India

Uganda

United Kingdom

Malaysia

28.ஸ்காட்லாந்தின் கடைசி மன்னனும், உகாண்டாவும்...

திங்கள், மார்ச் 12, 2007

ஹாலிவுட்காரர்களுக்குத் திடீரென்று உகாண்டா மேல் காதல் வந்து விட்டது. காசினோ ராயலில் பாலேயைக் காட்டியவர்கள் (வெறும் 5 நிமிடங்களே என்றாலும்) இப்போது ஸ்காட்லாந்தின் கடைசி மன்னனிலும்....(இதில் முழுப் படமுமே உகாண்டாதான்)

இடி அமீன் கதை என்றவுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். ஆசியர்களை(இந்தியர்கள் எனப் பொருள் கொள்க) வெளியேற்றியது பற்றின படமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். படம் முடியும் தருணத்தில் லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

இந்தப் படம் பற்றின உகாண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்....?

பத்திரிக்கைகள் பாராட்டித் தள்ளின. முசிவேனியின் மீடியா சுதந்திரம், உகாண்டா பற்றின உலகின் பார்வையை மாற்றி விட்ட்து என்று ஒரே புகழாரம்தான்.

ஆனால், ஃபீல்ட் மார்சல், விக்டோரியா கிராஸ் (VC), மிலிட்டரி கிராஸ் (MC), டிஸ்டிங்விஸ்டு சர்வீஸ் ஆர்டர் (DSO), கான்க்விரர் ஆஃப் தி பிரிட்டீஷ் எம்பரர் (CBE) இடி அமீன் தாதாவை (மேற்கூரிய பட்டங்கள் யாவையும் அமீன் தனக்குத் தானே சூட்டிக் கொண்டவை) ரொம்ப‌வும் ந‌ல்ல‌ப‌டியாக‌க் காட்டி விட்டார்க‌ள் என்று சாமானிய‌ர்க‌ள் முணுமுனுக்கிறார்க‌ள்.

இங்கே வ‌ருவ‌த‌ற்கு முன் உகாண்டா என்ற‌வுட‌ன் நினைவுக்கு வ‌ந்த‌வ‌ர் இடி அமீன்தான்.உகாண்டாவில் வேலை பார்க்க‌ப் போகிறேன் என்ற‌வுட‌ன் கிட்ட‌த்த‌ட்ட‌ எல்லோரும் நினைவுகூர்ந்த‌ ஒரு பெய‌ர் இடி அமீன்தான். இந்த‌ ச‌ங்க‌ட‌ங்க‌ள் எல்லா உகாண்ட‌ர்க‌ளுக்கும் இருக்கிற‌து. இங்கிருந்து எந்த‌ வெளிநாட்டிற்குச் சென்றாலும், உக‌ண்ட‌ன் என்ற‌வுட‌ன் வ‌ரும் உட‌ன‌டி ப‌தில் "ஓ... இடி அமீன்" ஏதோ இவ‌ர் அமீனால் பாதிக்க‌ப்ப‌ட்டு த‌ப்பி வ‌ந்த‌வ‌ரைப் பார்ப்ப‌து போல் ஒரு பார்வை... இவ‌ர்க‌ளின் கோப‌ம் என்ன‌வென்றால், ஸடாலினுக்காக‌ யாரும் ருஷ்யாவைப் ப‌ழிக்க‌வில்லை, போல் பாட்டிற்காக‌ யாரும் க‌ம்போடியாவை ப‌ழிக்க‌வில்லை. ஆனால் அமீனுக்காக‌ ஏன் எல்லோரும் உகாண்டாவை ப‌ழிக்கிறார்க‌ள்???

இந்த‌ப் ப‌ட‌ம் ஒட்டு மொத்த‌மாக‌, உகாண்டா ப‌ற்றின‌ உல‌கின் பார்வைவை மாற்றிவிடும் என்று தோன்ற‌வில்லை. ஆனால் க‌ண்டிப்பாக‌ அந்த‌த் திசையை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறார்க‌ள் என்று சொல்ல‌ முடிகிற‌து. நாம் வ‌ழ‌க்க‌மாக‌ டாக்குமெண்ட‌ரிக‌ளில் பார்க்கும் உகாண்டாவாக இல்லாம‌ல், ப‌சியில் வாடும் ம‌க்க‌ளோ, உட‌ல் முழுக்க‌ ஈக்க‌ள் மொய்க்கும் குழ‌ந்தைக‌ளோ, உண‌வுப் பொட்ட‌ல‌ங்க‌ளைக் கொண்டு வ‌ரும் வ‌ண்டியை ச‌ண்டையிட்டு மொய்க்கும் கூட்ட‌ங்க‌ளோ இல்லாம‌ல் உகாண்டா, ஒரு வித‌த்தில் உண்மையான‌ உகாண்டா காட்ட‌ப் ப‌ட்டிருக்கிற‌து.

ஃபார‌ஸ்ட் விட்டேக‌ர் மிக‌வும் மென‌க்கொட்டிருக்கிறார் என்ப‌து ப‌ட‌ம் பார்க்கும் போது தெரிகிற‌து. நிறைய‌ ஹோம் ஒர்க் செய்திருக்க‌ வேண்டும். ந‌டை, பேச்சுவ‌ழ‌க்கு எல்லாவ‌ற்றிலுமே அச்சு அச‌ல் உகாண்ட‌ர்க‌ள் வாடை. அமீனின் பிர‌ப‌ல‌மான‌ மூட் மாறுத‌லை மிக‌வும் அனாச‌ய‌மாக‌ச் செய்திருக்கிறார். ஆஸ்கார் ஆச்ச‌ர்ய‌ம‌ளிக்க‌வில்லை.

இந்த‌ப் ப‌ட‌ம் வெளிவ‌ந்த‌தும், நிறைய‌ பேர் "அமீனும் நானும் ப‌ய‌ங்க‌ர‌ தோஸ்த் தெரியுமா? ஆனாலும் ம‌னித‌ர் அவ்வ‌ள‌வு மோச‌ம் கிடையாது" என்கிற ரேஞ்சில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்க‌ள். அதில் என்னைக் க‌வ‌ர்ந்த‌து இர‌ண்டு பேட்டிக‌ள். ஒன்று, அமீனின் இங்கிலீஷ் வாத்தியார். அமீன் என்கிற‌ பெய‌ரை ஆங்கில‌த்தில் எழுதுவ‌த‌ற்கே ம‌னுச‌னுக்கு 5 வ‌ருட‌ங்க‌ள் ஆகி இருக்கிற‌து. ஆனாலும் விடாப் பிடியாக‌ முய‌ன்றிருக்கிறார். த‌ன‌க்கு ஆங்கில‌ம் தெரியாது என்ப‌தை எல்லோரிட‌மும் சொல்லிக் கொள்ளும் ப‌ழ‌க்கமும் அமீனுக்கு இருந்திருக்கிற‌து. இதைப் ப‌டித்து விட்டு ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் நினைகூர்ந்த‌து, ஒருமுறை இராணியைப் பார்ப்ப‌த‌ற்காக‌ ல‌ண்ட‌ன் சென்றிருந்த‌ போது, இராணியை மிஸ்ட‌ர் க்வீன் என்று அழைத்துவிட்டார்.

இன்னொன்று, அமீன் ஆசிய‌ர்க‌ளை நாட்டை விட்டு வெளியேற்றிய‌ பின்ன‌ர், அவ‌ர்க‌ள‌து சொத்துக்க‌ளை எவ்வாறு பிரித்துக் கொடுத்தார் என்ப‌து ப‌ற்றிய‌து. அமீன் எந்த‌ ஊருக்கொல்லாம் போகிறாரோ அந்த ஊர் ம‌க்க‌ளெல்லாம் அந்த‌ ஊரில் இருக்கும் இந்திய‌ர்க‌ளின் க‌ட்ட‌ட‌ங்க‌ளை நோக்கி ஓடுவார்க‌ள். யார் முத‌லில் சென்ற‌டைகிறாரோ அவ‌ருக்கே அந்த‌ க‌ட்டிட‌த்தை வ‌ழ‌ங்கிவிடுவார் அந்த‌ வ‌ள்ள‌ல். இந்திய‌ர்க‌ளை வெளியேற்றிய‌தில் அன்றைக்கு அங்கிருந்த‌ இந்திய‌ர்க‌ளின் ப‌ங்கும் முக்கிய‌மான‌தாம். அவ்வ‌ள‌வு மோச‌மாக‌ உள்ளூர் ம‌க்க‌ளை ந‌ட‌த்தினார்க‌ளாம். கொஞ்ச‌ம் காசு சேர்ந்த‌ பின், எங்கே இருக்கிறோம் என்ப‌தையே ம‌ற‌ந்தால் என்ன‌ ந‌ட‌க்கும் என்ப‌த‌ற்கு இது ஒரு ப‌டிப்பினை.

6 கருத்துகள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) சொன்னது…

ராம்ஸ்,

இன்னும் படம் பார்க்கவில்லை. டிவிடி வந்து ஆரவாரமெல்லாம் அடங்கியபிறகு பார்க்க எண்ணம். படத்தைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, உகாண்டாவிலிருக்கும் உங்களிடமிருந்து பதிவு வருகிறதா என்று கவனிக்க வேண்டும் என்ற நினைப்பு வந்துபோனது. எதிர்பார்த்தபடியே உகாண்டா மக்களின் பார்வையிலிர்ந்து எழுதியிருக்கிறீர்கள். நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி!

அடிக்கடி எழுதுங்க. புகைப்படங்களும் போடலாம். தப்பில்ல. ;)

-மதி

2:59 AM
Costal Demon சொன்னது…

வாங்க மேடம்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

கண்டிப்பாக உகாண்டர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்று விளம்பரப் படுத்தி இருக்கிறார்கள். இன்னொரு தகவல்... இந்த நாட்டிலேயே ஒரே ஒரு திரையரங்கம்தான் இருக்கிறது, அதுவும் தலைநகர் கம்பாலாவில். மற்ற அனைவருக்கும் (திருட்டு) வி.சி.டி தான்.

நிறைய எழுத முயற்சிக்கிறேன்.. அடிக்க வரக்கூடாது.. :‍)

நன்றி,
ராம்ஸ்

6:00 AM
பெயரில்லா சொன்னது…

வித்தியாசமான கட்டுரை. அடிக்கடி எழுதுங்க..

7:50 PM
Costal Demon சொன்னது…

வருகைக்கு நன்றிங்க...

அதிக வேலைப் பளு (!!!) காரணமாக எழுத முடியவில்லை. இந்த மாதத்திலிருந்து அதிகமா எழுதுவேன்.

நன்றி,
இராம்ஸ்

1:03 PM
ஆட்காட்டி சொன்னது…

எனக்கும் உங்கட நாடில வேலை கிடைக்குமா?

12:32 PM
Costal Demon சொன்னது…

வருகைக்கு நன்றி ஆட்காட்டி... எந்த ஊரக் கேக்குறீங்க...?

9:44 AM