India

Uganda

United Kingdom

Malaysia

24. உகாண்டா நிலவரம்.... கலவரம்???

சனி, மே 20, 2006

அங்கே தமிழ்நாட்டில், கலைஞர் ஆட்சியேற்பதற்கு முந்தின நாள் சாயங்காலம், இங்கே, முசிவேனி மூன்றாம் முறையாக ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டார். அங்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நாளில், இங்கே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்கள் கழிந்து...

கடந்த 20 ஆண்டுகளில் முசிவேனி, பதவியேற்கும் நான்காவது விழா இது. 1985 ல் Milton Obote யிடமிருந்து, பதவியைப் பறித்த,Titi Okello விடமிருந்து நாட்டைக் காப்பாற்ற National resistance Army (NRA) புரட்சிக்குப் பின், 1986 இந்திய குடியரசு தினத்தன்று, முதன் முதலாகப் பதவியேற்றார். அதன் பின் முறையாக தேர்தலில் பங்கேற்று, 1996 லும், 2002 லும். இந்த பிப்ரவரியில் நடந்த இந்த Multi Party தேர்தல், உகாண்டா அரசியல் சரித்திரத்தில் ஒரு முக்கியமான் நிகழ்வு. முசிவேனிக்கு 58% ஓட்டுகளும், அவரை எதிர்த்த Forum Democratic Change (FDC)ஐ சேர்ந்த Col. Dr. Kissa Besigye க்கு 37% ஓட்டுகளும் கிடைத்தன.

நிறைய பக்கத்து நாட்டு அதிபர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியும், நிறைய பேர் வராமல் போனது, ஆப்பிரிக்காவில் முசிவேனியின் செல்வாக்கு மங்குவதைக் காட்டியது. ஒரு காலத்தில், ஆப்பிரிக்க மக்களுக்கு மட்டுமல்லாது, பல ஆப்பிரிக்க அதிபர்களுக்கே உதாரண புருசனாக இருந்தவர், 20 வருட தொடர் ஆட்சியின் முடிவில் களையிழந்து காணப் படுகிறார்.

தொடர் மின்சாரத் துண்டிப்பு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதைச் சரிக்கட்ட கருமாவிலும், புஜகாளியிலும் 2010 க்குள், அணைகள் கட்ட வேண்டும். அது போக, நம்மூரில் வீரப்பன் இரண்டு மாநில போலீசுக்குத் தண்ணீர் காட்டியது போல, இங்கே Kony என்னும் புரட்சிக்காரன் Lords Resistance Army (LRA)என்னும் அமைப்பை வைத்துக் கொண்டு, தெருவோர அனாதைச் சிறுவர்களைக் கடத்திக் கொண்டு போய் பயிற்சியளித்து, உகாண்டா, காங்கோ இரண்டு நாட்டு ஆட்சியாளர்களின் தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறான். உகாண்டா அமெரிக்க தூதரகமே இந்த வருட இறுதிக்குள், கோனியின் அட்டூழியத்திற்கு முடிவு கட்டுவோம் என்று அறிவிக்குமளவுக்கு அண்ணன் ஃபேமசாகி விட்டார். அங்கே நடந்தது போலவே இங்கேயும், பொது மன்னிப்பு கொடுக்கலாமா கூடாதா என்று, ரேடியோதோறும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த உகாண்டா வீரப்பனைப் பற்றி தனிப் பதிவு போடலாம் என்றிருக்கிறேன்.

மற்ற படிக்கு, மழைக்காலம் துவங்கி விட்டாலும், சென்ற ஆண்டைக் காட்டிலும், மிகக் குறைவாகவே பெய்கிறது. லேக் விக்டோரியாவிலும் தண்ணீர் மட்டம் எதிர்பார்த்த படிக்கு ஏறவில்லை. இங்கே மின்சார வினியோகம் UMEME என்கிற தனியார் வெளி நாட்டுக் கம்பெனி வசம் இருக்கிறது. குறைந்த அளவே மின்சாரம் உற்பத்தி செய்ய முடிந்த போதிலும், அதே செலவு ஆவதால், 37% மின்கட்டண உயர்வு தடுக்க முடியாதது என்ற நல்ல செய்தியை அறிவித்துள்ளது. சுத்தமாக மின்வினியோகத்தைத் துண்டித்து விட்டு, அதே செலவாகிறது என்று, இன்னும் கட்டணத்தைக் கூட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது...

7 கருத்துகள்:

NoMad சொன்னது…

நல்ல முயற்சிகள் ராம் , பாராட்டுக்கள் .
தங்களால் இயன்ற அளவு உகான்டாவை பற்றி ஆவனப்படுத்துங்கள் ,. மூன்றாம் உலக ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்க்கைமுறையை எளிய தமிழில் வெளியிடுவது நம் மக்களுக்கு ஒரு உலகளாவிய சிந்தனையை தோற்றுவிக்கும் .

4:44 AM
Costal Demon சொன்னது…

வாங்க தமிழ்,

பாராட்டுக்கு நன்றி... வருகைக்கும் நன்றி.

அன்புடன்,
இராம்ஸ்

5:18 AM
இலவசக்கொத்தனார் சொன்னது…

நல்ல எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்க.

7:30 AM
Costal Demon சொன்னது…

வாங்க கொத்தனார்..

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்,
இராம்ஸ்

1:59 AM
பெயரில்லா சொன்னது…

இராம்ஸ், நீங்கள் ஏன் இந்தியாவை விட ஊழல் மிகுந்த பாதுகாப்புக் குறைந்த உகண்டாவுக்கு வேலை செய்யச் செல்ல முற்பட்டீர்கள் என அறியலாம? சும்மா ஒரு ஆராய்ச்சி :)

3:21 AM
Costal Demon சொன்னது…

ஆகா, சரியான கேள்வியைக் கேட்டிருக்கீங்க விடுப்பு, என்னடா எப்பப் பார்த்தாலும், இவன் இப்படியே உகாண்டால அது சரியில்லை இது சரியில்லைன்னே பேசிக்கிட்டு இருக்கானே, இவ்ளோ கஷ்டப் பட்டு இவன் எதுக்கு அங்கன இருக்கனும், பேசாம இந்தியா வந்துற வேண்டியதுதானேன்னு நினைச்சு அப்படிக் கேட்டுட்டீங்கன்னு நினைக்குறேன்.

நான் இந்தியால கிளினிக்கல் பிஸினஸ் ஆபீசரா (ஹி.. ஹி.. மெடிக்கல் ரெப்பத்தான் கொஞ்சம் பாலீஸா சொன்னேங்க) வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஒரு அஞ்சாறு வருசத்துக்கு அப்புறம் அந்த வேலை போரடிச்சுப் போச்சுங்க. திரும்பவும் வேற கம்பேனில போய் அதே வேலையச் செய்ய விருப்பமில்லாமல், மற்ற வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தேன். அப்போது சில நண்பர்கள் கல்ஃபிலும், ஒரு நண்பன் உகாண்டாவிலும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். நான் இரண்டிற்குமே முயற்சி செய்தேன். உகாண்டாவிற்கு முதலில் தேர்வானதால் இங்கே இருக்கிறேன். இல்லாவிட்டால் கல்ஃபில் இருந்திருப்பேன்.

நண்பன் இங்கே சில காலம் வேலை செய்திருந்ததனால், பாதுகாப்பு பற்றியோ வசதிக் குறைபாடு பற்றியோ விசாரிக்கவில்லை. அவனால் இங்கே வசிக்க முடியுமென்றால் என்னாலும் முடியும் என்றுதானே அர்த்தம். தவிர நான் கொஞ்சம் ஓவராக பில்ட் அப் கொடுத்து விட்டேனென்று தோன்றுகிறது. வாழவே முடியாத படிக்கு மோசமான நாடல்ல இது. இந்தியாவிலேயே வாழ்க்கையைக் கழித்த எனக்கு இங்கே சில விசயங்கள் வித்தியாசமாகப் படவே அவற்றைப் பற்றி எழுதினேன். அவ்வளவுதான்.

மற்றபடிக்கு உலகின் 5 வாழத் தகுந்த கண்டங்களிலும் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் காரணம். பார்க்கலாம்.

வருகைக்கு நன்றி,
இராம்ஸ்‌‌

5:20 AM
துளசி கோபால் சொன்னது…

இன்னும் எழுதுங்க ராம்.

இதுவரை யாரும் இந்த நாட்டைப் பத்தி எழுதலை.

நீங்கதான் முதல்.

வாழ்த்து(க்)கள்.
நல்லா இருங்க.

8:03 AM