India

Uganda

United Kingdom

Malaysia

52. அடிலெய்ட் - முதல் வேலை

செவ்வாய், ஆகஸ்ட் 07, 2018

ஒரு பெரிய சதுரம், அதற்குள் மூன்று சிறிய சதுரங்கள் மற்றும் ஒரு செவ்வகம். அந்த செவ்வகத்தைச் சுற்றி மற்றொரு பெரிய சதுரம். ஆஸ்திரேலியாவின் சிறந்த ஓவியக் கல்லூரிகளில் ஒன்றில் என்னுடைய முகம் இப்படித்தான் வரையப்பட்டது. அதிமுக்கியமாக, பார்க்கப் பல கோணங்களில் இயந்திர மனிதனின் முகம் போலக் காட்சியளித்த அந்தப் படங்கள், சில கோணங்களில் என்னைப் போலவும் இருந்தன‌. 

ஒரு விரிவுரையாளர் மற்றும் எட்டு மாணவர்கள் என்னைச் சுற்றி நின்றிருந்தனர்மாணவர்களில் இரண்டு பேர்தான் இளவயதினர். மூன்று நடுத்தர மற்றும் மூன்று வயது கூடிய மாணவர்கள். இரண்டு பேர் மட்டுமே ஆண்கள். விரிவுரையாளர் விதவிதமான வரைவுப் பணிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் விதவிதமாக வரைந்து கொண்டிருந்தனர். நான் ஆடாமல் அசையாமல் கண்களை உருட்டாமல் அமர்ந்திருந்தேன். நாற்கரத்தைத் தொடர்ந்து அடுத்ததாகவட்டங்களைக் கொண்டு என் முகத்தை வரையும் முயற்சியில் இறங்கினர். நான் அங்கேயே அமர்ந்திருப்பதா அல்லது ஓட்டம் பிடிப்பதா என்று யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

ஆஸ்திரேலியா வந்து என்னுடைய முதல் வேலையில்தான் இவையெல்லாம் நடந்தன. அது ஒரு மூன்று மணி நேர வேலை. ஓவியக் கல்லூரியில் மாடல். அந்த விரிவுரையாளர் என்னுடைய நண்பர். வித்தியாசமான முகங்களையே தான் வரைய விரும்புவதாகச் சொன்னார். என்னுடைய முகத்தில் என்ன வித்தியாசத்தைக் கண்டார் எனப் பலவாறாக யோசித்தும் எனக்குப் புரிபடவில்லை. இருந்தாலும் என்னையும் மதித்துக் கூப்பிடுகிறாரே என்று ஒப்புக் கொண்டேன். மூன்று மணி நேர வேலையாதலால் கையிலேயே பணத்தைக் கொடுத்து விடுவார்கள் என் யூகித்திருந்தேன். முதல் வேலையாதலால் மகளுக்குப் பொம்மை வாங்கி வருவதாக வாக்குக் கொடுத்திருந்தேன். மகளும் மிகுந்த சந்தோசத்துடன் என்னை வழியனுப்பி வைத்திருந்தார்வழக்கமாகக் கையில் பணத்தைக் கொடுத்து விடுவார்கள், ஆனால் இன்று உங்களுக்கு வழக்கமான பணத்தைவிட அதிகம் தருவார்கள், எனவே நீங்கள் ஒரு இன்வாய்ஸ் எழுதித் தரவேண்டும், இரண்டொரு நாட்களில் உங்கள் கணக்கில் போட்டு விடுவார்கள் என்றார் நண்பர். பரவாயில்லை என்றேன்.

வேலை ஒன்றும் கடினமானதல்ல. ஒரு நாற்காலியில் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருக்க வேண்டும். பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை சற்று நேரம் இடைவெளி கிடைக்கும். அப்போது மாணவர்கள் எப்படி வரைந்திருக்கிறார்கள் என்றும் பார்க்கலாம். அடுத்ததாக வட்டங்களையும் நாற்கரங்களையும் இணைத்து என் முகம் வரையப் பட்டது. இவையெல்லாம் warm-up என்று பின்னர்தான் புரிந்தது. அடுத்ததாகவிரிவுரையாளர் முப்பரிமாணத்தில் வரைவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க ஆரம்பித்தார். எனக்கு சற்று நேரம் ஓய்வு கிடைத்தது. நணபர் ஆஸ்திரேலியர். பல வருடங்களுக்கு முன்னர் சிலத் தனிப்பட்ட காரணங்களால் மனரீதியாக அமைதியிழந்து இந்தியாவிற்குச்  சென்றிருக்கிறார். இராஜஸ்தானில் ஒரு குடும்பம் இவரை அவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டு அவருடைய கடந்த கால வடுக்களை ஆற்றியிருக்கிறார்கள். இந்தியாவில் அவர் தன்னுடைய விருப்பத்திற்குரியஓவியத்துறையையே தொழிலாகவும் செய்யத் துவங்கியிருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அடிலெய்ட் திரும்பியவர் தற்போது ஓவியக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்மிக்க நல்லவரான இவரும் இன்னொரு தன்னலமற்ற நண்பரும் சேர்ந்து ஆரம்பித்த ஒரு அமைப்பைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன்

சதுரத்தை முப்பரிணாமத்தில் வரைந்து அதில் முகத்தின் ஒவ்வொரு பாகத்தையும் எவ்வாறு வரைவது என்று பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். பின்னர் மாணவர்களிடம் ஓவியருக்கும் ஓவியத்தில் வரையப்படுபவருக்கும் இடையேயுள்ள பிணைப்பைப் பற்றி விளக்கிக் கூறினார். ஓவியர்கள் யாரை வரைகிறோம் என்று தெரிந்திருப்பது முக்கியமானது. அது அவர்களுக்கு இடையே ஒரு முக்கியமான பிணைப்பை உண்டாக்கும், அதனால் தான் யாரை வரைந்தாலும் அவர்களைப் பற்றி சிறிதேனும் அறிந்து கொண்டு பின்புதான் வரைவதாகக் கூறினார்அங்கே நான்தான் வரையப் படுபவன். எனவே என்னைப் பற்றி பத்து நிமிடங்களுக்கும் பேசுமாறு கூறினார். நானும் என்னுடைய் சொந்தக் கதை மற்றும் சோகக் கதையைப் பத்து நிமிடங்களுக்குச் சுருங்கக் கூறினேன்இதற்குத்தான் வழக்கத்தை விட அதிகப் பணம். அவர் எதிர்பார்த்தது போலவே மாணவர்களும் நிறைய கேள்விகள் கேட்டனர். எனக்கும் அவர்களுக்கும் இடையே நட்பு துளிர்த்தது போல் தோன்றியது. அங்கே அமர்ந்திருந்தது முன்பைவிட இலகுவாகத் தோன்றியது.

அடுத்த பதினைந்து நிமிடங்கள் என்னை வரையும் பணி தொடர்ந்தது. பின்னர் ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் அடுத்த பதினைந்து நிமிட வரைபணி. பின்னர் கடைசி ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் ஏழு நிமிடங்கள் வரைந்தார்கள். அவ்வளவுதான். வேலை முடிந்தது. இப்போது அனைவரும் அடுத்தவர்கள் வரைந்த படங்களைப் பார்க்கலாம் என்றார் நண்பர். நானும் அந்த வரிசையில் இணைந்து கொண்டேன். எல்லோருமே நன்றாக வரைந்திருந்தார்கள். சிலர் மற்றவர்களை விடச் சிறப்பாக. எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினேன். நிறையப் பேர் நான் ஒரு நல்ல மாடல் என்றார்கள். அனைவரும் எனக்கு விரைவில் வேலை கிடைக்க வாழ்த்தினர். அங்கே இருந்த மாணவர்களிலேயே ஆக வயதான பெண்மணி கேட்டார், கண்களை உருட்டாமல் அவ்வளவு நேரம் அமர்ந்திருந்தீர்களே, கண்கள் வலிக்கவில்லையா என்று. நான் வாங்கி வரப் போகும் பொம்மையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் என் மகளின் ஏமாற்றத்தைக் காணநேர்கையில் வரும் வலியை விடச் சற்று கம்மிதான் என்று எண்ணிக் கொண்டேன். வரும் வழியில் கடையில் ஒரு மிட்டாய் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்

0 கருத்துகள்: