India

Uganda

United Kingdom

Malaysia

19. ஏர்லைன்சுகளுக்கு மொய் எழுதியவர்கள்...

ஞாயிறு, பிப்ரவரி 26, 2006

வன்முறை பயத்தில், தேர்தல் சமயத்தில் இங்கிருக்க வேண்டாமென்று, நிறைய இந்தியர்கள் இங்கிருந்து இந்தியாவிற்கோ, அல்லது பக்கத்திலிருக்கும் கென்யாவிற்கோ குடும்பத்தை அனுப்பி விட்டனர். இவர்கள் கொடுத்த பில்ட் அப்பில் நான் கூட தேர்தல் சமயத்தில் வன்முறை ஏதேனும் நிகழக்கூடும் என்ற பயத்தில் ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களை ஸ்டாக் செய்து வைத்திருந்தேன். எந்த அசம்பாவிதமும் இல்லாமல், அமைதியாக தேர்தல் முடிந்து, முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. எதிர்பார்த்தது போலவே, தற்போதய ஜனாதிபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டிருக்கிறார். எதிர்பார்த்தது போலவே, எதிர்கட்சித் தலைவர், தேர்தல் முறைகேடுகளைப் பற்றி குற்றம் சாட்டியிருக்கிறார். எப்படியானாலும், முசே வெற்றி பெறுவார் என்ற ஆப்பிரிக்கர்களின் வதந்தி உண்மையாகியிருக்கிறது. வன்முறை நடந்து, ஊரே இரத்தக்காடாகப் போகிறது என்ற வதந்தியைப் பரப்பி விட்டு, குடும்பத்தோடு வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள், தேவையில்லாமல் ஏர்லைன்ஸ் காரர்களுக்கு மொய் எழுதி விட்டார்களோ எனத் தோன்றுகிறது.

National Resistance Movement (NRM) கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டது. அதே செடி கொடி உடை தரித்த மக்கள், அதே மத்தளச் சத்தம், அதே ஆட்டம்... திங்கட்கிழமை இந்த கொண்டாட்ட மூடிலிருந்து விடுபட்டு, தண்ணீர், மின்சாரம், அன்றைய இரவு பியர் போன்ற அத்யாவசிய பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படத் தொடங்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. வன்முறை அது இதுவென்று கடந்த பல மாதங்களாக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த தேர்தல் சப்பென்று முடிந்து விட்டற் போன்று தோன்றினாலும், வன்முறை ஏதுமின்றி நடந்து முடிந்திருப்பது, நிம்மதியளிக்கிறது.

அடுத்த பதிவில்...
நமக்கெல்லாம் தாடி வைத்தால், அரிக்குமல்லவா.. அதே போல் இவர்களுக்குத் தலையில் முடி வைத்தால் அரிக்கும்... மற்றும் இந்த ஊர் பெண்களின் வினோத தலையலங்காரப் பழக்கங்கள் பற்றி...

18. தேர்தல் கால வதந்திகள்...

வெள்ளி, பிப்ரவரி 24, 2006

நேற்று தேர்தல். தேர்தலுக்கு ஒரு 15 நாட்களுக்கு முன்னரே, கடைகள் அனைத்தும் அடைக்கப் பட்டு விடும் என்று, ஒரு மாதத்திற்கு முன்னால் கூறப்பட்டது. அது ஒரு வாரமாகச் சுருங்கி, பின் மூன்று நாட்களாகி, கடைசியில், தேர்தலுக்கு முந்தைய நாள் வரை எல்லாக் கடைகளும் திறந்தே இருந்தன. வழக்கத்திற்கு மாறாக, நாடே அமைதியாக இருக்கிறது. நேற்று இரவு முதலே, வதந்திகள் உலா வரத் தொடங்கி விட்டன. எதிர்க்கட்சி (The Forum for Democratic Change - NRM)ஐ சேர்ந்த Col. Besigye நகர்புறங்களில் முன்னணியில் இருக்கிறார். நிறைய குஜராத்திகள் பயத்தில் இருக்கிறார்கள். இருக்காதா பின்னே, நூற்றுக்கு எழுபதிற்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்கள் ஆயிற்றே..கடந்த சனியன்று, குடியேற்ற அதிகாரிகள், திடீர் சோதனையிட்டதில் ஏகப்பட்ட குஜராத்திகளும், மூன்று தமிழர்களும் மாட்டினர் (சனிக்கிழமை என்பதால் நிறைய பேர் தப்பித்து விட்டனர்)எதிர்க்கட்சி ஜெயித்தால் நிறைய பிரச்சினைகள் வரும் என இவர்கள் நினைக்கிறார்கள். எனக்கென்னவோ, யார் ஜெயித்தாலும், இதுபோல் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு தொல்லைதான் என்று தோன்றுகிறது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள், சொந்த ஊருக்குச் செல்லாமல், எதிர்காலத்திலும் எப்போது செல்வோம் என்பதே தெரியாமல், வாழ்ந்து வரும் இவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் உள்ளது.

சரி, விசயத்திற்கு வருவோம், என் House Girl போனமுறையும் இப்படித்தான் இருந்தது என்கிறாள். கிராமப்புறங்களில் ஓட்டு எண்ணிக்கையைத் தொடங்கும் போது, முசே (இவர்கள் மொழியில் முசே என்றால் பெரியவர் என்று அர்த்தம்) President. Yoweri Kaguta Museveni முன்னணிக்கு வந்து விடுவார் என்கிறாள். ஜெயிக்கிறாரோ இல்லையோ, அவர்தான் அடுத்த ஜனாதிபதியாக அறிவிக்கப் படுவார் என்று ஒரு வதந்தியும் நிலவுகிறது. இதுவரை ஒரு வன்முறையும் நடந்ததாக தகவல்கள் இல்லை.(காலை 5 மணிக்கு கேட்ட துப்பாக்கிச் சத்தத்தைத் தவிர Mbale அமைதியாகத்தான் காட்சியளிக்கிறது)

கடையை இரண்டு நாட்கள் மூடிவிடுமாறு மேலிட உத்தரவு கிடைத்துள்ளது.(நேற்றும், இன்றும்). யார் செய்த புண்ணியமோ, இன்னும் மின்சாரத்தடை ஏற்படவில்லை. வீட்டில் 24 மணி நேரமும் அடைந்து கிடப்பது அலுப்பூட்டுகிறது. தமிழ் டி.வி யும் கிடையாது. குஜாராத்திகளின் பஜனையை எவ்வளவு நேரம்தான் பார்ப்பது?

வதந்திகள் எந்த அளவுக்கு நம்பகமானவை என்பது நாளை மாலை தெரிந்து விடும். நாளை எழுதுகிறேன் (மின்சார பகவான் கருணை காட்டினால்...)

17. என் பதிவைக் காணோமுங்க...

திங்கள், பிப்ரவரி 20, 2006

நீளமான பேர் வச்சதனாலயோ என்னவோ தெரியல, பதிவ காணவே காணோம். அதுக்குதான் இது.

பிடிக்காத விசயங்களைப் பற்றி எழுவதற்கு எளிதாக இருந்தது.. நல்ல விசயங்களைப் பற்றி எழுத வெகு நேரம் யோசிக்க வேண்டியிருக்கிறது.. என் தவறுதான், ஒப்புக் கொள்கிறேன்...

இங்கு வரும் வரை வணக்கம் சொல்லுதல் என்பதே ஒரு மாதிரியான, தர்ம சங்கடமான காரியமாக இருந்தது. மற்றவர் பதிலுக்கு வணக்கம் சொல்லாமலோ அல்லது கவனிக்காமலோ போய் விட்டால் அசிங்கமாகப் போய் விடுமே என்ற அச்சம்தான் காரணம். என் கல்லூரி நண்பன் (உட்டாலக்கடி சாமியாரின் மீது சத்தியமாக நான் இல்லை, என் நண்பந்தான்...)ஆசிரியர் யாரையேனும் ஒரு கி.மீ சுற்றளவில் எங்கு பார்த்தாலும், தன் உயரத்தில் முக்கால் உயரம் மட்டுமே தெரியுமளவுக்கு ஒரு கூண் போட்டு, கையை விசுக்கென்று நெஞ்சு வரை கொண்டு வந்து, குமர்னிங் சர் (Good morning Sir எனப் பொருள் கொள்க..அது காலை, மதியம், சாயங்காலம், இரவு என எந்த வேளையாக இருந்தாலும் Standard குமர்னிங் சர் தான்)என்று வெளியே சத்தமே கேட்காத மாதிரி ஒரு வணக்கம் சொல்வான்.இதை அந்த ஆசிரியர் பார்த்து விட்டு பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டால் தீர்ந்தது மேட்டர்.. ஒரு வேளை அவர் கவனிக்காமல் போய் விட்டால் பிடித்தது வினை. அடுத்து அவர் கவனிக்கும் வரை தொடர்ச்சியாக இந்த வணக்கத்தைப் போட்டுக் கொண்டே இருப்பான். எத்தனை முறையானாலும் விடமாட்டான் அந்த விடாக்கொண்டன்.. இவன் இந்த வினோதமான வணக்கத்தைப் போட்டுக் கொண்டே நடந்து வருவதை, தூரத்திலிருந்து பார்க்கும் போது மிகவும் காமெடியாக இருக்கும்.

இங்கே உகாண்டாவில் இவர்களிடம் இருக்கும் சில நல்ல பழக்கங்களுள் ஒன்று, மனதார வாழ்த்துதல் அல்லது வணக்கம் சொல்லுதல். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 முறையாவது Hai, How are you? அல்லது Hai How is you? என்று சொல்லவும், கேட்கவும் வேண்டியிருக்கிறது. தெரிந்தவர், தெரியாதவர், அறிந்தவர், அறியாதவர், உற்றார், உறவினர், நண்பர், எதிரி என யாரைப் பார்த்தாலும் அதே HHAY or HHIY தான்.பிச்சைக்காரர்கள் கூட குசலம் விசாரித்து விட்டுதான் யாசிக்கிறார்கள். சில சமங்களில் இது கொஞ்சம் ஓவராகவும் போய் விடும். கடையில் வேலை செய்யும் ஆப்பிரிக்கர்களில் சிலர், வாடிக்கையாளர்களிடம் ஃபோனில் பேசும் போது, அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலன், ஊர் எப்படி இருக்கிறது, வியாபாரம் எப்படி இருக்கிறது, மழை பெய்ததா போன்ற அதி முக்கியமான கேள்விகளை எல்லாம் கேட்டு விட்டு, பின் எதற்காக ஃபோன் சொய்தோம் என்பதையே மறந்து விட்டு, அப்புறமாக கூப்பிடுகிறேன் என்று சொல்லி வைத்து விடுவார்கள். இதை நிறைய முறை பார்த்திருக்கிறேன்.

அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விசயம், தண்ணீர் கலக்காத பால் மற்றும், செயற்கை உரங்கள் உதவியில்லாமல் விளைந்த காய் கறிகள். வீட்டிற்கு வந்து போட பால்காரர்களெல்லாம் கிடையாது.(ஆச்சர்யமான விசயம், ஒரு சில வீடுகளுக்கு ஒரு வெள்ளைக்காரர் பால் ஊற்றுகிறார்). Platform களில் வாளி நிறைய பாலோடு உட்கார்ந்திருப்பார்கள். ஒரு கப் என்பது அரை லிட்டர். ஒரு லிட்டர் பால் கிட்டத்தட்ட 16 ரூபாய்.காய்கறி விலை அதிகமாக இருந்தாலும், இயற்கையாக விளைந்ததால் சுவையும் சத்தும் அதிகம்.

இன்னொரு குறிப்பிட்டே ஆக வேண்டிய விசயம், பியர் விலை பாட்டில் தண்ணீரின் விலையை விட கொஞ்சம்தான் அதிகம். ஒரு லிட்டர் தண்ணீர் 1000 ஷில்லிங்ஸ். 500 ml பியர் 800 ஷில்லிங்ஸ். ஹி...ஹி..இதுவும் நல்ல விசயந்தானுங்களே...

இவ்வளவு பெரிய தலைப்பைப் போட்டது ஒரு கவன ஈர்ப்பு நடவடிக்கைக்காகத்தான். கின்னஸ்லே இடம் பிடிக்கிற ஆசையெல்லாம் கிடையாதுங்க ;-)

16. மழைக் கால உகாண்டா...

வியாழன், பிப்ரவரி 16, 2006

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இரவில் வெக்கை தணிந்து இதமான குளிர் தெரிகிறது. மின்விசிறிகள் தேவைப்படாத இரவுகள் காத்திருப்பது போல் தோன்றுகிறது. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலையில், இது போன்ற கால நிலை, இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சராசரியாக 36 டிகிரி வெப்பநிலையில் வாழ்ந்து பழகியிருக்கும் எனக்கே இங்கே புழுங்குகிறது என்றால், சராசரியாக 22 முதல் 26 டிகிரியில் வாழ்ந்து பழகியிருக்கும் இம் மக்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது. இதில் மலேரியா வேறு.. கொசுக்களுக்கு பயந்து, போர்த்திக் கொள்ளவும் முடியாமலிருந்தது. நல்லவேளை, மழை உதவிக்கு வந்து விட்டது.

மழை என்றால் நம்மூர் போல், பெரியதாக இடி மின்னலுடன், பட படவென்று பெய்து விட்டு, ஒரு மணி நேரத்திலோ, இரண்டு மணி நேரத்திலோ அடங்கி விடக்கூடியதல்ல இந்த ஊர் மழை. பொதுவாக இடி மின்னல் இல்லாமல், நனையத் தூண்டுகிற மிதமான வேகத்தில் தொடர்சியாகப் பெய்து கொண்டிருக்கும், அதுவும், சொல்லி வைத்தாற்போல் தினமும்...சினேகிதமான இந்த மழையில் நனைந்து கொண்டே, காலையில் வாக்கிங் போவது உண்மையிலேயே ஒரு சுகானுபவம். (தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பாதுகாப்பு காரணமாக, இப்போதெல்லாம் போக முடியவில்லை... இந்தியர்கள் எல்லோருமே பணக்காரர்கள் என்று இவர்கள் நினைப்பதால், தாக்குதலுக்கோ அல்லது கடத்தலுக்கோ உள்ளாக நேரிடலாம்)

இந்த இதமான தட்ப வெப்பநிலை தவிர, இந்தியாவில் எனக்குப் பிடிக்காத விசயங்களக இருந்த, வீட்டை சுத்தம் செய்தல், துணி துவைத்தல், ஷூ பாலீஸ் போடுதல் இவை போக, சமைத்தல், மார்க்கெட்டுக்கு போகுதல் என சகல வேலைகளையும் செய்ய House Girl அல்லது House Boy கிடைப்பது உகாண்டாவில் எனக்கு ரொம்பப் பிடித்த விசயம்.(Servant என்று விளித்தால் இவர்களுக்கு கோபம் வந்துவிடும்... இதைப் போலவே Black என்று அழைத்தால் கூட கோபப்படாத இவர்கள் நீக்ரோ என்று அழைத்தால் மிகவும் கோபப் படுவார்களாம்). எங்கள் House Girl 5 வருடங்களாக தென்னிந்தியர்களிடம் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், இட்லி, தோசை முதல் சமோசா, மிக்சர், சேவு வரைக்கும் செய்யத் தெரியும். 90,000 உகாண்டா ஷில்லிங்ஸ் சம்பளம் (கிட்டத்தட்ட 2250 ரூபாய்). Aids ஆல் பாதிக்கப் பட்டிருக்கும் (இதெல்லாம் இங்கே சகஜம்) இவளை நம்பிப் பெரிய குடும்பமே இருப்பது வேதனையான விசயம்.

பயணக் கட்டுரை மாதிரி எழுதி போரடிச்சுட்டேன்னு நினைக்குறேன்... கொஞ்சம் Gap விட்டுக்கிறேன்...

வர்ட்டா,
இராம்ஸ்

15. நைல் நதி நாடு..

திங்கள், பிப்ரவரி 13, 2006

அதிகாலை 3.30 க்கு பலத்த துப்பாக்கி சத்தம் காரணமாக முழிப்பு வந்து விட்டது. உகாண்டவில் இது ஒன்றும் புதிதல்ல. முதன்முதலில் இங்கே வந்த போது, அலுவலகத்தில் கொடுத்த முதல் அறிவுரையே, பாதுகாப்பு பற்றியதுதான்.. தனியே எங்கும் செல்ல வேண்டாம், துப்பாக்கிச் சண்டை நடந்தால் உடனடியாக தரையில் குப்பறடிக்க படுத்துக் கொள்ளுங்கள் (ஏன் மல்லாக்க படுக்கக்கூடாது என்று அவர்கள் விளக்க வில்லை), தனியாகவோ, அல்லது சிறு குழுவாகவோ செல்லும் போது, யாரேனும் தாக்கினால் (பணத்திற்காக மட்டுமே இது போன்ற தாக்குதல்கள் நடைபெறும்) அடுத்த அடி விழுவதற்கு முன் புத்திசாலித்தனமாக, கையிலிருக்கும் பணம், நகை, மொபைல் போன் ஆகியவற்றை தாரை வார்த்து விடுதல் நல்லது, எங்கே சென்றாலும் கொஞ்சம் பணம் எடுத்துச் செல்லுங்கள் (இல்லையென்றால் பணம் கிடைக்காத சோகத்தில் அல்லது கோபத்தில், நீங்கள் கொலை செய்யப் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், குறைந்த பட்சம் ஊமைக்காயங்களுடன் அடி உத்தரவாதம்)

இங்கே வந்தது முதலே, களவு பற்றி அதிகமாக கேள்விப்படுகிறேன். விதம் விதமாக திருடுகிறார்கள்.வங்கிக் கொள்ளை அல்லது பல மில்லியன் பெருமானமுள்ள கண்டெய்னர் கடத்தல், யாரையேனும் கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுதல் போன்ற பெரிய லெவல் திருட்டுகள் போக, காரில் போகும் போது வழி மறிப்பு, இரவில் வீடு புகுந்து கொள்ளையடித்தல் போன்ற நடுத்தர வகை திருட்டுகள், தனியே செல்லும் போது தாக்குதல், வேலை செய்யுமிடத்தில் திருடுதல் போன்ற சின்ன லெவல் திருட்டுகள் (பெரும்பாலும் இவர்கள்தான் மாட்டுவார்கள்) என எந்த வகை திருட்டையும் விட்டு வைக்காத கடின உழைப்பாளிகள் இங்கே அதிகம்.

காலையில்தான் தெரிந்தது, அதிகாலை துப்பாக்கிச் சத்தத்திற்கான காரணம்.. உகாண்டா டெலிகாம் லிமிட்டெட் அலுவலகத்தைக் கொள்ளையடித்து, நிறைய ஃபோன்களைத் திருடியிருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், அந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் காவல் நிலையம் இருக்கிறது..

இப்படியெல்லாம் விதம் விதமாகத் திருடி, உருப்படியாக ஏதேனும் செய்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. நாடு முழுக்க பார்களில் கூட்டம் அலை மோதுகிறது, பல மனைவி அல்லது பல கணவர்களுடன் இருப்பது சகஜமான ஒன்றாக இருக்கிறது.. (இரண்டு நாட்களுக்கு முன்னால், கடையில் வேலை செய்பவர்களில் ஒருவன், இறுதி ஊர்வலத்திற்கு செல்ல வேண்டும் என விடுப்பு கேட்டான். யார் மரித்தது என்றேன். அம்மாவின் கணவர் என பதில் வந்தது). இவர்களின் பாலியல் கலாச்சாரத்தைப் பற்றித் தனிப் பதிவே போடலாம்.

மாலையில்,தேர்தல் பிரச்சார ஊர்வலத்தில், இவர்கள் கையில் செருப்பும், துடைப்பமுமாக ஆடிக்கொண்டு சென்றதைப் பார்க்கும் போது (இன்னும் சிலர் செடி கொடிகளை உடை முழுக்க செருகியிருந்தார்கள்) உகாண்டா காலச் சக்கரத்தில் பின்னோக்கிப் பயணிப்பது போல் தோன்றுகிறது.

இன்று இரவாவது, துப்பாக்கிச் சத்தமில்லாமல் நிம்மதியாகத் தூங்கலாம் என்றால் இன்று இரவு முழுக்க மின்சாரம் இருக்காது என்ற நல்ல செய்தி இப்போதுதான் கிடைத்தது. நரகத்தில் சந்தோசமாக வாழ்வது எப்படி என்ற புத்தகத்திற்கு ஆர்டர் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்..(உகாண்டாவில் நல்ல விசயங்களே கிடையாதா என்பவர்களுக்காக அடுத்த பதிவில் சில நல்ல விசயங்களோடு வருகிறேன்)

14. நதியா.. நதியா.. நைல் நதியா..??

செவ்வாய், பிப்ரவரி 07, 2006

உலகின் மிக நீளமான நதி, எகிப்த்தின் கொடை என்றெல்லாம் வர்ணிக்கப்படும் நைல் நதியின் பிறப்பிடம் (வெள்ளை நைல்) சாட்சாத், தற்சமயம் அடியேன் குடி கொண்டிருக்கும் இந்தப் புண்ணிய பூமிதான். முதன் முதலாக நைலைப் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பு, முதன்முதலாக காவிரியைப் பார்த்த போது ஏற்பட்ட பிரமிப்பிற்கு சற்றும் குறையாதது.

கென்யா, தான்சானியா மற்றும் உகாண்டா எனப் பரந்து விரிந்திருக்கும், விக்டோரியா ஏரிதான் நைலின் மூலம். புசியா-விலிருந்து பார்க்கும் போது, மிகவும் அமைதியாக காணப்படும், இந்த ஏரிதான் நைலின் ஊற்று என்று நம்புவதற்கு சற்று கடினமாக இருந்தாலும், (கைக்கெட்டும் தூரத்தில் கென்யாவைப் பார்க்கலாம்) என்ட்டபி பக்கத்திலும், முன்யோன்யோவிலும் இருப்பது இதே விக்டோரியா ஏரிதான் என்று அறியும் போது இவ்வளவு பெரியதா என்று வியப்பேற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

இங்கே வந்த புதிதில், அருகிலிருக்கும், Mount Elgon க்கு சென்ற போது, மலை அவ்வளவாகப் பிரமிப்பேற்படுத்தவில்லை. நம் ஊட்டி, கொடைக்கானல் அளவு கூடக் கிடையாது. குளிரும் அவ்வளவாக இல்லை. மாறாக, பிரமிப்பு ஏற்படுத்தியது, அங்கிருந்த அருவிகள்தான். Sipi Falls மட்டுமே இருக்குமென நம்பிச் சென்ற நான், அங்கு பார்த்தது, கிட்டத்தட்ட 20 அருவிகள். தொடர் மழை காரணமாக ஏற்பட்டிருந்த அந்த அருவிகளை, அந்தப் பசுமையான பின்னனியில் பார்த்த போது, சொர்க்கம் என்பது, அருகில்தான் எங்கோ இருப்பது போன்ற உணர்வேற்பட்டது.

உண்மையிலேயே தண்ணியில்லாக் காடான கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்த நான் இப்படியாக நாடு முழுவதும் இவ்வளவு தண்ணீரைப் பார்த்தவுடன் அடைந்த மகிழ்சிக்கு அளவே கிடையாது. சரி,அதுக்கு இப்போ என்ன வந்துச்சி என்கிறீர்களா..?

காரணம் இருக்கிறது... நேற்றைய செய்தித் தாளில் வந்திருக்கும் செய்தி... தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாததால், திங்கள் முதல் (சரியாகக் கவனிக்கவும் திங்கள் மட்டுமல்ல, திங்கள் முதல்), உகாண்டா முழுவதும், காலை ஆறு மணி முதல், மாலை ஆறு மணி வரைக்கும் மின்சாரம் துண்டிக்கப் படும். எத்தனை நாளுக்கு இது தொடரும் என்பதைப் பற்றிச் சரியான தகவல் இல்லை...

உலகின் மிக நீளமான நதி.... உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஏரி... மழைக்காலத்தில் இருபது அருவிகள் உற்பத்தியாகும் எல்கான் மலை... எல்லாவற்றையும் மீறி லேசாக நரக வாடை அடிப்பது போல் தோன்றுகிறது...