India

Uganda

United Kingdom

Malaysia

50. அடிலெய்ட் - முதல் பார்வை

புதன், ஜூலை 25, 2018

அடிலெய்டைத் தொலைந்து போக வசதியில்லாத நகரம் என்பார்கள். மற்ற ஆஸ்திரேலிய மாநிலத் தலைந‌கரங்களை ஒப்பிடும் போது அடிலெய்ட் சிறிய நகரம், மற்றும் திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகரம். எனவே தொலைந்து போவது கடினம். பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலத் தலைநகரங்களைப் போலல்லாமல் அடிலெய்ட் பிரித்தானிய குற்றவாளிகளின் குடியேற்றத்திற்காக நிர்மாணிக்கப் படவில்லை, மாறாக, Free settlers எனப்படும் குற்றப் பிண்ணனியில்லாதவர்களின் குடியேற்றத்தினால் உண்டான நகரம். அடிலெய்ட்வாசிகளுக்கு அதில் பெருமை அதிகம். 

                     Image courtasy: https://www.australia.com/en/places/adelaide-and-surrounds.html

ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர விண்ணப்பித்தது 2014லில். விசா வந்தது 2018ல். இது தெற்கு ஆஸ்திரேலியா sponsored விசா. எனவே விசாவில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. முக்கியமானது, நாங்கள் தெற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு வருடங்கள் வசிக்க வேண்டும். அதில் ஒரு வருடமாவது ஒரு முழு நேரப் பணியிலோ அல்லது இரண்டு பகுதி நேரப் பணியிலோ இருக்க வேண்டும். அதன் பின்னர் நிரந்தரக் குடியுறிமை பெற்றுக் கொள்ளலாம். 2018 ஜனவரியில் இங்கே குடியேறிய போது, இந்நகரம் அளவுக்கு மீறி அமைதியாக இருப்பதாகத் தோன்றியது. தவறு அடிலெய்ட் மீதல்ல. இங்கே வருவதற்கு முன்பு கோலாலம்பூரில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வசித்திருந்தோம். எங்கு பார்த்தாலும் வானுயரக் கட்டிடங்கள், திரும்பின பக்கமெல்லாம் மால்கள், அகலமான சாலைகளில் விரையும் கணக்கிலடங்காத வாகனங்கள் என மலேசியத் தலைநகரின் பரபரப்பான வாழ்க்கை பழகிவிட்டிருந்தது. அடிலெய்டின் அமைதி அவ்வளவாகப் பிடிக்கவில்லை. தவிர மலேசியா வந்த பின் நாங்கள் மறந்து போயிருந்த ஒன்றையும் அங்கே அனுபவிக்க நேர்ந்தது. அது, பெரும்பாலான கடைகள் மாலை 5.30 மணிக்கே மூடி விடுவது. இந்த வழக்கத்தை இங்கிலாந்திலும் அனுபவித்திருந்தோம். ஜனவரி இங்கே கோடைகாலம், எனவே இரவு 8.30 மணி வரை வெளிச்சம் இருந்தது ஆனால் கடைகள் இல்லை. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. கோலாலம்பூரில் வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் மழை பெய்யும், மிதமான வெய்யில் இருந்தாலும் அடிக்கடி மழை பெய்வதால் அவ்வளவாக வெக்கை தெரியாது. ஆனால் அடிலெய்டில் காற்றில் மிகக்குறைவான ஈரப்பதம் காரணமாகத் தோல் வரண்டு போனது, கண்கள் எரிந்தன, தலைவலி உண்டாயிற்று. வெய்யில் வேறு 40 டிகிரிகளுக்கு மேல் கொளுத்தியது. மதிய நேரத்தில் வெய்யிலில் பத்தடி நடப்பது கூடக் கடினமாக இருந்தது. உபர் சேவையும் அதிகம் செலவு வைப்பதாக இருந்தது (குறைந்தபட்சக் கட்டணம் AUD 8) . இது போக எது வாங்கினாலும் மனது தன்னிச்சையாக‌ மலேசிய ரிங்கெட்டில் கணக்கிட்டு, அய்யோ, இது மலேசியாவிலே எவ்வளவு விலை குறைவானது என அலறியது. 

இங்கிலாந்திலிருந்து மலேசியாவிற்கு வந்தபோதும் இது போலவே எங்களுக்குக் கோலாலம்பூரைப் பிடிக்கவேயில்லை. ஆனால் இந்த ஐந்து வருடங்களில் கோலாலம்பூர் மனதிற்கு மிகவும் நெருக்கமான நகரமாக மாறிவிட்டிருந்தது. நிறைய நண்பர்கள், நல்ல வேலை, இந்தியாவிற்குச் செல்வது மிகவும் எளிது, நல்ல சீதோஷ்ணநிலை, இந்தியாவிலிருந்து அப்பவுக்கும், அக்கா, தங்கைகளுக்கும் வந்து செல்வது எளிதாக இருந்தது. அடிலெய்டில் யாரையும் தெரியாது. சில நண்பர்கள் சிட்னியிலும் மெல்பெர்னிலும் இருந்தார்கள். வேலை இனிமேல்தான் தேட வேண்டும். பெரும்பாலான வேலைகள் சிட்னியிலும் மெல்பெர்னிலும் ம‌ட்டுமே இருந்தன. முன்னரே குறிப்பிட்டது போல், எங்களுடைய விசா கட்டுப்பாடுகளால் எங்களால் தெற்கு ஆஸ்திரேலியாவைத் தவிர வேறெங்கும் வசிக்கவோ, வேலை செய்யவோ முடியாது.  தெற்கு ஆஸ்திரேலியா வேலை வாய்ப்புகள் மிகக் குறைவான‌ மாநிலம். மாநில வளர்ச்சி விகிதம் தேசிய சராசரியை விடக் குறைவு, வேலை வாய்ப்பின்மை தேசிய சராசரியை விட அதிகம். மக்கள்தொகையைப் பொருத்தவரையில் ஒரு காலத்தில் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய நகரமாக இருந்தது, இன்று ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது.  ஒரு விதத்தில், வாழ்ந்து கெட்ட நகரம்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் வேறு நகரங்களுக்கும் வேலைக்குச் செல்ல முடியாது, ஏனென்றால் தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலைடைத் தவிர வேறு நகரங்களே இல்லை. மொத்தமுள்ள 17 லட்சம் தெற்கு ஆஸ்திரேலியர்களில் 13 லட்சம் பேருக்கு மேல் அடிலைட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர். சமீபத்தில்தான் நிறைய வேலைவாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்திருந்தன. விபரங்களை இங்கே காணலாம். இதை எல்லாவற்றையும் விட பெரிய பிரச்சினை என் மகளைப் பள்ளியில் சேர்ப்பதில் வந்தது. என் மகளுடைய பிறந்த தினம் மே 10. 2018 ல் அவள் 4 வயது பூர்த்தி செய்வாள். தெற்கு ஆஸ்திரேலியாவைப் பொறுத்த வரை குழந்தைகளுக்கு ஏப்ரல் 30ம் தேதிக்குள் 4 வயது முடிந்திருந்தால் அந்த வருடம் ஜனவரியிலேயே Preschool அல்லது Kindergarten எனப்படும் பாலர் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். மே ஒன்றாம் தேதி என்றால் கூட அடுத்த வருடம் ஜனவரியில்தான் அட்மிசன். மகள் ஒரு வருடம் கழித்து பள்ளி செல்வதில் பிரச்சினையில்லை. ஆனால் அதுவரை childcare centre எனப்படும் குழந்தைகள் காப்பகத்தில் விடவேண்டும். அதற்கு தினமும் AUD 110 (INR 5500) கட்ட வேண்டும். நிரந்தரக் குடியேறிகளுக்கும், குடிமகன்களுக்கும் அரசாங்கம் இதில் பெரும்பகுதி கட்டிவிடும். மீதம் மட்டும் அவர்கள் கட்டினால் போதும். எங்களுடைய விசாவிற்கு இந்தச் சலுகை கிடையாது. முழுவதையும் நாங்களே கட்டவேண்டும். மேலும் இந்த விசாவிற்கு அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் Medicare எனப்ப்படும் medical insurance கிடையாது. அதற்காகத் தனியார் இன்சூரன்ஸ் வாங்க வேண்டியிருந்தது. மொத்தத்தில், எல்லாம் சேர்ந்து, ஏண்டா மலேசியாவை விட்டு வந்தோம் என எண்ண வைத்துவிட்டது. தொலைந்து போக முடியாத அடிலெய்ட் வீதிகளில் தொலைந்து போனவர்களைப் போல் உணர்ந்தோம்.

0 கருத்துகள்: