி, கல்லக் கண்டா நாயக் காணோம், நாயக் கண்டா கல்லக் காணோம்...

கிளப் மாட்சிற்கே இந்த ஆட்டம் ஆடுபவர்கள் உலகக் கோப்பைக்கு என்ன ஆட்டம் ஆடுவார்களோ தெரியவில்லை. அதற்குள்ளாகவாவது, யார் யார் எந்த டீமில் விளையாடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.எந்த பார், ரெஸ்டாரண்ட், ஹோட்டல் என எங்கு சென்றாலும் TV யில் கால்பந்துதான் ஓடிக் கொண்டிருக்கிறது. இது போக சில இடங்களில், பெரிய திரையில் வேறு காட்டுவார்களாம்.
================================================================

சரி விளையாட்டை விடுங்கள், சாப்பாடு பற்றி பேசலாம் என்றால், இவர்கள் உண்பது, மட்டோக்கி எனப்படும், வாழைக்காயை நன்றாக வேக வைத்துத் தயாரிக்கப்படும் ஒரு வஸ்து, போஷோ எனப்படும், நம்மூர் குழைந்த பச்சரிசி சாதத்திற்கும், இட்லிக்கும் இடையிலான ஒரு தயாரிப்பு, மற்றும் ஆப்பிரிக்கன் சப்பாத்தி எனப்படும், ரப்பர் தட்டு போன்ற ஒரு சமாச்சாரம் என நமக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது... பற்றாக்குறைக்கு, இவர்களுக்கு உரைப்பு என்று உச்சரித்தாலே கண்ணில் தண்ணீர் வந்துவிடும்...நம்மவர்கள் அதிகமாக காரம் சேர்த்துக் கொள்வதைப் பற்றிக் கிண்டலடிக்கிறார்கள்..(இந்தியர்கள் கழிவறையில் ஏன் டிஸ்யூ பேப்பர் உபயோகிப்பதில்லை தெரியுமா? இவர்கள் உண்கிற காரத்திற்கு, பேப்பரை அங்கே வைத்தவுடன் தீப்பற்றிக் கொள்ளும்..)

இந்தி படிப்பதை விட கால்பந்து பற்றி அறிந்து கொள்தல் சுலபம் என்று தோன்றுகிறது... இவை எல்லாவற்றுக்கும் மேலாக பார்க்கலாம், இன்னும் எத்தனை நாளுக்கு வருண பகவானும், போடா போடாகாரர்களும் கருணை காட்டுகிறார்கள் என்று...

22. நான் Muzungu வான கதை...

செவ்வாய், ஏப்ரல் 11, 2006

வயது அதிகமாகிக் கொண்டே போவதை நினைவு படுத்தும் சமாச்சாரமாக இருப்பதால், நான் பிறந்த நாளெல்லாம் கொண்டாடுவதில்லை. பெற்றோரும், உடன்பிறந்தோரும் ஃபோனில் வாழ்த்துச் சொல்லும் போதுதான் அன்று பிறந்த நாள் என்பதே நினைவுக்கு வரும்.

பிறருடைய பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் அதிகமாகக் கலந்து கொண்டதில்லை. (என் தம்பியுடையதைத் தவிர... காரணம் அவன் பிறந்த தினம்... டிசம்பர் 25). இங்கே நண்பி ஒருவர் அவருடைய பையனின் 3 வது பிறந்த நாள் விழாவிற்கு அழைத்த போது, இங்கே எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் ஆவலில் ஒப்புக் கொண்டேன்.

விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னர், என்னவெல்லாம் தேவைப்படும் என்று கணக்கிட்டு வாங்கி விட்டார். 150,000 உகாண்டன் சில்லிங்ஸ், கிட்டத்தட்ட 3750 ரூபாய். அவர்கள் உரைப்பு அதிகம் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.எனவே எனக்காக சில்லி சாஸ் வாங்கிக் கொண்டார்.

நான் தங்கியிருக்கும் சிற்றூரிலிருந்து 6 கி.மீ தொலைவிலிருக்கும் கிராமத்தில்தான் விழா. நண்பிதான் அந்த ஊரில் வசதியானவர் என்பதால், கிட்டத்தட்ட 100 பேர் வரை அழைத்திருந்தார். நான்கு மணிக்கு விழா தொடங்கியது. முதலில் ஒரு பாதிரியார் ஜெபம் செய்து விழாவைத் தொடங்கி வைத்தார்.பின் விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒவ்வொருவராக எழுந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பையனின் அம்மா தன்னையும், பையனையும் அறிமுகப் படுத்தினார். அம்மா பெயர் Faith, மகன் பெயர் Innocent. அப்பா பெயரைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ள வில்லை.

 
பையன் சிசேரியன் மூலமாகப் பிறந்தவன் என்பதைப் பையனின் தாத்தா நினைவு கூர்ந்தார். பின்னர் இசை ஆரம்பமாகியது. சிறுவர்கள் எழுந்து ஆடத் தொடங்கினர். நன்றாக ஆடும் சிறுவர்களை ஊக்குவிக்க சிலர் அவர்கள் பையில் பணம் சொருகினர். இது அரை மணி நேரம் நடந்தது.

பின் அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்ச்சி. ஒரு சிறு டேபிளில் ஒரு தட்டு வைத்து, பக்கத்தில் பையன் அமர்ந்திருக்க, ஒவ்வொருவராகச் சென்று அன்பளிப்புகளை வழங்கினர். அன்பளிப்புகளை வாங்கி வராதவர்கள் அந்தத் தட்டில் பணத்தை வைத்துச் சென்றனர். பின்னர் கேக் வெட்டினான் பொடியன். நம்மூர் குலவைச் சத்தம் போலவே சத்தம் எழுப்பினர் கிராமப் பெண்மணிகள்.

விருந்து தொடங்குவதற்கு முன்னர் மறுபடியும் பாதிரியார், மீண்டும் ஜெபம். பின்னர் விருந்து தொடங்கியது. Buffet. நம்மூர் போண்டா மாதிரி ஒரு Item , ஆப்பிரிக்க சப்பாத்தி (முழு சப்பாத்திக்கல் சைசில், அரை இஞ்ச் தடிமனில் ஏதேனும் பரிமாறப் பட்டால் அது ஆப்பிரிக்க சப்பாத்தி என்று அறிந்து கொள்க), நம்மூர் பிரியாணி கலரில், மாட்டிறைச்சி கலந்த சோறு, மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழிக்குழம்பு (உரைப்பே இல்லாமல், மசாலா எதுவும் கலக்காமல்) பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் சோடா(குளிர்பானங்களை இங்கே இப்படித்தான் அழைக்கிறார்கள்) வைக்கப் பட்டிருந்தன. பெரியவர்கள் வரிசையாகச் சென்று எடுத்து கொண்டனர். பெரிய தட்டுகளில் நிறைய வைக்கப் பட்டு ஐந்தாறு சிறுவர்களுக்கு மொத்தமாக வைக்கப்பட்டது.

 
 

கிட்டத்தட்ட ஆறு மணியளவில் விழா இனிதே முடிவடைந்தது. விழா ஆரம்பித்ததிலிருந்து, முடியும் வரை பையன் என்னை ஒரு மாதிரியாகவே பார்த்துக் கொண்டிருந்தான். நான் கிட்டத்தட்ட அவர்கள் கலரில் இருந்தாலும், முடி இருப்பதால் பையனுக்கு நான் வினோதமான ஜந்துவாகத் தெரிந்திருக்கிறேன். கடைசியில் பையனின் அம்மா நான் ஒரு Muzungu என்று அறிமுகப் படுத்திய பின்தான் சந்தேசமாக ஒட்டிக்கொண்டான். Muzungu என்றால் யாரென்று கேட்கவில்லையே..Muzungu என்றால் வெள்ளைக்காரன் என்று அர்த்தம். Posted by Picasa

21. முடிவைத் தொடங்கி வைக்கிறேன்...

வியாழன், மார்ச் 16, 2006

நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு, நாலு சங்கிலில சேர்த்து விட்டிருக்குற நம்ம இதயக்கனி, பாசத்த்லைவர், அன்பு அண்ணன் மணியன் அவர்களுக்கு, கம்பாலா பாம்போ ரோட்டின் நடுவில் சிலை வைக்க போராட்டம் நடத்த ஏற்பாடு செய்தாகி விட்டது. :-)

இனி நம்ம நாலுகள்...

1. பிடித்த நாலு உணவு வகைகள்:
சொல்ல நினைப்பது:
1. கம்மஞ் சோறும், கருவாட்டுக் குழம்பும்
2. பழைய சோறும், சின்ன வெங்காயமும்
3. புரோட்டாவும், காரமான சால்னாவும்
4. அம்மா கைவண்ணத்தில் மல்லிகைப்பூ இட்லியும், தொட்டுக்கப் பொடியும்

சொல்வது:
1. பீட்சா
2. பர்கர்
3. நக்கெட்ஸ்
4. சிக்கன் சிப்ஸ் (என்னன்னே தெரியல, இதெல்லாம் சாப்பிடலேன்னா தூக்கமே வர மாட்டேங்குது)

2. போயிருக்கும் நாலு வெளி நாடுகள் (அட்ரா சக்கை..அட்ரா சக்கை)
சொல்ல நினைப்பது:
1. மலேசியா
2. சிங்கப்பூர்
3. உகாண்டா
4. கென்யா (அடங்குடா...அடங்குடா...)

சொல்வது(எதிரேயிருப்பவர் நான் எது சொன்னாலும் நம்புபவராக இருந்தால்...)
1. சுவிஸ்
2. கனடா
3. யு.கே
4. கியூபா

3. பிடித்த நாலு நடிகைகள் (யாருப்பா அது, நடிகர்களைப் பத்தி கேக்குறது... அவங்கல்லாம் யாருன்னே தெரியாது எனக்கு...)
சொல்ல நினைப்பது:
1. ஜோதிலட்சுமி
2. ஜெயமாலினி
3. சிலுக்கு சுமிதா
4. டிஸ்கோ சாந்தி (இந்த மாதிரி குல விளக்குகள்லாம் இப்ப பிரபலம் ஆகிறதில்லையே ஏன்???)

சொல்வது:
கொஞ்சம் விவரமான ஆளாக இருந்தால்:
1. சாவித்திரி
2. ரேவதி
3. லட்சுமி
4. ராதிகா

கொஞ்சம் அப்பாவியா தெரிஞ்சார்னா..
1. ஜூலியா ராபர்ட்ஸ்
2. ஆஷ்லி ஜூட்
3. காமரூன் டையாஸ்
4. ரென்னி ரஸ்ஸோ

4. பிடித்த நாலு விளம்பரங்கள்
1. ஹட்ச் சின்னப் பையனும் நாய்க்குட்டியும்
2. சாப்பிட்டுக்கிட்டு இருக்குறவங்க மேல தண்ணி ஊத்தர மாதிரி வரும் கண்ணாடி விளம்பரம்
3. உட்வர்ட்ஸ் கிரைப் வாட்டர்
4. அக்சய்குமார் வந்த தம்ஸ் அப் விளம்பரம்

அனேகமாக எல்லோருமே ஆடி முடித்து விட்ட ஒரு விளையாட்டாகத் தோன்றுவதால் இவ்விளையாட்டின் முடிவைத் தொடங்கி வைக்க விரும்புகிறேன். நன்றி.

20. பிங்க் நிற மனிதர்கள்...

வெள்ளி, மார்ச் 10, 2006

இங்கே வந்த புதிதில், இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது சற்று சிரமமான காரியமாக இருந்தது. காரணம் நூற்றுக்கு 90 சதவீதம் ஆண்கள் தலையை சுத்தமாக மழித்திருப்பதுதான். பெண்களும் நிறைய பேர் மொட்டைத்தலையுடன்தான் இருக்கிறார்கள். இயற்கையாக இவர்கள் முடி மிகவும் சுருட்டையாகவும், மெலிதான் பஞ்சு போல் இருப்பதாலும், படிவதில்லை. முடி நிறைய வளர்ந்தால் கிட்டத்தட்ட சாய்பாபா style ல் வளர்கிறது.சிறு வயதிலிருந்தே இப்படி தலையை மழித்து மழித்து, லேசாக முடி வளர்ந்தாலே இவர்களுக்கு அரிக்க ஆரம்பித்துவிடும். உடனே வீட்டில் அவர்களாகவே மொட்டையடித்துக் கொள்கிறார்கள்.

பெண்கள், பள்ளியில் படிக்கும் போது முடி வைத்துக் கொள்ளக்கூடாது என பல பள்ளிகள் கட்டுப்பாடு வைத்துள்ளன. ஒரு இஞ்ச் வரை அனுமதிக்கிறார்கள். இவர்கள் முடியே வெட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அது தோள்பட்டைக்கு கீழே வளர மாட்டேனென்கிறது. அதுவும் அருக்காணி Style ல் தூக்கிக்கொண்டு இருக்கிறது. இப்படி அடங்காமுடியாகவும், கொஞ்சமாகவும் வளர்வதால், முடியை அலங்காரம் செய்ய நிறைய பணமும், நேரமும் செலவிடுகிறார்கள். நாடு நெடுக முடியலங்கார நிலையங்கள் இருக்கின்றன, எப்போதும் கூட்டத்துடன்.


 
 
 
 

முடியை ஒருவிதமான Lotion தடவினால்தான் கொஞ்சமாவது படிகிறது. அதன் பின் கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவழித்து, மெலிதான சிறு சிறு சடைகளாகத் திரித்து அலங்கரித்துக் கொள்கிறார்கள். இதில் உபரி வசதி ஒன்றும் இருக்கிறது, தலை முழுக வேண்டாம். சென்ட் கொஞ்சம் சேர்த்து அடித்துக் கொண்டால் போதும்.

ஆப்பிரிக்காவில் முழுக்க முழுக்க கருப்பர்கள்தான் இருப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் இங்கே நிறைய கலப்பின மக்களும் இருக்கிறார்கள். முக்கியமாக, அரேபிய-ஆப்பிரிக்க கலப்பு. இவர்களை சவுதாரா எனக் குறிப்பிடுகிறார்கள்.இந்திய ஆப்பிரிக்க கலப்பும் இருக்கிறது. சவுதாராக்கள், வெள்ளையாக சற்றே செம்பட்டையான, லேசான சுருட்டைத்தலையுடன் இருக்கிறார்கள்.இவர்கள் போக பக்கத்து, கென்ய, சோமாலிய நாட்டினரும் இருக்கிறார்கள். சோமாலியர்கள் கிட்டத்தட்ட இந்தியர்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள். இவர்களைத் தவிர, சில ஆப்பிரிக்கர்கள் பிளீச் செய்து, கருப்புமல்லாது வெள்ளையுமல்லாது, ஒரு விதமான பிங்க் நிறத்தில் வினோதமாக் காட்சியளிக்கிறார்கள்.

உகாண்டாவின் பாரம்பரிய உடையை வயதானவர்கள் மட்டுமே உடுத்துகிறார்கள். அதுவும் கிராமங்களில் இருப்பவர்கள் மட்டுமே. மற்றபடிக்கு எல்லோருமே மேற்கத்திய உடைகள்தான். மாற்றங்களை எளிதில் ஏற்றுக் கொள்கிறார்கள். மொழியும் அப்படித்தான்.எளிதில் வசப்படுபவர்கள் போலிருக்கிறது.

நம்மையும்தான் வெள்ளைக்காரன் 200 வருடங்கள் ஆட்சி செய்தான். இருந்தாலும் நம்மவர்களால் ஏன் ஒழுங்காக எல்லோராலும் பிழையின்றி ஆங்கிலம் பேச முடிவதில்லை?? என்னுடன் பணிபுரிந்த நண்பர் ஆந்திர நண்பர் ஒருவர், கடையில் வேலை பார்ப்பவர்களை அடுத்த நாள் காலையில் சற்று நேரம் முன்னதாக வர வேண்டும் என சொல்ல விரும்பினார். அதற்கு அவர் சொன்னது...

"Yesterday everybody should come on 8 o' clock. Nobody should told funny funny reasons".

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இவர் சொன்னதைப் புரிந்து கொள்ளவே 10 நிமிடங்கள் தேவைப்பட்டன.இவர், இதற்குப் பேசாமல் சைகை பாஷையிலேயே சொல்லியிருந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டேன்.

அடுத்த பதிவில்...

நாலு நாளா, நாலப் பத்தி யோசிக்க வச்சிட்டாரு நம்ம மணியன்... Posted by Picasa

19. ஏர்லைன்சுகளுக்கு மொய் எழுதியவர்கள்...

ஞாயிறு, பிப்ரவரி 26, 2006

வன்முறை பயத்தில், தேர்தல் சமயத்தில் இங்கிருக்க வேண்டாமென்று, நிறைய இந்தியர்கள் இங்கிருந்து இந்தியாவிற்கோ, அல்லது பக்கத்திலிருக்கும் கென்யாவிற்கோ குடும்பத்தை அனுப்பி விட்டனர். இவர்கள் கொடுத்த பில்ட் அப்பில் நான் கூட தேர்தல் சமயத்தில் வன்முறை ஏதேனும் நிகழக்கூடும் என்ற பயத்தில் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை ஸ்டாக் செய்து வைத்திருந்தேன். எந்த அசம்பாவிதமும் இல்லாமல், அமைதியாக தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. எதிர்பார்த்தது போலவே, தற்போதய ஜனாதிபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருக்கிறார். எதிர்பார்த்தது போலவே, எதிர்கட்சித் தலைவர், தேர்தல் முறைகேடுகளைப் பற்றி குற்றம் சாட்டியிருக்கிறார். எப்படியானாலும், முசே வெற்றி பெறுவார் என்ற ஆப்பிரிக்கர்களின் வதந்தி உண்மையாகியிருக்கிறது. வன்முறை நடந்து, ஊரே இரத்தக்காடாகப் போகிறது என்ற வதந்தியைப் பரப்பி விட்டு, குடும்பத்தோடு வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள், தேவையில்லாமல் ஏர்லைன்ஸ் காரர்களுக்கு மொய் எழுதி விட்டார்களோ எனத் தோன்றுகிறது.

National Resistance Movement (NRM) கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டது. அதே செடி கொடி உடை தரித்த மக்கள், அதே மத்தளச் சத்தம், அதே ஆட்டம்... திங்கட்கிழமை இந்த கொண்டாட்ட மூடிலிருந்து விடுபட்டு, தண்ணீர், மின்சாரம், அன்றைய இரவு பியர் போன்ற அத்யாவசிய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படத் தொடங்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. வன்முறை அது இதுவென்று கடந்த பல மாதங்களாக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த தேர்தல் சப்பென்று முடிந்து விட்டற் போன்று தோன்றினாலும், வன்முறை ஏதுமின்றி நடந்து முடிந்திருப்பது, நிம்மதியளிக்கிறது.

அடுத்த பதிவில்...
நமக்கெல்லாம் தாடி வைத்தால், அரிக்குமல்லவா.. அதே போல் இவர்களுக்குத் தலையில் முடி வைத்தால் அரிக்கும்... மற்றும் இந்த ஊர் பெண்களின் வினோத தலையலங்காரப் பழக்கங்கள் பற்றி...

18. தேர்தல் கால வதந்திகள்...

வெள்ளி, பிப்ரவரி 24, 2006

நேற்று தேர்தல். தேர்தலுக்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னரே, கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டு விடும் என்று, ஒரு மாதத்திற்கு முன்னால் கூறப்பட்டது. அது ஒரு வாரமாகச் சுருங்கி, பின் மூன்று நாட்களாகி, கடைசியில், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை எல்லாக் கடைகளும் திறந்தே இருந்தன. வழக்கத்திற்கு மாறாக, நாடே அமைதியாக இருக்கிறது. நேற்று இரவு முதலே, வதந்திகள் உலா வரத் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சி (The Forum for Democratic Change - NRM)ஐ சேர்ந்த Col. Besigye நகர்புறங்களில் முன்னணியில் இருக்கிறார். நிறைய குஜராத்திகள் பயத்தில் இருக்கிறார்கள். இருக்காதா பின்னே, நூற்றுக்கு எழுபதிற்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் ஆயிற்றே..கடந்த சனியன்று, குடியேற்ற அதிகாரிகள், திடீர் சோதனையிட்டதில் ஏகப்பட்ட குஜராத்திகளும், மூன்று தமிழர்களும் மாட்டினர் (சனிக்கிழமை என்பதால் நிறைய பேர் தப்பித்து விட்டனர்)எதிர்க்கட்சி ஜெயித்தால் நிறைய பிரச்சினைகள் வரும் என இவர்கள் நினைக்கிறார்கள். எனக்கென்னவோ, யார் ஜெயித்தாலும், இதுபோல் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு தொல்லைதான் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள், சொந்த ஊருக்குச் செல்லாமல், எதிர்காலத்திலும் எப்போது செல்வோம் என்பதே தெரியாமல், வாழ்ந்து வரும் இவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் உள்ளது.

சரி, விசயத்திற்கு வருவோம், என் House Girl போனமுறையும் இப்படித்தான் இருந்தது என்கிறாள். கிராமப்புறங்களில் ஓட்டு எண்ணிக்கையைத் தொடங்கும் போது, முசே (இவர்கள் மொழியில் முசே என்றால் பெரியவர் என்று அர்த்தம்) President. Yoweri Kaguta Museveni முன்னணிக்கு வந்து விடுவார் என்கிறாள். ஜெயிக்கிறாரோ இல்லையோ, அவர்தான் அடுத்த ஜனாதிபதியாக அறிவிக்கப் படுவார் என்று ஒரு வதந்தியும் நிலவுகிறது. இதுவரை ஒரு வன்முறையும் நடந்ததாக தகவல்கள் இல்லை.(காலை 5 மணிக்கு கேட்ட துப்பாக்கிச் சத்தத்தைத் தவிர Mbale அமைதியாகத்தான் காட்சியளிக்கிறது)

கடையை இரண்டு நாட்கள் மூடிவிடுமாறு மேலிட உத்தரவு கிடைத்துள்ளது.(நேற்றும், இன்றும்). யார் செய்த புண்ணியமோ, இன்னும் மின்சாரத்தடை ஏற்படவில்லை. வீட்டில் 24 மணி நேரமும் அடைந்து கிடப்பது அலுப்பூட்டுகிறது. தமிழ் டி.வி யும் கிடையாது. குஜாராத்திகளின் பஜனையை எவ்வளவு நேரம்தான் பார்ப்பது?

வதந்திகள் எந்த அளவுக்கு நம்பகமானவை என்பது நாளை மாலை தெரிந்து விடும். நாளை எழுதுகிறேன் (மின்சார பகவான் கருணை காட்டினால்...)

17. என் பதிவைக் காணோமுங்க...

திங்கள், பிப்ரவரி 20, 2006

நீளமான பேர் வச்சதனாலயோ என்னவோ தெரியல, பதிவ காணவே காணோம். அதுக்குதான் இது.

பிடிக்காத விசயங்களைப் பற்றி எழுவதற்கு எளிதாக இருந்தது.. நல்ல விசயங்களைப் பற்றி எழுத வெகு நேரம் யோசிக்க வேண்டியிருக்கிறது.. என் தவறுதான், ஒப்புக் கொள்கிறேன்...

இங்கு வரும் வரை வணக்கம் சொல்லுதல் என்பதே ஒரு மாதிரியான, தர்ம சங்கடமான காரியமாக இருந்தது. மற்றவர் பதிலுக்கு வணக்கம் சொல்லாமலோ அல்லது கவனிக்காமலோ போய் விட்டால் அசிங்கமாகப் போய் விடுமே என்ற அச்சம்தான் காரணம். என் கல்லூரி நண்பன் (உட்டாலக்கடி சாமியாரின் மீது சத்தியமாக நான் இல்லை, என் நண்பந்தான்...)ஆசிரியர் யாரையேனும் ஒரு கி.மீ சுற்றளவில் எங்கு பார்த்தாலும், தன் உயரத்தில் முக்கால் உயரம் மட்டுமே தெரியுமளவுக்கு ஒரு கூண் போட்டு, கையை விசுக்கென்று நெஞ்சு வரை கொண்டு வந்து, குமர்னிங் சர் (Good morning Sir எனப் பொருள் கொள்க..அது காலை, மதியம், சாயங்காலம், இரவு என எந்த வேளையாக இருந்தாலும் Standard குமர்னிங் சர் தான்)என்று வெளியே சத்தமே கேட்காத மாதிரி ஒரு வணக்கம் சொல்வான்.இதை அந்த ஆசிரியர் பார்த்து விட்டு பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டால் தீர்ந்தது மேட்டர்.. ஒரு வேளை அவர் கவனிக்காமல் போய் விட்டால் பிடித்தது வினை. அடுத்து அவர் கவனிக்கும் வரை தொடர்ச்சியாக இந்த வணக்கத்தைப் போட்டுக் கொண்டே இருப்பான். எத்தனை முறையானாலும் விடமாட்டான் அந்த விடாக்கொண்டன்.. இவன் இந்த வினோதமான வணக்கத்தைப் போட்டுக் கொண்டே நடந்து வருவதை, தூரத்திலிருந்து பார்க்கும் போது மிகவும் காமெடியாக இருக்கும்.

இங்கே உகாண்டாவில் இவர்களிடம் இருக்கும் சில நல்ல பழக்கங்களுள் ஒன்று, மனதார வாழ்த்துதல் அல்லது வணக்கம் சொல்லுதல். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 முறையாவது Hai, How are you? அல்லது Hai How is you? என்று சொல்லவும், கேட்கவும் வேண்டியிருக்கிறது. தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர், உற்றார், உறவினர், நண்பர், எதிரி என யாரைப் பார்த்தாலும் அதே HHAY or HHIY தான்.பிச்சைக்காரர்கள் கூட குசலம் விசாரித்து விட்டுதான் யாசிக்கிறார்கள். சில சமங்களில் இது கொஞ்சம் ஓவராகவும் போய் விடும். கடையில் வேலை செய்யும் ஆப்பிரிக்கர்களில் சிலர், வாடிக்கையாளர்களிடம் ஃபோனில் பேசும் போது, அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலன், ஊர் எப்படி இருக்கிறது, வியாபாரம் எப்படி இருக்கிறது, மழை பெய்ததா போன்ற அதி முக்கியமான கேள்விகளை எல்லாம் கேட்டு விட்டு, பின் எதற்காக ஃபோன் சொய்தோம் என்பதையே மறந்து விட்டு, அப்புறமாக கூப்பிடுகிறேன் என்று சொல்லி வைத்து விடுவார்கள். இதை நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விசயம், தண்ணீர் கலக்காத பால் மற்றும், செயற்கை உரங்கள் உதவியில்லாமல் விளைந்த காய் கறிகள். வீட்டிற்கு வந்து போட பால்காரர்களெல்லாம் கிடையாது.(ஆச்சர்யமான விசயம், ஒரு சில வீடுகளுக்கு ஒரு வெள்ளைக்காரர் பால் ஊற்றுகிறார்). Platform களில் வாளி நிறைய பாலோடு உட்கார்ந்திருப்பார்கள். ஒரு கப் என்பது அரை லிட்டர். ஒரு லிட்டர் பால் கிட்டத்தட்ட 16 ரூபாய்.காய்கறி விலை அதிகமாக இருந்தாலும், இயற்கையாக விளைந்ததால் சுவையும் சத்தும் அதிகம்.

இன்னொரு குறிப்பிட்டே ஆக வேண்டிய விசயம், பியர் விலை பாட்டில் தண்ணீரின் விலையை விட கொஞ்சம்தான் அதிகம். ஒரு லிட்டர் தண்ணீர் 1000 ஷில்லிங்ஸ். 500 ml பியர் 800 ஷில்லிங்ஸ். ஹி...ஹி..இதுவும் நல்ல விசயந்தானுங்களே...

இவ்வளவு பெரிய தலைப்பைப் போட்டது ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கைக்காகத்தான். கின்னஸ்லே இடம் பிடிக்கிற ஆசையெல்லாம் கிடையாதுங்க ;-)

16. மழைக் கால உகாண்டா...

வியாழன், பிப்ரவரி 16, 2006

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இரவில் வெக்கை தணிந்து இதமான குளிர் தெரிகிறது. மின்விசிறிகள் தேவைப்படாத இரவுகள் காத்திருப்பது போல் தோன்றுகிறது. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலையில், இது போன்ற கால நிலை, இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சராசரியாக 36 டிகிரி வெப்பநிலையில் வாழ்ந்து பழகியிருக்கும் எனக்கே இங்கே புழுங்குகிறது என்றால், சராசரியாக 22 முதல் 26 டிகிரியில் வாழ்ந்து பழகியிருக்கும் இம் மக்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. இதில் மலேரியா வேறு.. கொசுக்களுக்கு பயந்து, போர்த்திக் கொள்ளவும் முடியாமலிருந்தது. நல்லவேளை, மழை உதவிக்கு வந்து விட்டது.

மழை என்றால் நம்மூர் போல், பெரியதாக இடி மின்னலுடன், பட படவென்று பெய்து விட்டு, ஒரு மணி நேரத்திலோ, இரண்டு மணி நேரத்திலோ அடங்கி விடக்கூடியதல்ல இந்த ஊர் மழை. பொதுவாக இடி மின்னல் இல்லாமல், நனையத் தூண்டுகிற மிதமான வேகத்தில் தொடர்சியாகப் பெய்து கொண்டிருக்கும், அதுவும், சொல்லி வைத்தாற்போல் தினமும்...சினேகிதமான இந்த மழையில் நனைந்து கொண்டே, காலையில் வாக்கிங் போவது உண்மையிலேயே ஒரு சுகானுபவம். (தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பாதுகாப்பு காரணமாக, இப்போதெல்லாம் போக முடியவில்லை... இந்தியர்கள் எல்லோருமே பணக்காரர்கள் என்று இவர்கள் நினைப்பதால், தாக்குதலுக்கோ அல்லது கடத்தலுக்கோ உள்ளாக நேரிடலாம்)

இந்த இதமான தட்ப வெப்பநிலை தவிர, இந்தியாவில் எனக்குப் பிடிக்காத விசயங்களக இருந்த, வீட்டை சுத்தம் செய்தல், துணி துவைத்தல், ஷூ பாலீஸ் போடுதல் இவை போக, சமைத்தல், மார்க்கெட்டுக்கு போகுதல் என சகல வேலைகளையும் செய்ய House Girl அல்லது House Boy கிடைப்பது உகாண்டாவில் எனக்கு ரொம்பப் பிடித்த விசயம்.(Servant என்று விளித்தால் இவர்களுக்கு கோபம் வந்துவிடும்... இதைப் போலவே Black என்று அழைத்தால் கூட கோபப்படாத இவர்கள் நீக்ரோ என்று அழைத்தால் மிகவும் கோபப் படுவார்களாம்). எங்கள் House Girl 5 வருடங்களாக தென்னிந்தியர்களிடம் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், இட்லி, தோசை முதல் சமோசா, மிக்சர், சேவு வரைக்கும் செய்யத் தெரியும். 90,000 உகாண்டா ஷில்லிங்ஸ் சம்பளம் (கிட்டத்தட்ட 2250 ரூபாய்). Aids ஆல் பாதிக்கப் பட்டிருக்கும் (இதெல்லாம் இங்கே சகஜம்) இவளை நம்பிப் பெரிய குடும்பமே இருப்பது வேதனையான விசயம்.

பயணக் கட்டுரை மாதிரி எழுதி போரடிச்சுட்டேன்னு நினைக்குறேன்... கொஞ்சம் Gap விட்டுக்கிறேன்...

வர்ட்டா,
இராம்ஸ்

15. நைல் நதி நாடு..

திங்கள், பிப்ரவரி 13, 2006

அதிகாலை 3.30 க்கு பலத்த துப்பாக்கி சத்தம் காரணமாக முழிப்பு வந்து விட்டது. உகாண்டவில் இது ஒன்றும் புதிதல்ல. முதன்முதலில் இங்கே வந்த போது, அலுவலகத்தில் கொடுத்த முதல் அறிவுரையே, பாதுகாப்பு பற்றியதுதான்.. தனியே எங்கும் செல்ல வேண்டாம், துப்பாக்கிச் சண்டை நடந்தால் உடனடியாக தரையில் குப்பறடிக்க படுத்துக் கொள்ளுங்கள் (ஏன் மல்லாக்க படுக்கக்கூடாது என்று அவர்கள் விளக்க வில்லை), தனியாகவோ, அல்லது சிறு குழுவாகவோ செல்லும் போது, யாரேனும் தாக்கினால் (பணத்திற்காக மட்டுமே இது போன்ற தாக்குதல்கள் நடைபெறும்) அடுத்த அடி விழுவதற்கு முன் புத்திசாலித்தனமாக, கையிலிருக்கும் பணம், நகை, மொபைல் போன் ஆகியவற்றை தாரை வார்த்து விடுதல் நல்லது, எங்கே சென்றாலும் கொஞ்சம் பணம் எடுத்துச் செல்லுங்கள் (இல்லையென்றால் பணம் கிடைக்காத சோகத்தில் அல்லது கோபத்தில், நீங்கள் கொலை செய்யப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், குறைந்த பட்சம் ஊமைக்காயங்களுடன் அடி உத்தரவாதம்)

இங்கே வந்தது முதலே, களவு பற்றி அதிகமாக கேள்விப்படுகிறேன். விதம் விதமாக திருடுகிறார்கள்.வங்கிக் கொள்ளை அல்லது பல மில்லியன் பெருமானமுள்ள கண்டெய்னர் கடத்தல், யாரையேனும் கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுதல் போன்ற பெரிய லெவல் திருட்டுகள் போக, காரில் போகும் போது வழி மறிப்பு, இரவில் வீடு புகுந்து கொள்ளையடித்தல் போன்ற நடுத்தர வகை திருட்டுகள், தனியே செல்லும் போது தாக்குதல், வேலை செய்யுமிடத்தில் திருடுதல் போன்ற சின்ன லெவல் திருட்டுகள் (பெரும்பாலும் இவர்கள்தான் மாட்டுவார்கள்) என எந்த வகை திருட்டையும் விட்டு வைக்காத கடின உழைப்பாளிகள் இங்கே அதிகம்.

காலையில்தான் தெரிந்தது, அதிகாலை துப்பாக்கிச் சத்தத்திற்கான காரணம்.. உகாண்டா டெலிகாம் லிமிட்டெட் அலுவலகத்தைக் கொள்ளையடித்து, நிறைய ஃபோன்களைத் திருடியிருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், அந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் காவல் நிலையம் இருக்கிறது..

இப்படியெல்லாம் விதம் விதமாகத் திருடி, உருப்படியாக ஏதேனும் செய்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. நாடு முழுக்க பார்களில் கூட்டம் அலை மோதுகிறது, பல மனைவி அல்லது பல கணவர்களுடன் இருப்பது சகஜமான ஒன்றாக இருக்கிறது.. (இரண்டு நாட்களுக்கு முன்னால், கடையில் வேலை செய்பவர்களில் ஒருவன், இறுதி ஊர்வலத்திற்கு செல்ல வேண்டும் என விடுப்பு கேட்டான். யார் மரித்தது என்றேன். அம்மாவின் கணவர் என பதில் வந்தது). இவர்களின் பாலியல் கலாச்சாரத்தைப் பற்றித் தனிப் பதிவே போடலாம்.

மாலையில்,தேர்தல் பிரச்சார ஊர்வலத்தில், இவர்கள் கையில் செருப்பும், துடைப்பமுமாக ஆடிக்கொண்டு சென்றதைப் பார்க்கும் போது (இன்னும் சிலர் செடி கொடிகளை உடை முழுக்க செருகியிருந்தார்கள்) உகாண்டா காலச் சக்கரத்தில் பின்னோக்கிப் பயணிப்பது போல் தோன்றுகிறது.

இன்று இரவாவது, துப்பாக்கிச் சத்தமில்லாமல் நிம்மதியாகத் தூங்கலாம் என்றால் இன்று இரவு முழுக்க மின்சாரம் இருக்காது என்ற நல்ல செய்தி இப்போதுதான் கிடைத்தது. நரகத்தில் சந்தோசமாக வாழ்வது எப்படி என்ற புத்தகத்திற்கு ஆர்டர் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்..(உகாண்டாவில் நல்ல விசயங்களே கிடையாதா என்பவர்களுக்காக அடுத்த பதிவில் சில நல்ல விசயங்களோடு வருகிறேன்)

14. நதியா.. நதியா.. நைல் நதியா..??

செவ்வாய், பிப்ரவரி 07, 2006

உலகின் மிக நீளமான நதி, எகிப்த்தின் கொடை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் நைல் நதியின் பிறப்பிடம் (வெள்ளை நைல்) சாட்சாத், தற்சமயம் அடியேன் குடி கொண்டிருக்கும் இந்தப் புண்ணிய பூமிதான். முதன் முதலாக நைலைப் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பு, முதன்முதலாக காவிரியைப் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பிற்கு சற்றும் குறையாதது.

கென்யா, தான்சானியா மற்றும் உகாண்டா எனப் பரந்து விரிந்திருக்கும், விக்டோரியா ஏரிதான் நைலின் மூலம். புசியா-விலிருந்து பார்க்கும் போது, மிகவும் அமைதியாக காணப்படும், இந்த ஏரிதான் நைலின் ஊற்று என்று நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், (கைக்கெட்டும் தூரத்தில் கென்யாவைப் பார்க்கலாம்) என்ட்டபி பக்கத்திலும், முன்யோன்யோவிலும் இருப்பது இதே விக்டோரியா ஏரிதான் என்று அறியும் போது இவ்வளவு பெரியதா என்று வியப்பேற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

இங்கே வந்த புதிதில், அருகிலிருக்கும், Mount Elgon க்கு சென்ற போது, மலை அவ்வளவாகப் பிரமிப்பேற்படுத்தவில்லை. நம் ஊட்டி, கொடைக்கானல் அளவு கூடக் கிடையாது. குளிரும் அவ்வளவாக இல்லை. மாறாக, பிரமிப்பு ஏற்படுத்தியது, அங்கிருந்த அருவிகள்தான். Sipi Falls மட்டுமே இருக்குமென நம்பிச் சென்ற நான், அங்கு பார்த்தது, கிட்டத்தட்ட 20 அருவிகள். தொடர் மழை காரணமாக ஏற்பட்டிருந்த அந்த அருவிகளை, அந்தப் பசுமையான பின்னனியில் பார்த்த போது, சொர்க்கம் என்பது, அருகில்தான் எங்கோ இருப்பது போன்ற உணர்வேற்பட்டது.

உண்மையிலேயே தண்ணியில்லாக் காடான கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்த நான் இப்படியாக நாடு முழுவதும் இவ்வளவு தண்ணீரைப் பார்த்தவுடன் அடைந்த மகிழ்சிக்கு அளவே கிடையாது. சரி,அதுக்கு இப்போ என்ன வந்துச்சி என்கிறீர்களா..?

காரணம் இருக்கிறது... நேற்றைய செய்தித் தாளில் வந்திருக்கும் செய்தி... தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததால், திங்கள் முதல் (சரியாகக் கவனிக்கவும் திங்கள் மட்டுமல்ல, திங்கள் முதல்), உகாண்டா முழுவதும், காலை ஆறு மணி முதல், மாலை ஆறு மணி வரைக்கும் மின்சாரம் துண்டிக்கப் படும். எத்தனை நாளுக்கு இது தொடரும் என்பதைப் பற்றிச் சரியான தகவல் இல்லை...

உலகின் மிக நீளமான நதி.... உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஏரி... மழைக்காலத்தில் இருபது அருவிகள் உற்பத்தியாகும் எல்கான் மலை... எல்லாவற்றையும் மீறி லேசாக நரக வாடை அடிப்பது போல் தோன்றுகிறது...

13. போடா...போடா...

செவ்வாய், ஜனவரி 31, 2006


உகாண்டவைப் பற்றிச் சொல்லும் போது, அவர்களின் தனித்துவமான போக்குவரத்து சாதனத்தைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியாது. நம்மூரில் ஆட்டோக்கள் மாதிரி இவை இங்கே பயன்படுத்தப்படுகின்றன. பெயர்: போடா போடா, பெயரைக் கேட்டால் திட்டுகிறானே என்று பார்க்காதீர்கள். பெயரே அதுதான். Boda..Boda...

உகாண்டாவில், அரசுக்கென்று சொந்தமாக பேரூந்துக் கழகமோ, விமானக் கம்பெனியோ கிடையாது...முன்னாடி இருந்ததாமாம். யார் கண் பட்டதோ தெரியவில்லை இப்போது இரயில் கூட மக்கள் போக்குவரத்துக்கு இல்லை.. பின்னே இவர்கள் எப்படித்தான் பயணிக்கிறார்கள் என்கிறீர்களா..? சில தனியார் பஸ்கள் ஓடுகின்றன.மற்றபடிக்கு நம்மூர் மினி வேன் சர்வீஸ்தான். கஷ்டம் என்னவென்றால், நேரத்திற்கு எடுக்க மாட்டார்கள்..வேன் எப்போது நிரம்புகிறதோ அப்போதுதான்.. உங்களுக்கு அன்றைய தினம் உட்டாலக்கடி சாமியாரின் அருளாசி இருந்தால் அரை மணி நேரத்திலோ, முக்கால் மணி நேரத்திலோ வேன் நிரம்பிவிடும்..அதுவும் 16 லிருந்து 20 பேர் வரை ஏற்றாமல் விட மாட்டார்கள். இல்லையென்றால் 2 மணி நேரம் ஆனாலும், வேன் அந்த ஊரையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும். என் ரெக்கார்டு 12 முறை.. அதாகப் பட்டது, போவது போல் கிளம்பி ஊர் எல்லை வரை சென்று, திரும்பி வந்து விடுவார்கள். கற்பனை செய்து பாருங்கள், 12 முறை...

ஆக 100 கி.மீ தூரம் செல்ல நான்கு மணி நேரம். மற்ற படிக்கு, வேன்கள் எல்லாமே ஏதோ ஒரு மத்திய கிழக்கு அல்லது தூரகிழக்கு நாட்டில், நன்றாக அடி பட்டு, வாழ்க்கையின் கடைசிக் காலத்தை உகாண்டாவில் கழித்துக் கொண்டிருக்கும்.. அந்த வேனில் மணிக்கு 130 கி.மீ வேகம் வரை செல்லும் இவர்களின் கடமையுணர்ச்சி சில சமயம் புல்லரிக்கச் செய்யும்.. சில இடங்களில் கார்கள் பயன்படுத்தப் படுகின்றன..டிரைவரையும் சேர்த்து 7 பேர்..

இவையெல்லாம் வெளியூர் பிரயாணத்திற்கு..உள்ளூரில்..?? அதற்குத்தான் போடா போடா.. நம்மூர் ஆட்டோவை விட சீப்..ஆனால் ஒரு நேரத்தில் ஒருத்தர்தான் பயணிக்க முடியும். மழை, வெயில் எல்லாம் பார்க்கக்கூடாது. குஷன் சீட்டெல்லாம் உண்டு..இவர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அனேகமாக மொத்த உகாண்டாவுமே ஸ்தம்பித்துவிடும்.. இத்தகைய பெருமை கொண்ட போடா போடா விற்கு, நம்மூரில் நாம் வைத்திருக்கும் பெயர்...

மிதி வண்டி...அதாவது தூய தமிழில், சைக்கிள்...

12. காவிரி, பூமத்தியரேகை மற்றும் நான்...

ஞாயிறு, ஜனவரி 29, 2006

உகாண்டாவில் வேலை என்றவுடனேயே, ஏகப்பட்ட எதிர்மறையான விமரிசனங்கள். வேற நாடே கிடைக்கலையாக்கும்...போயும் போயும் உகாண்டாதான் கிடைச்சதாக்கும்...இதுக்குப் பேசாமா, பாத்துக்கிட்டு இருக்குற ரெப் வேலையவே பாக்கலாமுல்ல...இப்படி இலவச அறிவுரைகள் கொடுப்பதில், நம்மவர்களை அடித்துக் கொள்ள வேறு யாராலும் முடியாது. இது போதாதென்று, இடி அமீன் (இடி அமீன் நாடு கடத்தப்பட்ட விசயமே தெரியாதவர்கள்..), ஆப்பிரிக்கா முழுக்க பாலைவனம்தான், வெயில் தாங்க முடியாது(கனவிலாவது ஆப்பிரிக்காவை பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்) போன்ற சந்தேக பயமுறுத்தல்கள்..பத்தாக்குறைக்கு மாமா, பூமத்திய ரேகை உகாண்டா வழியாத்தான் போகுது..அதனால வெயில் அதிகமாத்தான் இருக்கும்..இப்படி விஞ்ஞான ரீதியாக பயமுறுத்திய என் அக்கா பையன்...இதற்கிடையில் நண்பன் ஒருவன் ஃபோன் போட்டு, உகாண்டால ஃபிரீ செக்ஸாம்டா..பார்த்து அடக்க ஒடுக்கமா இருந்துக்கோ..எயிட்ஸ்,கியிட்ஸ் வந்திடப் போகுது என்று பீதியைக் கிளப்பினான்

எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளித்து, மும்பை விமான நிலையம் வந்து, ஒரு மாதிரியான வித்தியாசமான தலையலங்காரமும், வினேதமான உடையலங்காரமுமாக இருந்த கறுப்பின மக்களைப் பார்த்த போதுதான், இனி இரண்டு வருடங்களுக்கு, இவர்களோடுதான் மாரடிக்க வேண்டும் என்ற உண்மை உரைத்தது.

இதில்,கம்பெனி ஏற்பாடு செய்திருந்த விமானம் அனேகமாக விமான கம்பெனிகள் வரிசையில், டவுன்பஸ் ரேஞ்சுக்கு இருக்கும் போலிருக்கிறது..கம்பெனியைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் முதலில் கொடுத்த டிக்கெட்டை, இன்னும் இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டுமென்று, மாற்றச் சொன்னதில், விமானக் கம்பெனியையும் மாற்றி விட்டார்கள்.விதி...இடம் ஒதுக்கிக் கொடுப்பதிலிருந்து, (இரவு பண்ணிரண்டு மணிக்கு ஜன்னலோர இருக்கைக்காக சண்டை போட்ட குஜராத்தி தம்பதியினர், காலை விடிவதற்கு முன்பே முடிந்துவிட்ட பயணத்தில், ஜன்னல் வழியாக எதைப் பார்த்தார்கள் என்பது, இன்று வரை விளங்கவில்லை எனக்கு), போர்த்திக் கொள்ள கம்பளி கேட்டத்ற்கு, தீர்ந்து போய் விட்டது எனச் சொன்ன விமானப் பணிப்பெண் வரை ஏகப்பட்ட சொத்ப்பல்கள்.. இரவிலேயே ஆடிஸ் அபாபா, நைரோபி எல்லாம் நின்று காலை 6 மணிக்கு என்டபி வந்து சேர்ந்தாயிற்று..

பூமத்திய ரேகை இந்த வழியாகத்தான் போகிறது என்று ஓரிடத்தில் சொன்னார் நண்பர். ஏதாவது சிலீர்ப்பு ஏற்படுகிறதா எனப் பார்த்தேன்.(காவிரியை முதன்முதலில் பார்த்தபோது, நிஜமாகவே சிலீர்த்தது..) ஒரு புடலங்காயும் ஏற்படவில்லை...காவிரி நிஜம்..பூமத்திய ரேகை கற்பனை என்பதனால் இருக்குமென நினைத்துக் கொண்டேன்.

திடீரென நண்பன் சொன்னது, நினைவுக்கு வர, கார் ஓட்டிக் கொண்டிருந்த நண்பரிடம், உகாண்டால ஃபிரீ செக்ஸ்ஸுன்றாங்களே உண்மையா என்றேன். நண்பர் அவசரமாக, இல்லை, இல்லை.. இங்கேயும் காசு கொடுக்கனும் என்றார்.

நாளை பார்ப்போமா...

அன்புடன்,
இராம்

11. ஒரு பியர் பாட்டிலும் இரண்டு நண்பர்களும்...

வியாழன், ஜனவரி 19, 2006

அலுவல் நிமித்தமாக கம்பாலா சென்று விட்டதால், சில நாட்களாக, உங்களைக் கொடுமைப் படுத்த முடியவில்லை. மக்கள் மிகுந்த சந்தோசத்திலிருப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத விசயமென்பதால்,விரைவாக வந்து விட்டேன். இதற்கிடையில் கல்லூரி நினைவுகள் பாகம் இரண்டு என்று சொத்தை தலைப்பைப் போட்டு எங்கள் கதையை யாரும் படிக்காத மாதிரி செய்து விட்டாயே, என சம்பந்தப் பட்ட இரண்டு நண்பர்களும் ஃபோனில் திட்டியதால், தலைப்பை, பரபரப்பாக மாற்றி விட்டேன். இதற்கு மேலும் இதை யாரும் படிக்காமல் போனாலோ, அல்லது படித்து விட்டு படிக்காத மாதிரி பாவ்லா காட்டி விட்டுப் போனாலோ, அவர்கள் கனவில் போய் கண்ணைக் குத்துமாறு கழுகு மலை உட்டாலக்கடி சாமியாரிடம் வேண்டுகோள் வைப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு..


இந்தியாவின் ஐம்பதாவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது எடுத்தது..இந்தப் படத்திற்கும், இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும், இதில் வரும் இருவர் இந்தப் படத்தில் உள்ளனர். எந்த இருவர் என கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு..

கல்லூரியில் சேர்ந்தாயிற்று...அதுவரையில் விடுதியில் தங்கிப் படித்த பழக்கம் இல்லாத நண்பர்கள் சிலர் வெளியில் அறை எடுத்து தங்கினார். அதில் இரு நண்பர்கள் ஊருக்குள் அறை கிடைக்காமல், ஊருக்குப் புற நகரில் இருந்த சிறு கிராமத்தில் தங்கியிருந்தனர். நண்பர்கள் இருவருக்குமே (கலக்கல் காம்பினேசன் அது..!)புதிய விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அறைக்கு வந்த ஒரு வாரத்திலேயே, பியர் அடித்தால் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஆனால் கொடுமைக்கென்று, அந்த கிராமத்தில் ஒரு ஒயின் ஷாப் கூட கிடையாது..ஊருக்குள் சென்று வாங்க பயம். எல்லா வாத்தியார்களும் அங்கேதான் குடியிருக்கிறார்கள்..வாத்தியார்கள் பரவாயில்லை, நிறைய சீனியர்கள் வேறு இருக்கிறார்கள்..ராகிங் போர்வையில் காசையெல்லாம் தின்றே அழித்து விடுவார்கள்.

அதனால், பக்கத்திலிருக்கும் மற்றொரு சிற்றூரில் போய் வாங்குவது என்று முடிவு செய்தார்கள். அங்கே இரு பிரச்சினைகள்..ஒன்று, இருவருக்குமே அந்த ஊருக்குச் செல்வது அதுதான் முதல் முறை...இரண்டாவது, அந்த ஊரில் இன்னொரு நண்பன் இருந்தான். அவன் அப்பாவிற்கு, நண்பர்கள் இருவரையுமே தெரியும், அதைவிட முக்கியமாக, அவர்களின் அப்பாக்களையும் தெரியும்.. இருந்தலும் பியர் ஆசை பயத்தை வென்று விட்டது. பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுத்தாகி விட்டது. பஸ் போனது..போனது..அரைமணி நேரம் கழித்து, அந்த ஊரும் வந்து விட்டது..ஆனால் பேரூந்து நிறுத்தத்தில் நிறைய கூட்டம் இருந்தது. அதில் நண்பனுடைய அப்பாவும் இருக்கலாம் என்ற பயத்தில் அடுத்த நிறுத்தத்தில் இறங்கலாம் என முடிவு செய்தனர்.

மீண்டும் பஸ் கிளம்பி, ஐந்து நிமிடங்கள் நிற்காமல் சென்ற போதுதான் தெரிந்தது, அந்த உலக மகா பட்டினத்திற்கு ஒரே ஒரு நிறுத்தம்தான்..வேறு வழியில்லை..பஸ் எது வரை போகிறதோ அங்கே போய் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். ஊர் உலகமெல்லாம் சுற்றி அடுத்த அரை மணியில் பஸ் போய் சேர்ந்த ஊரில், சொல்லி வைத்தாற்போல மூன்றே மூன்று வீடுகள் மட்டுமே.. பெட்டிக் கடையே இல்லாத ஊரில் ஒயின் ஷாப்பிற்கு வழி கேட்டால், கட்டி வைத்து அடிக்கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய இருந்ததால், பஸ்ஸை விட்டே வெளியே வர வில்லை இருவரும்.

ஒருவழியாக அதே பஸ்ஸிலேயே திரும்பவும் ஏறி, நண்பனின் ஊரில் பியரை (ஒண்ணே ஒண்ணு..கண்ணே கண்ணு..) வாங்கி அறைக்கு வந்து விட்டார்கள். பியர் வாங்கியதை விடப் பெரிய கூத்து, அதை ஒரே ஒரு மூடி குடித்து விட்டு, நண்பர்களிலொருவன் ஆடிய ஆட்டம்தான். அவனை அன்று அடக்குவதற்குள் மற்றவனுக்குத் தாவு தீர்ந்து விட்டது. அந்த நண்பன் இன்று வரை, இரண்டே காரணங்களுக்காகத்தான் வாந்தி எடுப்பான். வெறும் வயிற்றில் சரக்கடித்தால், அல்லது சாப்பிட்டு விட்டு சரக்கடித்தால்.மொத்தத்தில் சரக்கடித்தாலே...

இந்த அனுபவமும் என்னுடையதுதான் என்று பின்னூட்டம் போட்டு, வீட்டில் டின் கட்ட வைத்து விடாதீர்கள் :=))

அன்புடன்,
இராம்

10. கல்லூரி நினைவுகள்..

புதன், ஜனவரி 18, 2006

ஒரு தமிழ் பிளாக் ஆரம்பித்துவிட்டு, கல்லூரி நினைவுகளைப் பற்றி ஆட்டோகிராப் டைப்பில் ஒரு பதிவு போடவில்லையென்றால், கழுகுமலை உட்டாலக்கடி சாமியார் கனவில் வந்து கண்ணைக் குத்தி விடுவார் என நண்பன் ஒருவன் மிரட்டியதால் இந்தப் பதிவைப் போடவில்லை. கல்லூரியில் பழைய மாணவர்களெல்லாம் ஒன்றுகூடப் போகிறோம் என நண்பன் போட்ட கடிதம் பழைய நினைவுகளையெல்லாம் கிளறிவிட்டதாலேயே இந்தப் பதிவு. திட்ட வேண்டுமென்றால், காசியில் பனாரஸ் இந்து யுனிவர்சிடியில் லெக்சரராக இருக்கும் அவனைத் திட்டுங்கள்..

கல்லூரிகளில் கலாட்டாக்களும், காதல்களுமே நடக்கின்றன என தமிழ் சினிமாக்கள், தமிழர்களின் தலையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்தாலும், என் கல்லூரி வாழ்க்கையில் அந்த அளவுக்கு கலாட்டாக்கள் நடந்ததாக நினைவில்லை..ஒரு சிலவற்றைத் தவிர..

முதல் வருடம் ஆண்டு இறுதித் தேர்வு என்று நினைவு..கெமிஸ்ட்ரி லேப்..தேர்வு கண்காணிப்பாளர் பக்கத்து ஊரிலிருக்கும் கல்லூரியிலிருந்து வந்திருந்தார்.. நண்பன் ஒருவன் படிப்பில் கொஞ்சம் சுமார்..(என்னைப் போலவே). அமைதியாக டைட்ரேசன் பண்ணிக் கொண்டிருந்தான். அதில் உபயோகிக்கப் படும் டைல் கொஞ்சம் தூசியாக இருந்திருக்கும் போல..(நிறமாற்றத்தை தெளிவாக காண வெள்ளை நிற டைல் உபயோகப் படுத்துவார்கள்). கண்காணிப்பாளர் தூசியை கவனித்திருப்பார் போல... நண்பனின் அருகில் வந்தார். என்ன இது என்றார். பொட்டாசியம் பெர் மாங்கனேட் என்றான் நண்பன் சின்சியராக. அதக் கேக்கல..கீழ இருக்கே அது என்னது என்றார். டைல் என்கிற வார்த்தை மறந்து போயிருந்தபடியால் மார்பிள் என்றான் நண்பன். அதிலேயே அவருக்குக் கொஞ்சம் மண்டை காய்ந்து போய் விட்டது. அதோடு விட்டிருக்கலாம்..ஆனால் அவர், இருக்கட்டும்.. அத எதுக்கு உபயோகப் படுத்துறாங்க தெரியுமா என்றார். அதற்கு நண்பன் சொன்ன பதிலில் ஆடிப் போன அவர், கொஞ்ச நாட்களுக்கு, சேது விக்ரம் மாதிரி சுற்றிக் கொண்டிருந்தார் எனக் கேள்விப் பட்டேன். நிறமாற்றத்தை அறியப் பயன்படும் டைலுக்கு, நண்பனின் விளக்கம்....ஹைட்டு பத்தல சார், அதான் வச்சிருக்கேன்.

9. கடவுள்

செவ்வாய், ஜனவரி 17, 2006

எனக்கு நிறைய நாட்களாகவே ஒரு விசயம் புரியவில்லை. ஏன் எல்லா கடவுள்களுமே, அல்லது இறை தூதர்களுமே ஒரே ஒரு கண்டத்திலேயே (ஆசியா)அவதரித்துள்ளனர்?? யேசு, முகமது நபிகள், புத்தர், மகாவீரர் மற்றும் நமது மக்கள்தொகைக்கு இணையான எண்ணிக்கையிலிருக்கும் இந்து கடவுள்கள் எல்லோருமே ஆசியாவிலேயே அவதரிக்க என்ன காரணம் இருந்திருக்கக் கூடும்?? ஒருவேளை கடவுள்கள் எல்லோருமே ஆசியர்களின் கற்பனைத் திறனுக்கும், மார்க்கெட்டிங் திறமைக்குமான எடுத்துக் காட்டுகளா?? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

அன்புடன்,
இராம்

8. எது ஏழை நாடு..?

திங்கள், ஜனவரி 16, 2006

ஏழை நாடு என்பதற்கான உண்மையான அளவுகோல் எது? நம் ஊரில் ஏழைகள் எங்கே குடியிருப்பார்கள்? பணக்காரர்களை விட, வசதி பட்டுமல்ல, வாடகையும் குறைவாக இருக்கும் இடத்தில் இருப்பார்கள். விலை குறைவாக இருக்கும் பொருட்களை வாங்குவார்கள். ஆடம்பரப் பொருட்களை அவ்வளவாக உபயோகிக்க மாட்டார்கள்.ஏழைகள் அதிகம் இருக்கும் நாட்டைத்தானே ஏழை நாடு என்று அழைக்க வேண்டும்?? ஏன் உகண்டாவை ஏழை நாடு என்று அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. காரணம், விலைவாசி நம் நாட்டை விட அதிகமாகவே இருக்கிறது. நம் நாட்டில் 1500 ரூபாய் கொடுத்தோமென்றால், இங்கே அதே வேலைக்கு 3500லிருந்து 4000 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கிறது. சாதாரண வேலையிலிருப்பவர்கள் கூட மொபைல் வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் ஒரு லோக்கல் காலிற்கு 7.50 ரூபாய் வரை ஆகிறது. இருந்தாலும் வைத்திருக்கிறார்கள். நிறைய மனைவிகளும், நிறைய குழந்தைகளும் வைத்துப் பராமரிக்கிறார்கள்.ஆனாலும் நம்மை விட ஏழை நாடாகவே குறிப்பிடப் படுகிறார்கள். ஏன்???

அன்புடன்,
இராம்

7. தேர்தல் கூத்துகள்...

தேர்தல் தேதி அறிவித்த நாளில் இருந்தே, ஒரு விதமான இறுக்கமான சூழ்நிலையை உணர முடிகிறது. இருபது வருடங்களாக ஆட்சியிலிருக்கிறார் தற்போதய ஜனாதிபதி. அதிருப்தி, எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். இங்கே மருத்துவராக இருக்கும், ஆப்பிரிக்க நண்பர் ஒருவர், ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் என்பது உங்கள் நாட்டைப் போல் அவ்வளவு எளிதான காரியமல்ல என்றார். இம்முறை எதிர்க்கட்சியை சேர்ந்தவருக்குக்கும் நிறைய கூட்டம் சேர்கிறதே என்றேன். ஒவ்வொரு முறையும் அப்படித்தான் என்கிறார். நிறைய தேர்தல்களைப் பார்த்தவர் என்பதால் நம்பத்தான் வேண்டியிருக்கிறது.

தேர்தல் கூத்துகளை இந்தியாவிலும் பார்த்திருக்கிறேன். ஆனாலும் இவர்கள் அடிக்கிறது, கொஞ்சம் ஓவர் போல்தான் தெரிகிறது. தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் போதே, இவர்களின் பிரச்சார வேகம், நம் நாட்டின் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன் நடக்கும் பிரச்சாரத்துடன் ஒப்பிடக்கூடியதாக இருக்கிறது. ஆறு வருடங்களுக்கு ஒருமுறை என்பதால் ஆச்சரியப்படத் தேவையில்லை என்கிறார் நண்பர்.

தேர்தல் நேர வன்முறைகளைப் பற்றி, புதிதாக வந்தவர்கள் கவலைப் பட்டாலும், நிறைய வருடங்களாக இங்கேயே இருப்பவர்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். யார் வந்தாலும் எதுவும் மாறப் போவதில்லை என்கிறார்கள் சிலர். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்கிறேன் நான்.

அன்புடன்,
இராம்.

6. ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறோ..?

சனி, ஜனவரி 14, 2006

அய்யா, நம்ம நியோ கவுண்ட்டர் யார் யாரோ அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலிலேருந்தெல்லாம் படிக்கிறாங்கன்னு காட்டுதய்யா..நிஜமாகவே யாரும் பார்க்குறீங்களா, இல்ல ஏதாவது பிரம்மையா..இல்ல ஏதாவது தொழில்நுட்பக் கோளாறா..? அய்யா, யாராவது பின்னூடத்துல போடுங்கையா..தனியா இருக்க பயமா இருக்குய்யா..

ஏன்னே தெரியல..நம்மள எந்த திரட்டியும் ஏத்துக்க மாட்டேங்குறாங்கைய்யா. ..டெக்னிக்கலா ஏதோ கேக்குறாங்கன்னு தெரியுது, ஆனா என்ன கேக்குறாங்கன்னுதான் தெரியல..சரி விடுங்க..என் கொடுமைலேருந்து நிறைய பேரை காப்பத்தலாம்னு முடிவு பண்ணியிருப்பாங்க போலிருக்கு..

5. ட்ராய்...

வெள்ளி, ஜனவரி 13, 2006


கேபிள் டிவியில் லகான் படம் போட்டார்கள். பார்த்து நிறைய நாட்கள் ஆகியிருந்தாலும் படம் நன்றாகவே இருந்தது.(இங்கிலீஸ் சப் டைட்டில் உபயம்). நேற்று ட்ராய் ஆங்கிலத்தில் (ஆங்கிலப் படத்தை வேறு எதில் போடுவார்கள்!!) போட்டார்கள். ஏற்கெனவே பார்த்த படம்தான். நான் பார்த்த படங்களிலேயே மிகச் சிறந்த படமாக இதனைக் குறிப்பிடலாம். போரைத் தவிர்க்க நடக்கும், ஒண்டிக்கு ஒண்டி சண்டையில் ஓடி வந்து, எதிரியின் தோள் பட்டையில் , வாளை செருகும் அக்கிலீஸ் (பிராட் பிட், கன கச்சிதமான தேர்வு) ஏற்படுத்தும் அந்த பிரமாண்டம், படத்தின் இறுதிக் காட்சி வரை ச்ற்றும் குறையாது படமாக்கியிருக்கிறார்கள். இறந்த மகனின் சடலத்திற்காக, அக்கிலீஸிடம் கையேந்தும் டிராய் மன்னன், திரும்பி வர மாட்டான் எனத் தெரிந்தே மகனை போருக்கு அனுப்பும் அக்கிலீஸின் தாய், விதி மீறல் என்று தெரிந்தே, தம்பியை காப்பாற்றத் துணியும் இளவரசன் (எரிக் பானா, பிராட் பிட்டிற்கு சரியான சவால்) என ஒவ்வொரு படைப்புமே அற்புதம். கவிதை போன்ற வசனங்கள், கண்ணை உறுத்தாத ஒளிப் பதிவு, காதை உறுத்தாத இசை, தேர்ந்த நடிக, நடிகையர் என எல்லா விதத்திலும் கலக்கியிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்.

அன்புடன்,
இராம்.

4. ஒரு ஜோக்..

செவ்வாய், ஜனவரி 10, 2006

அது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிங்க. காலங்காத்தால லேபுக்கு முன்னாடி நீளமான கியூங்க..வழக்கம் போல நம்ம லேப் அட்டண்டர் லேட்டா வந்தாருங்க. மொத ஆள கூப்பிட்டாரு, பேப்பர வாங்கிப் படிச்சாரு..பிளட் டெஸ்ட்..கைய நீட்ட சொன்னாரு, ஒரு பட்டைய கட்டினாரு..பளார், பளார்னு ரெண்டு அடி அடிச்சாரு..(நரம்ப கண்டு பிடிக்கிறாராமாம்..) ஊசியக் குத்தி இரத்தத்தை எடுத்தாரு..இதப் பார்த்துக்கிட்டு இருந்த நம்ம ரெண்டாவது ஆளு, ஒரு நிமிசம் யோசிச்சான், அப்புறமா அங்கேருந்து தல தெறிக்க ஓடிட்டான்..ஏன் தெரியுமா..?

நம்மாளு வந்தது யூரின் டெஸ்ட்டுக்குங்க..

3. பொழுது எப்படி போகுதுன்னா...

திங்கள், ஜனவரி 09, 2006

நான் ஒரு சினிமா பைத்தியங்க..(முழுசாவே பைத்தியந்தானே அப்படீங்றீங்களா??) வாரத்துக்கு நாலு படம் பாக்கலேன்னா எனக்கு தூக்கமே வராதுங்க. சேலத்தில வேல பாத்தப்பவுஞ் சரி, கோயமுத்தூர்ல வேல பாத்தப்பவுஞ் சரிங்க இதுதான் நமக்கு முக்கியமான வேலங்க.. என்னடா இவன் பாட்டுக்கு என்னமோ பேசிக்கிட்டு இருக்கனேன்னு பார்க்குறீங்களா? அதுக்குதான் வாரேன். அப்படி சினிமா, சினிமான்னு இருந்தவனை கொண்டு வந்து, நாடு முழுக்கவே ரெண்டே ரெண்டு தியேட்டர் இருக்கற ஊர்ல விட்டா என்ன ஆகும்? உண்மைதாங்க.. கிட்டத் தட்ட தமிழநாடு சைஸ் இருக்கிற இந்த நாட்டுல மொத்தமே ரெண்டு தியேட்டர்தான். அதுவும் நாட்டோட தலைநகர் கம்பாலாலதாங்க இருக்கு. கம்பாலா இருக்கிறது 265 கி.மீ தள்ளிங்க. நம்ம ஊர் மாதிரி நேரத்துக்கு பஸ்லாம் கிடையாதுங்க.. உண்மைய சொன்னா ரோடே முழு நீளத்துக்கும் கிடையாதுங்க.. இந்த லட்சணத்துல அங்க எங்க போய் படம் பாக்குறது? சரி நமக்கு வாய்ச்சது டி.வி தான்னு,அத பாக்கலமுன்னா அங்க வருதுங்க நமக்கு இந்தி பிரச்சினை. கருமம் பிடிச்ச எல்லா இந்தி சேனலும் வருது ஆனா நம்ம தூர்தர்சன் கூட தமிழ்ல வர மாட்டேங்குதுங்க..அட பொழுதன்னைக்கும் பஜனைய காட்டிக்கிட்டு ஒரு குஜராத்தி சேனல் கூட இருக்குங்க..ஆனா உருப்படியா செய்தி பாக்க கூட ஒரு தமிழ் சேனல் இல்லீங்க.. கடைய விட்டா வீடு, வீட்ட விட்டா கடைனு பொழுது போகுதுங்க..அட இத விட்டா, டிஸ்கொதெக்குதான் போகனும்.. என்னடா தியேட்டரே இல்லேன்னு சொன்னானேன்னு பாக்குறீங்களா? தியேட்டர்தான் கிடையாது.. ஆனா பார்,டிஸ்கோ எல்லாம் உண்டு.இந்த ஊர் மிஞ்சி போனா நம்ம திருசெங்கோடு அளவு கூட வராதுங்க.(இந்த லட்சனத்துல இதுதான் மூணாவது பெரிய ஊர்னு இந்த ஊர்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் பெருமை) ஆனா ஏகப்பட்ட பார் இருக்குதுங்க. ஒரு டிஸ்கோ கூட இருக்குங்க..இங்க எல்லா ஊர்லேயும் மனுசங்க இருக்காங்களோ இல்லையோ, பாரும் டிஸ்கோவும் இருக்குங்க..பாருக்குள்ளெ நல்ல நாடுங்க இது..அட எல்லா பார்லயும் பொண்ணுங்கதான் வேல பாக்குறாங்க...அது எப்படி உனக்கு தெரியுங்கிறீகளா.. ஒரு ஜெனரல் நாலெஜுக்காக போய் தெரிஞ்சுகிட்டதுதாங்க

சரிங்க.. நாளைக்கு பேசலாம்

வர்ட்டா
இராம்

2. தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாராட்டு

ஞாயிறு, ஜனவரி 08, 2006

அன்புள்ள தமிழ் கூறும் நல்லுலகமே,

எனது பெயர் ராம்குமார். நான் கிழக்கு ஆப்பிரிக்காவில், உகாண்டாவில் வாழ்ந்து வருகிறேன். கண்டிப்பாக ஆப்பிரிக்கா நிறைய புது அனுபவங்களை தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலைதளம். இது தவிர, ஆங்கிலமும், தமிழும் மட்டுமே தெரிந்த, முக்கியமாக இந்தி தெரியாத ஒரு தமிழனாக நான் அனுபவித்த, அனுபவித்து கொண்டிருக்கும் சில பல இன்னல்கலையும் புலம்பி தீர்ப்பதாக உத்தேசம்.

குஜராத்திளும், மளையாளிகளும், சுந்தர தெலுங்கர்களும் கோலேச்சிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் இவற்றில் எந்த மொழியுமே தெரியாத, மணமாகாத (அட..தனியா இருக்கேன்னு சொல்ல வர்ரேங்க!) ஒரு இளைஞனாக கஷ்டப் பட்டலும், பக்கத்திலிருக்கும் ருவான்டா போன்ற நாடுகளிலிருக்கும் நண்பர்களை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வேன். காரணம் ஆங்கிலம். உகாண்டாவும் நம் நாட்டை போலவே காலனி நாடுதான். ஆச்சரியமான விஷயம், அவர்களது ஆங்கிலம். உச்சரிப்பில் வித்தியசங்கள் நிறைய இருந்தாலும், தெளிவாக, பிழையில்லாது பேசுகிறார்கள் (பெரும்பான்மை மக்கள்). ஆங்கிலமே பிரதான மொழி. ருவான்டாவில் பிரஞ்சு.

பல நேரங்களில், நமது அரசியல்வாதிகளை நினைத்து வருத்தப் பட்டாலும், இது போன்ற சில சமையங்களில், நல்லதோ கெட்டதோ, நமக்கே நமக்கென்று, சில அடையாளங்களை (மதராசிக்கு இந்தி வராது...) கொடுத்தமைக்காக பாராட்டலாம், பல நேரங்களில் இன்னல் பட்டலும்...

கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்.

அன்புடன்,
இராம்

1. வந்துட்டான்யா...வந்துட்டான்யா...

அன்புள்ள தமிழ் பெருங்குடி மக்களே...

வந்து விட்டான் உங்கள் நண்பன் இராம்,

எப்படியோ கஷ்டப்பட்டு தமிழ்-ல டைப் செஞ்சாலும், உங்கள கொடுமை படுத்துறதுன்னு முடிவு பண்ணிட்டேன். டைப் பண்ணுறதுக்கு கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவயில்லைனு தமிழ் தொண்டு புரிய வந்திருக்கிற என்ன நீங்க வரவேற்று வாழ்த்துவீங்கன்னு தெரியும்.

வாழ்க வளமுடன்,
இராம்