India

Uganda

United Kingdom

Malaysia

11. ஒரு பியர் பாட்டிலும் இரண்டு நண்பர்களும்...

வியாழன், ஜனவரி 19, 2006

அலுவல் நிமித்தமாக கம்பாலா சென்று விட்டதால், சில நாட்களாக, உங்களைக் கொடுமைப் படுத்த முடியவில்லை. மக்கள் மிகுந்த சந்தோசத்திலிருப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத விசயமென்பதால்,விரைவாக வந்து விட்டேன். இதற்கிடையில் கல்லூரி நினைவுகள் பாகம் இரண்டு என்று சொத்தை தலைப்பைப் போட்டு எங்கள் கதையை யாரும் படிக்காத மாதிரி செய்து விட்டாயே, என சம்பந்தப் பட்ட இரண்டு நண்பர்களும் ஃபோனில் திட்டியதால், தலைப்பை, பரபரப்பாக மாற்றி விட்டேன். இதற்கு மேலும் இதை யாரும் படிக்காமல் போனாலோ, அல்லது படித்து விட்டு படிக்காத மாதிரி பாவ்லா காட்டி விட்டுப் போனாலோ, அவர்கள் கனவில் போய் கண்ணைக் குத்துமாறு கழுகு மலை உட்டாலக்கடி சாமியாரிடம் வேண்டுகோள் வைப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு..


இந்தியாவின் ஐம்பதாவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது எடுத்தது..இந்தப் படத்திற்கும், இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றாலும், இதில் வரும் இருவர் இந்தப் படத்தில் உள்ளனர். எந்த இருவர் என கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு..

கல்லூரியில் சேர்ந்தாயிற்று...அதுவரையில் விடுதியில் தங்கிப் படித்த பழக்கம் இல்லாத நண்பர்கள் சிலர் வெளியில் அறை எடுத்து தங்கினார். அதில் இரு நண்பர்கள் ஊருக்குள் அறை கிடைக்காமல், ஊருக்குப் புற நகரில் இருந்த சிறு கிராமத்தில் தங்கியிருந்தனர். நண்பர்கள் இருவருக்குமே (கலக்கல் காம்பினேசன் அது..!)புதிய விசயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அறைக்கு வந்த ஒரு வாரத்திலேயே, பியர் அடித்தால் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாகி விட்டது. ஆனால் கொடுமைக்கென்று, அந்த கிராமத்தில் ஒரு ஒயின் ஷாப் கூட கிடையாது..ஊருக்குள் சென்று வாங்க பயம். எல்லா வாத்தியார்களும் அங்கேதான் குடியிருக்கிறார்கள்..வாத்தியார்கள் பரவாயில்லை, நிறைய சீனியர்கள் வேறு இருக்கிறார்கள்..ராகிங் போர்வையில் காசையெல்லாம் தின்றே அழித்து விடுவார்கள்.

அதனால், பக்கத்திலிருக்கும் மற்றொரு சிற்றூரில் போய் வாங்குவது என்று முடிவு செய்தார்கள். அங்கே இரு பிரச்சினைகள்..ஒன்று, இருவருக்குமே அந்த ஊருக்குச் செல்வது அதுதான் முதல் முறை...இரண்டாவது, அந்த ஊரில் இன்னொரு நண்பன் இருந்தான். அவன் அப்பாவிற்கு, நண்பர்கள் இருவரையுமே தெரியும், அதைவிட முக்கியமாக, அவர்களின் அப்பாக்களையும் தெரியும்.. இருந்தலும் பியர் ஆசை பயத்தை வென்று விட்டது. பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுத்தாகி விட்டது. பஸ் போனது..போனது..அரைமணி நேரம் கழித்து, அந்த ஊரும் வந்து விட்டது..ஆனால் பேரூந்து நிறுத்தத்தில் நிறைய கூட்டம் இருந்தது. அதில் நண்பனுடைய அப்பாவும் இருக்கலாம் என்ற பயத்தில் அடுத்த நிறுத்தத்தில் இறங்கலாம் என முடிவு செய்தனர்.

மீண்டும் பஸ் கிளம்பி, ஐந்து நிமிடங்கள் நிற்காமல் சென்ற போதுதான் தெரிந்தது, அந்த உலக மகா பட்டினத்திற்கு ஒரே ஒரு நிறுத்தம்தான்..வேறு வழியில்லை..பஸ் எது வரை போகிறதோ அங்கே போய் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். ஊர் உலகமெல்லாம் சுற்றி அடுத்த அரை மணியில் பஸ் போய் சேர்ந்த ஊரில், சொல்லி வைத்தாற்போல மூன்றே மூன்று வீடுகள் மட்டுமே.. பெட்டிக் கடையே இல்லாத ஊரில் ஒயின் ஷாப்பிற்கு வழி கேட்டால், கட்டி வைத்து அடிக்கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய இருந்ததால், பஸ்ஸை விட்டே வெளியே வர வில்லை இருவரும்.

ஒருவழியாக அதே பஸ்ஸிலேயே திரும்பவும் ஏறி, நண்பனின் ஊரில் பியரை (ஒண்ணே ஒண்ணு..கண்ணே கண்ணு..) வாங்கி அறைக்கு வந்து விட்டார்கள். பியர் வாங்கியதை விடப் பெரிய கூத்து, அதை ஒரே ஒரு மூடி குடித்து விட்டு, நண்பர்களிலொருவன் ஆடிய ஆட்டம்தான். அவனை அன்று அடக்குவதற்குள் மற்றவனுக்குத் தாவு தீர்ந்து விட்டது. அந்த நண்பன் இன்று வரை, இரண்டே காரணங்களுக்காகத்தான் வாந்தி எடுப்பான். வெறும் வயிற்றில் சரக்கடித்தால், அல்லது சாப்பிட்டு விட்டு சரக்கடித்தால்.மொத்தத்தில் சரக்கடித்தாலே...

இந்த அனுபவமும் என்னுடையதுதான் என்று பின்னூட்டம் போட்டு, வீட்டில் டின் கட்ட வைத்து விடாதீர்கள் :=))

அன்புடன்,
இராம்

9 கருத்துகள்:

Karthik Jayanth சொன்னது…

oh boy 1 guy is definitely u (checked shirt and jeans )and other person is let me guess .. may be either 2guys standing left 2 u or a guy standing right to u .

just kidding :-)

8:38 AM
-L-L-D-a-s-u சொன்னது…

Gone through all of your postings.. Interesting .

Interested to read more about your experiences in Uganda ..

10:13 AM
Costal Demon சொன்னது…

நன்றி தாஸூ சார்..

7:34 AM
rv சொன்னது…

அட உகாண்டாவா,
எப்படிங்க இருக்கு அங்கே? (தப்பா நினச்சுக்காதீங்க.. எல்லாம் ஹோட்டல் ருவாண்டா பாத்ததன் பாதிப்பு!)

உகாண்டாவில இத்தன இந்தியர்களா? ஆச்சர்யமா இருக்கு!

ஒரு பியர் பாட்டிலுக்கு இத்தன அலம்பலா??? :))

8:06 AM
Costal Demon சொன்னது…

வாங்க இராமநாதன் சார், ரஷ்யால்லாம் எப்படி இருக்கு?? இடி அமீன் எழுபதுகளில் நம்மவர்களை துரத்தலேன்னா இன்னும் நிறைய பேர் இருந்திருப்பாங்க..அது பத்தி தனி பதிவு போடலாம்னு இருக்கேன்.

8:23 AM
rv சொன்னது…

நன்றி இராம்ஸ்,
நானும் இராம்ஸ் தான். உகாண்டாவப் பத்தி கேட்டத தப்பா எடுத்துகிட்டீங்களோ??? :((

ரஷ்யா மோசமில்ல. டாலர் இருக்கறவுகளுக்கு சொர்க்கபுரிதான்! :))

இடி அமீன் பத்தி கேள்விதான்! அதனாலதான் முதல் பின்னூட்டத்துல கேட்டேன். அவரப் பத்திக் கண்டிப்பா பதியுங்க.

நன்றி மற்றும் அன்புடன்,
இராமநாதன்

8:43 AM
Costal Demon சொன்னது…

தப்பால்லாம் நினைக்கல இராம்ஸ் சார்,

கண்டிப்பா அமீன் பத்தி எழுதறேன்.

வருகைக்கு நன்றி,
இராம்ஸ்

8:53 AM
பெயரில்லா சொன்னது…

;-))

10:45 AM
தருமி சொன்னது…

நம்ம நண்பர் ஒருவர், உங்க(நண்பர்) அளவு மோசமில்லை. ஏண்டா, தண்ணி, கிண்ணி அடிக்கிறீயான்னு கேட்டதுக்கு,
"ஆமா, இப்பகூட ரூம்ல ஒரு பாட்டில் பியர் இருக்கு. தினமும் ராத்திரி ஒரு ரவுண்டு 'மிக்ஸ் பண்ணி' அடிச்சா எப்படி தூக்கம் வருதுன்ற" :-)

6:07 PM